89

க்கன் அவர்கள் அப்போது தமிழக உள்துறை அமைச்சராக இருந்தார். விருதுநகரிலிருந்து காவல்துறை உயர் அதிகாரியிடமிருந்து உள்துறை அமைச்சருக்கு அவசர அழைப்பு தொலைபேசியில் வந்தது.

கனம் அமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். இங்கே பேருந்து நிலையத்தில் எதிர்பாராத விதமாக ஒரு கொலை நிகழ்ந்துவிட்டது. அதன் தொடர்பு உடையவர்கள் எனச் சிலர் பிடிபட்டிருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர் நம் முதலமைச்சரின் நெருங்கிய உறவினர் எனத் தெரிய வந்திருக்கிறது. சந்தேகத்தின் அடிப்படையில் அவர்மீதும் முறையான விசாரணையைத் தொடர்வதா? அல்லது வழக்கில் இருந்து அவரை விடுவித்துவிடுவதா?’ என்கிற கேள்வியை உயர் காவல் துறை அதிகாரி கேட்கிறார்.

உள்துறை அமைச்சரான கக்கனுக்கு இக்கட்டான நிலை. ‘சட்டப்படி வழக்கைத் தொடருங்கள். இன்னார் என்கிற தாட்சணியம் வேண்டாம் என்கிற உத்தரவைப் பிறப்பிப்பதா? அல்லது அதற்கு முன் முதல் மந்திரியிடம் இதுபற்றிக் கலந்துபேச வேண்டுமா? இக்குழப்பத்தில், அமைச்சர் கக்கன் அவர்கள் உடனே முதலமைச்சரைச் சந்திக்கிறார். ‘இதில் என்னிடம் வந்து முறையிட என்ன அவசியம்? சட்டப்படியான நடவடிக்கையை நீங்களே மேற்கொள்ள வேண்டியதுதானே?’ என முதலமைச்சர் பதில் கூறினால், சரி! அல்லது சற்று யோசித்துவிட்டு. ‘சரி அந்த ஒரு நபரை நீக்கிவிட்டு நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்’ என முதலமைச்சர் காமராஜர் கூறிவிட்டால் என்ன செய்வது?

முதலமைச்சர் காமராஜர் கூறப்போகும் பதிலைப் பொறுத்தே, இந்தப் பொறுப்பில் நாம் தொடர்வதா வேண்டாமா என்பது பற்றி நாம் முடிவுசெய்ய வேண்டியதாக இருக்கும்’. இந்தச் சிந்தனையில் கக்கன் அவர்கள், நடந்த விவரங்களை முதலமைச்சர் காமராஜரிடம் எடுத்துக் கூறுகிறார்.

எல்லாவற்றையும் கேட்ட காமராஜரோ, ‘இதில் எனது அபிப்பிராயத்தைக் கேட்க என்ன இருக்கிறது? யாராக இருந்தாலும் சந்தேகத்திற்கு உரிய நபர்களிடம் தாட்சண்யம் காட்டாமல் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியதுதான் தங்கள் கடமை’ என்கிறார்.

இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள்! மனச்சாட்சிக்கு விரோதமாக நடக்க விரும்பாத கக்கன் அவர்கள், காமராஜர் தலைமையில் தொடர்ந்து பொறுப்புகளை வகிக்கக் காரணமாக இருந்தது எந்த முடிவையும் நேர்மையான முறையில் வரவேற்கிற முதலமைச்சர் அவர்களின் சீரிய பண்புதான்.

கக்கன் அவர்கள் 1952ஆம் ஆண்டில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முறையாகத் தேர்தலில் நின்று வெற்றிபெற்றார்.

பின்னர் 1957ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் கக்கன் அவர்கள் மேலூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பான வேட்பாளராகப் போட்டியிட்டு மகத்தான வெற்றிபெற்றார். அவருக்குக் காமராஜர் தமது அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றுகிற வாய்ப்பைத் தந்தார்.

அடுத்து 1962ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் கக்கன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏற்கனவே பொதுப்பணித்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய கக்கனுக்கு இந்தமுறை காமராஜர், வேளாண்மைத்துறை அமைச்சராகப் பணியாற்றுகிற வாய்ப்பைத் தந்தார். 1963ஆம் ஆண்டு கக்கன் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பு ஏற்றார்!

இந்தத் துறையிலும் சிறப்பாகப் பணியாற்றி வந்த காலத்தில், எதிர்க்கட்சியினர் அவர்மீது ஊழல் புகார்களைச் சுமத்த முடியாத நிலையில் என்ன கூறுவார்கள் தெரியுமா? “கக்கன் அமைச்சராகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, 600 ரூபாய் படி கிடைக்கும் விதத்தில் பயணங்களைத் தொடர்வார்” என்பதே அவர்மீது பலமான குற்றச்சாட்டாக எதிர்க்கட்சியினர் சுமத்துவார்கள்.

கக்கன் அவர்கள் அமைச்சராக இருந்து கொண்டு மேடையில் அவர் பேசுகிற பாணியையும் குற்றம் சொல்வார்கள்.

எப்படி?

கக்கன் மேடை ஏறிப் பேசும்போது, மேடையில் அமர்ந்திருக்கும் முக்கியமானவர்களை மட்டுமல்லாது, ‘கூட்டத்தில் அமைதி காக்க வந்திருக்கும் காவல் துறை அதிகாரி அவர்களேமின்சாரம் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதைக் கண்காணிக்கும் மின்துறை அதிகாரி அவர்களே…’ என வந்திருக்கும் அதிகாரிகளுக்கும் நன்றிகூறிப் பேசுவார் எனக் குறை கூறுவார்கள்.

காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்த காலத்தில், காமராஜர் தலைமையில் உள்ள காங்கிரஸ் கட்சி ‘ஸ்தாபன காங்கிரஸ்’ எனவும், இந்திரா காந்தி தலைமையில் உள்ள காங்கிரஸ் ‘இந்திரா காங்கிரஸ்’ எனவும் அழைக்கப்பட்டு வந்தன.

அந்தக் காலகட்டத்தில், ராஜ்ய சபா எனக் கூறப்படும் நாடாளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சி. சுப்பிரமணியம் தேர்தலில் நின்றார். அவரை எதிர்த்து ஸ்தாபன காங்கிரஸ் போட்டியிட்டதால் போட்டி கடுமையானது, ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடையக்கூடாது எனக் காமராஜர் உறுதிபட வேலை செய்தார்.

அந்த நேரத்தில், சி. சுப்பிரமணியம் வெற்றிபெற பணம், பதவி போன்ற ஆசைகள் பெரிய அளவில் பேரமாகப் ஆட்பட்டுவிடக்கூடாது எனக் காமராஜர் பேசிவந்தார். தேர்தல் முடிவில் சி. சுப்பிரமணியம் தோற்றார்.

இந்த வெற்றியைத் தேடித்தந்த ஸ்தபான காங்கிரஸார் மன உறுதியைக் காமராஜர் வெகுவாகப் பாராட்டினார். தொடர்ந்து அமைச்சர் பதவியில் அமர்ந்து வந்த கக்கன் பதவியை இழந்த காலத்தில் மிகச் சாதாரண மனிதர்களுக்குரிய வசதிகூட இல்லாமல் வாழ்ந்து வந்தார். அந்த நேர்மை எதிர்க்கட்சியினரையும் வியக்க வைத்தது.

எந்த நிலையிலும் தமது சுயமரியாதையை விட்டுத்தராமல் நேர்மையை இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர் கக்கன் அவர்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book