100

மிக எளிய குடும்பத்தில் பிறந்த கக்கன், தமது பனிரெண்டாவது வயதில் பண்ணை வேலைக்குச் சென்று பின்னர் கல்வியில் ஆர்வம்காட்டி படிப்படியாக மாவட்ட ஆட்சிக்குழு உறுப்பினர், மாநில காங்கிரஸ் தலைவர், அரசியல் சட்ட அமைப்புச் சபை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர் என்று மிகப்பெரிய பொறுப்புகளை வகித்தபோதும், பின்னால் அப்பதவிகளை இழந்து வறுமையில் வாடியபோதும் தமது வாழ்க்கைப் பாதையில் தடம் புரளாமல், பொருள் ஈர்ப்பின் மீது சலனம் கொள்ளாமல் வாழ்ந்து காட்டிய பெருமை கக்கனுக்கு உண்டு. எனவே அவரது வாழ்க்கை நமக்குப் பாடமாக அமைந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.

ஆனால், காந்தியைப் பின்பற்றி நடந்த ஒரு வினோபாவயைப் போல, இராமகிருஷ்ண பரமஹம்சரைப் பின்பற்றி நடந்த விவேகானந்தரைப் போல, கக்கனைப் பின்பற்றி நடக்க யார் உள்ளனர்? என்ற கேள்வியையும் சிலர் எழுப்புகின்றனர்.

மேலும் இவர் தமக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட செய்து கொள்ளாமல் இருந்ததையும் தமது சொந்த வாழ்க்கையைப்பற்றிய எதிர்கால சிந்தனையின்றி வருவாயில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டை மீதம் செய்யாமல் வாழ்ந்ததையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவர் அடிப்படை வசதிகளைப் பெற்று வாழ்ந்ததாகக் கொண்டாலும் இவரது உண்மையான அரசியல் நேர்மைத் தொண்டினைக் குறைசொல்ல வாய்ப்பில்லை. அதனால், தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற காப்பின்றி வாழ்ந்தார் என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும் என்றும் ஒருசிலர் வாதிடுகின்றனர்.

பொதுவான பொருளியல் சிந்தனை கொண்ட வாழ்க்கை நடைமுறையில் மேற்கண்ட விவாதம் ஏற்றுக்கொள்ளத் தக்கதுதான். ஆனால், பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையிலும், கொண்ட பதவியால் எவ்வித பலனும் அடையக்கூடாது என்ற கொள்கையும், அரசு வழங்குகிற ஊதியத்தில் தம்மால் என்னென்ன வசதிகள் செய்து கொள்ள முடியுமோ அவற்றை மட்டுமே செய்து கொள்ள வேண்டும் என்ற பிடிவாதமும் கொண்டிருந்தார். பொருள் ஈட்டும் அடிப்படையில் தமது வாழ்க்கையைச் சிந்திக்கவில்லை. பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து, செல்வந்தராக வாழ்வதைவிடக் கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேல் என்று

பழிமலைந் தெய்திய ஆக்கத்தின் சான்றோர்

கழிநல் குரவே தலை”

என்ற வள்ளுவரின் வாக்கை அவர் உணர்ந்திருந்ததாகத் தெரிகிறது. மேலும் ஆள்பலத்தைக் காட்டி அரசியல் நடத்தும் பழக்கம் இல்லாததாலும், தம்மோடு பிறர் சேர்ந்தால் தமக்குக் களங்கம் கற்பித்து விடுவார்கள் என்று அஞ்சியதாலும் தனித்தே வாழ்ந்து பண்பாடு நிறைந்த அரசியல் வித்தகராக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். Mr. Gandhiji what is your message? என்று கேட்டபோது காந்தியடிகள் My life is my message என்றார். இந்தத் துணிச்சல் எத்தனைப் பேருக்கு வரும்?. ஒருவேளை கக்கனைக் கேட்டிருந்தால் அவரும் இதே பதிலைச் சொல்லியிருப்பாரோ? காரணம், இச்செய்தி கக்கனுக்கும் நூற்றுக்கு நூறு விழுக்காடு பொருந்துகிறது என எண்ணும்போது மிகச் சிறந்த ஒரு காந்தியவாதியைக் காணமுடிகிறது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலார், தமக்குப் பின் எவரையும் அடையாளம் காட்டவில்லை, “எனது வாழ்க்கையே உங்களுக்குப் பாடம்” என்ற காந்தியடிகளும் தமக்குப்பின் எவரையும் அடையாளம் காட்டவில்லை. அதுபோலவே கக்கனும் தன்னலமற்ற தத்துவ வேள்வியில் தாமே ஒளியானாரே தவிர வேறு எவரையும் அடையாளம் காட்டவில்லை. ஆக, இன்றைய அரசியல்வாதிகளின் வாழ்க்கை நடைமுறையிலிருந்து இவரது வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டே காணப்படுகிறது. கொண்ட கொள்கையில் தளராத பிடிப்பு, கலங்கமற்ற அரசியல் நடைமுறை, அதிகார விளிம்பிற்குள்ளேயே நின்று செயல்படும் ஆளுமைத்தன்மை, மக்களால் வழங்கப்படும் பதவியின் பெயரால் செய்யப்படும் அனைத்துச் செயல்களும் நாட்டின் வளர்ச்சிக்கும் சமுதாய மேம்பாட்டிற்கும் பயன்பட வேண்டும் என்ற பொது நோக்கு இவை அனைத்தும் ஒருங்கே பெற்ற கறை படாக் கரத்திராக கக்கன் வாழ்ந்து காட்டினார் என்பதே மக்களின் தீர்ப்பு.

எதிர்கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் கூட இவரைக் கறைபடாக் கரத்தினர் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சிறப்பும் புகழும் பல தலைவர்களால் பொது மேடைகளில் மக்களுக்கு எடுத்துக்காட்டப்படுகின்றன. எனவே, இந்த மண்ணுலகில் அவரது உடல் மறைந்து விட்டாலும் அவரது நேர்மையால், உண்மையான தொண்டால் இன்றும் மக்கள் மனங்களில் கக்கன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book