காலம் என்ற சிற்பி நம்மைச் செதுக்குகிறான். நாம் சிற்பம் ஆகப்போகிறோமா? சிதறி விழும் கற்களாக ஆகப்போகிறோமா? சிற்பமாகத்தான் ஆக வேண்டும்.

உளியின் வலிக்குப் பயந்த கல், சிற்பமாக முடியாது; துளையிடப்பட்ட மூங்கில்தான் புல்லாங்குழல் ஆகமுடியும். சுடப்படாத தங்கம் சுடர் விட முடியாது; அடிக்கப்படாத இரும்பு ஆயுதம் ஆக முடியாது; உருளுகின்ற கற்கள்தான் உருண்டையாக முடியும்.

சரித்திரம் படிப்பது மட்டும் முக்கியமன்று; சரித்திரம் படைக்கவும் வேண்டும். தடம் பார்த்து நடப்பது மட்டுமன்று; நாமே புதிய தடம் பதிக்க வேண்டும். உலகத்தைப் பார்த்து நாம் வியப்பது முக்கியமன்று; உலகம் நம்மைப் பார்த்து வியக்க வேண்டும்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் உயிரோடு வாழ்வது மட்டும் வாழ்க்கையன்று; உயிர்ப்போடு வாழ வேண்டும். இப்படிப்பட்ட இலக்கணங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்தான் தியாகச்சீலர் கக்கன்ஜி அவர்கள். பெருந்தலைவர் காமராசரைப்பற்றிய நூலை எழுதிய, நான் அவருடைய தொண்டரான கக்கன்ஜி அவர்களைப்பற்றியும் புத்தகம் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதைத் தூண்டி எழுதப் பணித்தவர் சென்னை மதுரா டிராவல் உரிமையாளரும் மனிதநேய மாமனிதருமான ஐயா வீ.கே.டி.பாலன் அவர்கள். நான் எழுதிய காமராஜ் பெருந்தலைவர் எனும் நூலை வெளியிட்டவரும் அவர்தான். கக்கன்ஜி பற்றிய இந்த நூலை வெளியிடுபவரும் அவர்தான். வணிக நோக்கமின்றி தனது தேசியக் கடமையாக அவர் இதைச் செய்து கொண்டிருக்கிறார்,

நான், கக்கன்ஜிபற்றி நூல் எழுத தகவல்களைத் திரட்டத் தொடங்கிய போது அது அவ்வளவு கடினமானது அன்று என நினைத்தேன்; ஆனால், அது மிகவும் கடினமாகவே அமைந்தது. அந்தத் தேடலில் கிடைத்த கசப்பான அனுபவங்களையே தனி நூலாக எழுதலாம்.

சென்னை கன்னிமாரா நூலகத்தில் கைவிரிப்பு, சென்னை ஆவணக்காப்பகத்தில் ஏற்பட்ட அவமானம், ‘பிற நூலகங்களிலும், அவரைப்பற்றிய நூல் இருக்கலாம், தேடி எடுத்துக் கொள்ளுங்கள்’ என்ற அலட்சியமான பதில்கள், இன்னும் எத்தனை எத்தனையோ

நண்பர் சர்தார் கொடுத்த, கணபதி என்பவர் எழுதிய சிறு புத்தகம், தும்பைப்பட்டி கக்கனின் மணி மண்டபத்தில் உள்ள ஒரே ஒரு புத்தகத்தின் நகல், (முனைவர் அரங்க சம்பத்குமார் எழுதியது) வேறு சில சிறு சிறு கட்டுரைகள், சர்வோதய இதழ்களில் சேகரித்த சில செய்திகள், தும்பைப்பட்டி கிராமம் சென்று, கக்கன்ஜி அவர்களின் உறவினர்களிடம் கேட்டறிந்த செய்திகள், .பொ.சி எழுதிய விடுதலைப் போராட்டத்தில் தமிழகம் என்ற நூலில் கிடைத்த செய்திகள், திரு.முக்தா சீனிவாசன் எழுதிய ஒரு கட்டுரை, வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் பொன்னு சர்வோதய இதழில் எழுதியிருந்த கட்டுரை, திருமதி.சரளா, கக்கன்ஜி பற்றி செய்திருந்த எம்ஃபில் ஆய்வு, பேராசிரியர் ரேவதிகிருபாகரன் தந்த சில குறிப்புகள், இப்போது மதுரையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கக்கன் அவர்களின் தம்பி வடிவேல் வழங்கிய சில தகவல்கள், கக்கன் அவர்களின் மகள் க.கஸ்தூரிபாய் வழங்கிய நினைவலைகள், கக்கன் நூற்றாண்டு விழா மலர், இப்படித் தேனீயாகத் தகவல்களைச் சேகரித்து, இந்த நூலை வழங்கியிருக்கிறேன்.

யார்யாருக்கோ நூல்கள் உள்ள இந்த நாட்டில் தன்னலமற்ற தேசத்தொண்டர் கக்கன்ஜிபற்றி அதிக நூல்கள் இல்லையே என்பதுதான் எனது ஆதங்கம்.

நூலாக்கத்தில் உதவிய பேராசிரியர் ரேவதிசுப்புலட்சுமி அவர்களுக்கும், எழுதத்தூண்டிய, பதிப்பித்து வெளியிடுகிற ‘’கலைமாமணி’’ வீ.கே.டி. பாலன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

thumb.php

இவண் இளசைசுந்தரம்,

மதுரை வானொலி முன்னாள், இயக்குநர்,

நிர்மல் BS-3, அக்ரிணி குடியிருப்பு,

மதுரை– 625 003.மின் அஞ்சல்

http://ilasaisundaram.com/

humourkingilasai@yahoo.com

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book