91

ஜூனியர் விகடன் 29.6.1988 இதழில், “கக்கன் இறந்த பின்பு அவரது நெருங்கிய நண்பரான மழுவேந்தி மேலூரில் கக்கனுக்குச் சிலை அமைக்க விரும்பிப் படாத பாடுபட்டார். கட்சி அமைப்புகள் மூலம் பணம் வசூலிக்காமல் தம் சொந்தப்பணம்போட்டும் தாமே முன்வந்து நிதி தந்த கிராமமக்களிடம் சிறுகச் சிறுக நிதிவசூலித்தும் தயார் செய்து விட்டார். சிலை செய்தால் போதுமா? திறப்புவிழாவிற்குப் பெரிய “தலை” ஒன்று வேண்டுமே?

(உருவாக்கப்பட்ட சிலை மூடியநிலையில் அங்குமிங்குமாகக் கட்டப்பட்டுக் கிடந்தது)

அவ்வயம், நல்லவேளையாய்த் தமிழ்நாட்டுக்குத் தேர்தல் சுரம் வந்திருந்தது. அதனால், கக்கன் சிலைக்கு அடித்தது யோகம். கிடைத்தது சாபவிமோசனம்! பாரதப்பிரதமரே படைப்பட்டாள பரிவாரங்களுடன் ஈரோடு, கோவை, பழநி, திண்டுக்கல் பகுதிகளில் ஒரு தேர்தல் ஒத்திகை (ரவுண்ட் அடிப்பை) முடித்துக் கொண்டு சிலை திறப்பு விழாவுக்காக மதுரையை அடுத்த மேலூர் வந்து சேர்ந்தார். சிலை நிறுவப்பட வேண்டிய இடத்தில் சிலை இல்லை. சில கிலோ மீட்டர் தூரத்தில் ஓர் அரசுக் கல்லூரி மைதானத்தில், தற்காலிகப் பீடம் ஒன்றில், விழா மேடை அருகே சிலை காத்திருந்தது.

பிரதமர் வருவதற்கு முன்னர் மேடையில் சிவகங்கைச் சேதுராசனின் அரசியல் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. பிரமாண்டமான விழாமேடை அருகில் சென்று தேடிப்பார்த்தோம். கக்கன் படத்தையே காணோம். காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம் “ஏங்க, கக்கன் படம்

ஓண்ணுகூடக் கிடைக்கலையா? என்றதும் ‘கிடைக்கலீங்கஎங்க கமிட்டி ஆபிஸ்ல கூட இல்லையே, என்ன பண்றது?’ என்றார் மிகவும் சங்கோஜத்தோடு.அப்போது கக்கனின் மகள் கஸ்தூரி தம் குழந்தைகளுடன் தம் தந்தை சிலை திறப்பைக் காண வந்தார். போலீஸார் அவரை உள்ளே விடாமல் வழி மறித்தனர். கக்கன் மகள் மெல்லச் சொல்லிப் பார்த்தார். அப்படியும், ‘பாஸ் வேணும்…. பாஸ் இல்லாட்டி யாரையும் விடக்கூடாதுன்னு உத்தரவு’ என்று போலீஸ் வழக்கமான பாட்டைப் பாடிக் கொண்டிருக்கும் போது, வி..பிக்கள் வரிசையில் பாஸுடன் இருந்த ஒரு முன்னாள் எம்.எல்.ஏவின் கார்டிரைவர் பதறிப்போய் ஓடிவந்து, ‘உள்ளே விடுங்க சார்…. அவங்க கக்கனோட மகள்’ என்று போலீஸாரிடம் சொன்ன பிறகுதான் விலகி வழி விட்டனர்.

சுமார் ஏழு மணியளவில் ராஜீவ், சோனியா சகிதமாகப் பிரசன்னமானார். பின்னால் இருந்த நாற்காலியிலிருந்து சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே இருந்த மூப்பனார் சட்டென்று எழுந்து வந்து, கக்கன் சிலையருகே அமர்ந்திருந்த கக்கன் குடும்பத்தினரைப் பிரதமருக்குக் கைநீட்டிக் காண்பித்தார். ராஜீவ் உற்சாகமாய் அவர்களை நோக்கி கையசைத்தார். சரியாக 7.10க்குப் பேசத்துவங்கிய ராஜீவ் ஒரு மணிநேரம் பேசினார். சில நொடிகள் கக்கன் பற்றியும், மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் பற்றியும் குறிப்பிட்டுவிட்டு உரையை முடித்துக் கொண்டார். கோலாகலமாக விழாவும் முடிந்தது. வரும் வழியில் ஏராளமான போஸ்டர்கள். ஒன்றில் கூடக் கக்கன் படமே இல்லை. ஒரே ஓர் இடத்தில் அதுவும் காங்கிரஸின் தாழ்த்தப் பட்டோர் பிரிவின் அமைப்பாளரான பாரமலை, தனிப்பட்ட முறையில் அடித்திருந்த போஸ்டரில் கக்கனின் சிறிய படம் ஒன்று இருந்தது.

இப்படி நடந்தேறிய சிலை திறப்பு விழா பல பத்திரிகைகளின் விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்தாலும் நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது.

மேலூரில் சிலை திறப்பு நடந்து பல ஆண்டுகளுக்குப் பின் கக்கனுக்கு மதுரை மாநகரில் சிலை திறக்கும் தீர்மானத்தைத் தமிழக அரசு கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் அன்றைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் 18.10.95 ஆம் நாள் ஓர் அரசாணையை வெளியிட்டார். அந்த ஆணைப்படி சிலையும் செய்யப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அச்சிலை நிறுவப்படவில்லை. இதற்குப் பல்வேறு காரணங்களும் கட்டுக்கதைகளும் வெளியாயின. ஆனால் எந்த அரசியல் தலைவர்களும் இது குறித்து, அரசைக் கட்டாயப்படுத்த முன்வரவில்லை என்று கூறுகின்றனர். எனவே செய்த சிலை அப்படியே இருப்பதற்கான கேள்விக்கு விடை தெரியாத போது மக்கள் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து 25.5.97 ஆம் நாளிட்ட ராணி வார இதழ் வெளியிட்ட செய்தி இதோ!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book