97

கிட்டத்தட்ட நடமாட்டம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு உடல் நலம் குன்றிய நிலையிலிருந்தார் கக்கன். உதவி என்ற அளவில் தன் மனத்தை வடிவமைத்துக் கொள்ள இயலாத பலர் கக்கனின் இயலாமையால் ஏற்படும் முன்கோபத்தினைத் தாங்க முடியாமல் ஓடிப்போய் விட்டனர். அந்தக் காலக்கட்டத்தில் தான் விஜயன் கக்கனைச் சந்தித்தார். வேலை ஏதேனும் வாங்கித் தந்து உதவுவார் என்று எண்ணி வந்த விஜயனே கக்கனுடன் இருந்து உதவ வேண்டியதாகி விட்டது.

மதுரை மேலூர் வட்டப் பொய்கைப்பட்டியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் மாணிக்கம் பிள்ளையின் பேரன் தான் இந்த விஜயன். இவர் 1978ஆம் ஆண்டு முதல் கக்கனின் இறுதிக்காலம் வரை இருந்து உதவினார். நெருங்கிய உறவினர்கள், ஈன்ற பிள்ளைகள் போன்றோர் கூடச் செய்ய மனம் சுளிக்கும் செயல்களை அருவருப்புப்படாமல் செய்து கக்கனைக் கவனித்துக் கொண்டார். தம்மை இலவச அரசினர் விடுதியில் சேர்த்து பள்ளிப்படிப்பைத் தொடர உதவியவர் இவர்தாம் என்று சொல்லிக் கொண்டே கக்கனுக்குப் பணிவிடை செய்தவர் விஜயன். கக்கனின் பிள்ளைகள் விஜயனைத் தமது வீட்டுப் பிள்ளையாகவே இன்றும் கருதி வருகின்றனர். இவர் தற்போது தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபத்துறையில் பணியாற்றி வருகிறார். கக்கன் தமது கல்விக்குச் செய்த உதவியை அடிக்கடி நினைவு கூர்வதைப் பார்க்கிறபோது “ஒன்று விதைத்தால் ஒன்பது விளையும்” என்னும் பழமொழி நினைவுக்கு வருகிறது.

அறுபதாம் கல்யாணம் நடத்திய திரு. எம். பக்தவச்சலம்

அமைச்சரவையில் தம்மோடு அமைச்சராக இருந்தார் என்பதோடு மட்டுமல்லாமல் கக்கனைத் தம் நண்பராகவும் கொண்டிருந்தார் பக்தவச்சலம். திருப்பதியில் பக்தனுக்கு அறுபதாம் கல்யாணம் நடத்த முடிவு செய்திருப்பதை அறிந்த திரு. பக்தவச்சலம் குடடும்பத்துடன் வந்திருந்த அந்நிகழ்ச்சியை முன்னின்று நடத்தி வைத்தார். தங்கத் தாலி, தாலிக் கொடி, அன்பளிப்பு வழங்கி நடத்தி வைத்ததைக் கக்கனின் பிள்ளைகள் நன்றியோடு நினைவு கூர்கின்றனர். மணிவிழா நடத்த பொருளும், பொதுமக்களும் இல்லாத சூழ்நிலையில் திரு. பக்தவச்சலம் செய்து வைத்த இந்நிகழ்ச்சி இறை நம்பிக்கையுடைய கக்கனின் இதயத்திலிருந்த இன்னலை நீக்கியது.

இறுதி வரை துணை நின்ற இன்முக சசிவர்ணத் தேவர்

சிவகங்கை மன்னர் மாளிகையோடு மிக நெருங்கிய உறவுடைய சசிவர்ணத் தேவர் கக்கனின் இளமைக்காலம்முதல் நண்பராக இருந்தார். கக்கனின் திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்ட இவர் கக்கனின் உயர்வுகளுக்குப் பல்வேறு நிலைகளில் துணை நின்றிருக்கிறார். கக்கனின் ஒரே மகள் கஸ்தூரியின் திருமணத்திற்கு இரு வீட்டாருக்கும் இடையில் பாலமாக இருந்து திருமணத்தைச் சிறப்பாக நடத்தியவர். அரசியல் உயர்வுகளில் உதவிய திரு. மருதய்யா, திரு. கண்ணய்யா, சீனி செட்டியார், வேணு கோபால் செட்டியார் போன்றவர்களைப் போல் கக்கனின் குடும்ப ஆலோசகராக இருந்து உதவியவர்.

நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது கூட எளிது; ஆனால் உயிரைக் கொடுக்கக்கூடிய அளவுக்குத் தகுதி உடைய நண்பன் கிடைப்பதுதான் அரிது”

அறிஞர் கதே

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book