9

விடுதலை இயக்கப்பணிகளுக்காகப் பல இடங்களுக்குச் செல்லும் போது அங்கெல்லாம் கல்வி இல்லா நிலையையும், கல்வி கற்க ஆர்வமிருந்தும் படிக்க வசதி இன்மையால் வாடும் குழந்தைகளையும் கண்ட கக்கன், 1940-41ஆம் ஆண்டு பள்ளி மாணவர், மாணவியர் விடுதியைத் தொடங்கினார்.

விடுதலைப் போர் தீவிரமாக இருந்த காலமாதலால் விடுதியைக் கண்காணிக்கத் திரு.செல்லப்பா அவர்களைத் துணைக்கு வைத்துக்கொண்டு தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டார். ஐந்து மாணவிகள் என்ற அளவில் தொடங்கி, நன்கொடை வழங்கும் பேருள்ளம் கொண்ட பெரியோர் பலரின் உதவியால் அந்த விடுதியை நடத்தி வந்தார். கக்கனின் தோழர்களான மதுரை மேலூர்த் தங்கச்சாமிஅம்பலம், கருப்பண்ணஅம்பலம், கீழையூர் மோ.மா.ஆகியோர் உதவியோடு ஏற்பாடு செய்திருந்த அரசாங்க கட்டடத்தின் தாழ்வாரத்தில் அவ்விடுதி தொடங்கப்பட்டது. மதுரைமேலூர் பார்ப்பன மக்கள் வாழும் அக்கிரகாரத்தில் தொடங்கப்பட்டதால் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. அரிசன இனமாணவர்கள் அக்கிரகாரத்தில் வாழ்வதா? என்று அவ்வட்டார மக்கள் எதிர்ப்புக்குரல் கொடுத்தனர். தோழர்கள் உதவிக்கரம் நீட்ட எதிர்ப்புகள் நசிந்து போயின என்றாலும், நன்கொடை பெறுவதில் பல இடையூறுகள் இருந்தன.

திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியை விடுதிப்பணிகளில் ஈடுபடுத்தினார் கக்கன். பல நாள் கடன் வாங்கி பிள்ளைகளுக்கு உணவளித்தார் என்ற செய்தி பலரையும் வியக்க வைத்தது. அதனால், அரிசன சேவாசங்க நிதியுதவியைப் பெற்று விடுதியை நடத்த வேண்டியதாகி விட்டது. சில பிள்ளைகளை மட்டுமே கொண்டு தொடங்கிய விடுதி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் படிக்கும் விடுதியாக வளர்ந்துள்ளது.

இன்றுவரை அரிசன சேவாசங்க நிதியுதவியுடன்தான் நடந்து வருகிறது. இப்படிக் கக்கன் அளித்த கல்விக் கொடைக்கு ஈடுஇணை ஏதுமுண்டோ?

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book