90

க்கனின் நினைவாக எவையேனும் பெயரிடப் பட்டிருக்கின்றனவா? எங்கேனும் சிலை அல்லது நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டிருக்கிறதா? என்று எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

தமிழகத்தில் ஆங்காங்கே விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தெருக்களுக்குக் கக்கன் காலனி எனப் பெயரிடப்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் இடங்களுக்கே அப்பெயர் சூட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாட்களாகக் “கக்கன்ஜி படிப்பகம்” தொடங்கி கக்கனின் நினைவாக அந்தப் படிப்பகத்தை நடத்தி வரும் நல்லுள்ளம் கொண்ட ராஜசேகரன் என்பவரை இங்கு நினைவுகூர வேண்டும். அவர் சென்னை ஐ.சி.எப் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வாழ்ந்து வரும் வில்லிவாக்கம் பகுதியில் நடத்தி வரும் இப்படிப்பகம் தொய்வடைந்து விட்டது.

இவரைப் போல வேறு எவரேனும் நடத்தி வருகின்றனரா? என்பது தெரியவில்லை.

சென்னை மாநகரில் தலைவர்களின் நினைவாகச் சாலைகளும் புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளும் தாங்கிய சாலைகள் அல்லது குடியிருப்புப் பகுதிகள் இருக்கின்றனவா? என்ற கேள்விக்குத் தக்க விடை கிடைக்கவில்லை. எங்காவது முட்டுச்சந்துகளில் உள்ள சாலைக்கோ, குடிசைப்பகுதிகளுக்கோ கக்கனின் பெயர் சூட்டப்பட்டிருக்கும் என்று, கக்கன் தபால்தலை வெளியீட்டு விழாவில் ஒரு முதியவர் பேசியது உண்மைதானோ? என்று எண்ணத் தோன்றுகிறது. மேலும் கக்கனின் வாழ்க்கை வரலாற்றை, அரசியல் ஒழுக்கத்தைத் தனிமனிதப் பண்பினை மனதில் கொண்ட பல தலைவர்க்ள் இருந்தாலும் எவரும் கக்கனை அடையாளம் காட்ட முன்வரவில்லை என்று அந்தப் பெரியவர் கூறியதை அக்கூட்டத்திலிருந்து பலரும் ஆமோதித்தது போலவே இருந்தது.

தலைவனுக்குத் தலைவனாய், நண்பனுக்கு நண்பனாய், கக்கனின் அரசியல் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருந்த மதுரை மேலூர் மழுவேந்தி அவர்களை இங்குக் குறிப்பிட வேண்டியுள்ளது. கக்கனோடு வாழ்ந்த பலரும் கக்கனைப் பற்றி சிந்திக்காத காலத்தில் அவரது உருவச் சிலையமைக்க முடிவு செய்த மழுவேந்தியின் செயல்கள் ஒரு நட்பின் அடிப்படையில் தோன்றியது. எப்படியிருந்தாலும், வேலு அம்பலம் அவர்களைத் துணைத்தலைவராகவும் பி.விவேகானந்தம் என்பவரைப் பொருளாளராகவும், கே.எஸ்.பி.காஞ்சிவனம், பி.வடிவேலு (கக்கனின் தம்பி) பி.கே.மாணிக்கம், சு.. சொக்கலிங்கம் ஆகியோரைச் செயலாளர்களாகவும் கொண்டு ஒரு முறையான அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பிற்குத் தானே தலைவராகவும் இருந்து கக்கனின் உருவச் சிலையை ஏ.மழுவேந்தி அவர்கள் நிறுவினார்.

பல ஆண்டுகள் முயன்று மதுரை மேலூர் நகரத்தில் அதுவும் பலர் பார்வைக்குப் படும்படியான இடத்தில் அமைந்துள்ளதைப் பலரும் புகழ்கின்றனர். அவ்வாறு உருவாக்கப்பட்ட சிலை அன்றைய இந்திய தலைமையமைச்சர் (பிரதமர்) திரு. ராஜிவ்காந்தி அவர்களால் 21.06.1988 ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book