93

ந்திய விடுதலைக்குப்பின் திரையுலகம் செய்த செயல்களால் பல்வேறு அரசியல் தலைவர்களின் பெருமை மக்கள் மன்றத்தில் பதிவு செய்யப்பட்டன. மகாத்மா காந்தியடிகள், வீரசவார்கர், ஜி.பி. பந்து, பகத்சிங் போன்ற விடுதலை வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படமாக்கிய வட இந்தியத் திரையுலகும், விடுதலைக் கவிஞர் பாரதி, கப்பலோட்டிய தமிழன் வ..சிதம்பரனார், கொடிகாத்த திருப்பூர்க்குமரன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டியர் போன்றோரின் வரலாறுகளைப் படமாக்கிய தென்னிந்தியத் திரையுலகும் செய்த சேவைகளை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. திரையுலகம் என்ற ஒன்று இருக்கும் வரை அந்த வரலாற்றுத் திரைப்படங்கள் அந்தந்தத் தலைவர்களின் நினைவுச் சின்னங்களாகவே நிலைத்திருக்கும். அதுபோலக் கக்கனின் வாழ்க்கை வரலாற்றில் அவர் கடந்து வந்த புனிதப் பாதையை எடுத்துக்காட்டித் திரைப்பட நினைவுச் சின்னத்தை உருவாக்கிய திரையுலகின் இயக்குநர் திலகங்களான திரு.பி.வாசு, திரு.சேரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். எவ்விதத் தன்னலம், திரையுலகிற்கே உரித்தான வணிகச் சிந்தனை ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டுப் பொதுவாழ்வில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே கக்கனை அடையாளம் காட்டியுள்ளதைப் பலரும் போற்றுகின்றனர். அவ்வாறு அடையாளம் காட்டிய திரைப்படங்களும் குறிப்பிடத்தக்கன. ‘வால்டர் வெற்றிவேல்’ திரைப்படத்தின் இயக்குநர் பி.வாசு அவர்கள் அப்படதில் வரும் ஒரு கதைமாந்தரின் உருவம், உடை ஆகிய அனைத்திலும் கக்கனைச் சித்தரித்துக் காட்டியிருக்கிறார் என்பது பலராலும் பேசப்படுகிறது.

திரைப்பட இயக்குநர் திரு. சேரன் அவரது ‘தேசிய கீதம்‘ என்ற படத்தின் வசனத்தில் கூடக் கக்கனின் பெயரை உச்சரிக்க வைத்து நேரடியாகவே மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார். அப்படத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட கதை மாந்தரை ‘முன்னாள் அமைச்சர் கக்கனை எண்ணியே படைத்தேன்’ என்று மதுரை மேலூர் மண்ணுக்குச் சொந்தக்காரரான சேரன் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார். திரையுலகால் அடையாளம் காட்டப்பட்ட அரசியல் தலைவர்கள் வரிசையில் கக்கனும் இடம் பெற்றிருக்கிறார், என்பதை விடப் பொது வாழ்வில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கின் நாயகனாக அடையாளம் காட்டப்பட்டிருப்பது திரையுலகம் கக்கனுக்குச் செய்த பெருமை என்று கொள்ள வேண்டும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book