87

துரை அருகே மேலூர் வட்டம் தும்பைப்பட்டி என்னும் ஊரில், வறுமையுற்ற தீண்டப்படாதார் குடும்பம் ஒன்றில் திரு. கக்கன் அவர்கள் பிறந்தார்.

ஹரிஜனங்களின் நல்வாழ்வுக்குத் தம்மை ஒப்புக்கொடுத்த ஊழியராக விளங்கியவர் மதுரை வைத்தியநாத ஐயர் அவர்கள். அவரால்தான் திரு. கக்கன் அவர்களின் கல்வியும் அரசியல் வாழ்வும் ஆக்கம் பெற்றன.

இவர் தாழ்மையான தொடக்க வாழ்க்கை நிலைகளில் இருந்து மேலே முன்னேறியவர். சாதாரண காங்கிரஸ் தொண்டரான இவர், விடுதலைப் போராட்ட காலத்தில், அனுபவம் மிகுந்த காங்கிரஸ் முன்னணித் தலைவர்களுடன் சேர்ந்து துன்பப்பட்டார். பிற்காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் உள்ளிட்ட பல முக்கியமான பதவிகளை ஏற்றார். இந்தியாவின் அரசமைப்புப் பேரவையின் (Constituent Assembly) உறுப்பினராக இவர் இருந்தார். காங்கிரஸ் கட்சி மீதும் திரு. காமராஜர் அவர்கள் மீதும் இவர் கொண்டிருந்த நன்றியும் பற்றும் அளவிட முடியாதவை; கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை.

எனக்கு எப்பொழுதுமே இனிய வரவேற்பும் கனிவான சொற்களும் அவர் வழங்குவார். எனக்கும் இவர் மீது உயர்ந்த பெருமதிப்பு உண்டு. என்னுடைய திருமணம் இவருடைய முன்னிலையில் நிகழ்ந்தது; தேவ மந்திரங்களோ, ஓம குண்டமோ இல்லாத சுயமரியாதைத் திருமணம் ஆகும்! அது,

தீண்டப்படாத வகுப்பினர்மீது இவர் கொண்டிருந்த அன்பும் அக்கறையும் எல்லையே இல்லாதவை. ஏழைகள் மீது இவர் கொண்டிருந்த இரக்க உணர்வு பொன்மொழியாய்ப் பொறிக்கத்தக்கது. வறுமையுற்ற, நலிவடைந்த மக்கள் பிரிவிலிருந்து வந்த ஒருவர் என்கிற நிலையில், அவர்களின் தாங்க முடியாத துன்பத்தின் வலிகளை இவர் நன்றாகவே அறிவார். எனவே, தம்முடைய மக்களைக் கண்ணீர் வெள்ளத்தில் காணும் போதெல்லாம் இவரும் கண்ணீர் வடித்தார்! மக்களின் மனக்குறைகளுக்குத் தீர்வுகாணத் தவறுகின்ற அதிகாரிகளை இவர் கடுமையாக வசை பாடினார். நல்ல பணிகளைச் செய்த அதிகாரிகளைப் போற்றித் துதித்தார்!

ஆதி திராவிடர் நலத்துறைப் பொறுப்பை ஏற்ற அமைச்சராகவும், காவல்துறை பொறுப்பைக் கொண்ட உள்துறை அமைச்சராகவும், பெருமகிழ்ச்சியோடும், பேரார்வத்தோடும் இவர் பணியாற்றிச் சிறந்தார். அதே வேளையில், நம்பிக்கையின்மையும், மனச்சோர்வும் உடையவராக இவர் இருந்தார். எத்தனையோ நிகழ்ச்சிகளில் என்னிடம் குறிப்பிட்டுச் சொன்னது இதுதான்

தாம் உள்துறை அமைச்சராக இருந்தபோதிலும், ஆதி திராவிட (ஹரிஜன) மக்களுக்குச் சமுதாய உரிமைகளையும் நீதிமுறையையும் எப்படி நிலைநாட்டுவது என்கிற கேள்வி எழும்போது நேர்மையோடும் நெறிமுறையோடும் தங்கள் கடமைகளைக் காவல்துறையினர் நிறைவேற்றும்படி செய்வதில் இருந்த பல சிக்கல்களில் தம்மால் தப்ப இயலவில்லை என்று குறிப்பிட்டார்.

ஆதி திராவிட மாணவர்களுக்கு உரிய விடுதிகள் மீதும் தொடக்கப் பள்ளிகள் மீதும் இவர் சிறப்பான கவனம் செலுத்தினார். பல சிக்கல்களில் பலன்தரும் வலிமையுடன் செயலாற்ற இயலாவிட்டாலும், திரு. காமராஜர் அவர்களின் பரிவையும் ஆதரவையும் இவர் பெற்றிருந்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் பழங்குடி இனத்தவருக்கும், பள்ளிகளையும் விடுதிகளையும் அதிக எண்ணிக்கையில் திறப்பதற்கு இவர் காரணமாக விளங்கினார்.

நான் இவரிடம் கண்ட மிக மேன்மையான ஒரு பண்பு இவருடைய நேர்மையே ஆகும். மற்றவர்களிடம் கருத்து மாறுபாடு கொள்வதிலும் கூட அருள் மனமும் நேர்மையும் உடையவர் இவர். தம்முடைய நண்பர்களிடமும், கட்சிக்காரர்களிடமும் கருத்த வேறுபாடு கொள்ளும்பொழுதும் அதே பண்புகளுடன் உறுதியாக இருந்தார். இவர் பொருளற்ற மடமைத் தவறுகளைப் பொறுத்தக்கொள்ளவே மாட்டார்.

தம்முடைய குடும்பத்தின்மீது மிகக் குறைந்த அக்கறையே செலுத்தினார். அமைச்சராக இல்லாத பொழுது, பொதுமக்களின் போக்குவரத்துப் பேருந்துகளில் பயணம் புரிவதுதான் இவர் வழக்கம். தமக்கு எனச் சொந்தமாகக் காரும் இவர் வைத்திருக்கவில்லை, சொந்தமாக வீடும் இவர் வைத்திருக்கவில்லை.

தமிழ்நாடாக இருந்தாலும் சரி, நாட்டின் வேறு எந்தப் பகுதியாக இருந்தாலும் சரி, முன்னாள் அமைச்சர்களின் வாழ்க்கை வரலாற்றில் இல்லாத விந்தையை உள்ளடக்கியதே இவரது இந்த நிலைமை! தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரியத்தால் வழங்கப்பட்ட ஒரு வாடகை வீட்டில்தான் இவர் வாழ்ந்தார்.

சென்னை அரசு பொது மருத்தவமனையில், உடல்நலம் குன்றியவராகப் படுத்திருந்த இவரை, நான் பார்க்கப் போனேன். அப்போது என் இரண்டு கைகளையும் பிடித்தக் கொண்டார். கண்ணீர் விட்டு அழுதார்! என்னால் செய்யக்கூடிய ஒரு சில பணிகளையும் இவர் குறிப்பிட்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு நான் டெல்லியில் இருந்தபொழுது, இவரது இறப்பு பற்றிய துயரச் செய்தி எனக்கு எட்டியது. நல்ல பெருந்தன்மையுள்ள ஒரு மனிதராக வறுமையிலே பிறந்து, வறுமையிலே மடிந்த இவர் நாட்டுக்கே தம்மை அர்ப்பணித்துக்கொண்ட இந்தியத் தாயின் மகன் ஆவார்!

இவர் வாழ்ந்த காலத்தில் இவருக்கும், இவரது மறைவுக்குப் பின்னர் இவருடைய குடும்பத்தாருக்கும் உதவி புரிந்தவை அன்றைய முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர் (இராமச்சந்திரன்) அவர்களின் பெருந்தன்மையும் பரந்த மனப்பான்மையுமே ஆகும்.

ஆதி திராவிடர்களில் எத்தனை பேர் இவரையும், இவருடைய பணிகளையும் இன்று நினைவு கூர்கின்றனர்? இவரையும் இவருடைய தொண்டுகளையும் அறிந்துகொண்ட தலைமுறை சுருங்கிக்கொண்டே வருகிறது.

இவர் மறைந்துவிட்டாலும் கூட, தாழ்வான நிலையில் பிறந்த ஒருவர் பணத்துக்கும் பதவிக்குமோ, தன்னல இச்சைகளுக்கோ இரையாக விழுந்துவிடாமல், எளிமையான வாழ்க்கை முறை, நாட்டுக்கு அர்ப்பணிப்பு, தன்னலமற்ற தொண்டு முதலானவற்றின் மூலமாக அதிகாரமும் பெருமதிப்பும் கொண்ட உயர்ந்த நிலைகளை எட்டமுடியும் என்பதற்கு ஒளி வீசும் ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்த மாமனிதரே திரு. கக்கன் அவர்கள்!

ஆங்கிலம் மூலம்

திரு. செ. செல்லப்பன்

ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்

திரு. . காந்திதாசன்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book