95

ரு தனிமனிதனின் தொண்டு மதிக்கப் படுமேயானால் அவரை நினைந்து மதிக்கும் பொருட்டு அவரது உருவம் பொறித்த அஞ்சல்தலை வெளியிடுவது நடுவணரசின் அஞ்சல்துறை செய்யும் சிறப்பான பணிகளுள் ஒன்று. நடுவணரசு அல்லது பொது நிறுவனங்கள் அல்லது அரசியல் கட்சிகள் அந்தத் தனிமனிதனை அடையாளம் காட்ட வேண்டும். அப்போது தான் பரிந்துரை செய்யும் குழுவில் பரிந்துரையின்படி அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது.

எப்படித் தேர்வு செய்து வெளியிடுகிறார்கள் என்பது இங்குப் பொருத்தமில்லாத செய்தியாகத் தோன்றலாம். ஆனால் எந்த அரசும், எந்த அரசியல் கட்சியும், எந்தப் பொதுத் தொண்டு செய்யும் நிறுவனமும் கக்கனின் உண்மையான பொதுத் தொண்டினை நடுவணரசிற்கு அடையாளம் காட்டிக் கக்கனின் நினைவாக அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்ததாகத் தெரியவில்லை. இப்படிப் பலரும் செய்ய மறந்து போன செயலைக் கக்கனின் நான்காவது தம்பி பி.வடிவேலு செய்திருக்கிறார். அவருக்கு இருக்கும் அரசியல் தொடர்புகளைக் கொண்டு அப்போதைய இந்திய நாட்டின் குடியரசுத்தலைவர் மேதகு கே. ஆர். நாராயணன் அவர்களுக்கு விண்ணப்பித்து நேர்முக வேண்டுகோளும் கொடுத்து, தம் அண்ணன் கக்கனின் நினைவு அஞ்சல்தலை வெளிவரப் பாடுபட்டிருக்கிறார். அதன் விளைவாகப் புதுடெல்லியில் இருக்கும் அஞ்சல் துறை உதவி இயக்குநர் (பொது) 17.01.1999 நாளிட்ட கடித எண் 16-123/99-PHIL மூலம் வடிவேலு அவர்களுக்கு அரசின் ஒப்புதலைத் தெரிவித்தார்.

அண்ணனுக்கு அஞ்சல் தலை வெளியிடுவது குறித்து அவரது தம்பியே முயன்றதில் ஒரு தன்னலம் இருப்பது போல் சிலருக்குத் தோன்றும். ஆனால், உண்மையான இந்திய விடுதலைப் போர்வீரனுக்கு இதுநாள் வரை நன்றி செய்ய மறந்து போன செய்தியை இப்படியொரு முயற்சியைச் செய்து நாட்டின் தன்மானத்தைக் காத்த பெருமை வடிவேலுக்கு உண்டு. ஆனால், அத்துணைப் பெருமையும் அப்போதையஇந்தியக் குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணனையே சாரும் என்று அஞ்சல் தலை வெளியீட்டு விழா நன்றியுரையில் கூறியது பலருக்கும் வடிவேலுவின் பால் இருந்த மதிப்பை மேலும் உயர்த்தியது.

சென்னை அஞ்சல்துறை உதவி இயக்குநர் 09.12.99 நாளிட்ட கடிதஎண் PHIL /2-380/99இல் ஏதேனும் வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்கிறீர்களா? என்று வடிவேலுவைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க கடிதத்தின் நகலை அவர் சார்ந்திருக்கும் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் தலைவர் திரு.ஜி.கே.மூப்பனார் அவர்களுக்கு அனுப்பி வைத்தார்.

திரு. மூப்பனார் அவர்கள் மணமுவந்து விழாவிற்கு ஏற்பாடு செய்தார். கக்கனின் ஒரே மகளான கஸ்தூரி சிவசுவாமி (தமிழ் மாநிலக் காங்கிரஸ் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் மாநிலத் துணைத் தலைவர்), வடிவேலு (.மா.கா.மாநிலச் செயற்குழு உறுப்பினர்) மற்றும் கக்கனின் குடும்பத்தினர் பலரும் கலந்து கொள்ளும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள “காதி கிராமோத்பவனில்” தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறைத்தலைவர் திரு.எஸ்.ஜெயராமன் அவர்கள் கக்கன் நினைவு அஞ்சல் தலையைக் கொடுக்கத் திரு.ஜி.கே.மூப்பனார் அவர்கள் 09.12.1999 ஆம் நாள் வெளியிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்தி நடராசன், பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே. பாரமலை, டி.பி. ஏழுமலை ஆகிய தலைவர்களும் பல சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அதே நாளில் வைத்தியநாத அய்யர் அவர்களுக்கும் சென்னைத் தியாகராயர் நகரிலுள்ள அரிசன சேவாசங்க வளாகத்தில் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book