86

றுதி மரியாதை செலுத்த வந்த பல அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் ஆகியோர் இவருக்குத் தனிஇடம் ஒதுக்கித் தந்து அடக்கம் செய்ய அரசு உதவுமா? என்ற கேள்வியை எழுப்பினர். அதை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் யார் கேட்பது? எப்படிக் கேட்பது? ஏதேனும் ஒரு அமைப்பு மூலமாக அரசை அணுகினால் நல்லது என்றெல்லாம் பேசப்பட்டன. அப்படியானால் எந்த அரசியல் தலைவர் கேட்பது? கக்கன் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்து இருந்தாரோ அந்தக் கட்சியோ, தலைவர்களோ இதற்கு முயலாதபோது பிற அரசியல் கட்சிகள் இதற்கு முயலும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்றெல்லாம் விவாதிக்கப்பட்டன.

அன்றைய அரசியல் தலைவர்களுக்குப் பின்னால் அவரவர்கள் சார்ந்த சாதியின் சங்கங்கள் பின்புலமாக இருப்பதுபோல் கக்கனுக்கு இல்லாமல் போனது மிகப்பெரிய குறை என்று சிலர் கூற, அனைவருக்கும் பொதுவாகவே வாழ்ந்த மனிதனான இவரைத் தனிப்பட்ட பிரிவினருக்கு மட்டும் சொந்தம் என்று சொல்வது முறையன்று என்று வேறுசிலர் கூறினர். இப்படி எத்தனையோ விவாதங்கள் நடந்தாலும் “தனியிடம் ஒதுக்கிக் கக்கனின் உடல் அடக்கம் செய்யப்படுமா? என்ற வினாவிற்கு மட்டும் விடை தெரியவில்லை. எந்த அரசியல் கட்சியோ அல்லது அதன் தலைவர்களோ இது குறித்துப் பேச முன்வராத போது சோகத்தில் இருக்கும் உறவினர்களே, முதல்வரை அணுகிக் கேட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்தனர். அதுபோலவே எம்.ஜி.ஆர் அவர்கள் இறுதி மரியாதை செலுத்த வந்த போது நெருங்கிய உறவினர் சிலர் அணுகி இதுகுறித்துக் கேட்டனர். “அது எனக்குத் தெரியும், நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதனால், எப்படியும் காமராசர் நினைவு மண்டபத்திற்குப் பக்கத்தில் தனியிடம் ஒதுக்கித் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நெடுநேரம் காத்திருந்த பின், அரசு தனியிடம் ஒதுக்கவில்லை என்ற செய்தி வந்தது. தன்னலமில்லாப் பொதுத்தொண்டு செய்த நேர்மையாளருக்கு இந்த நாடும் அதை ஆண்ட ஆட்சியாளர்களும் செய்யும் நன்றிக்கடன் இதுதானா? என்று பலர் முணுமுணுத்ததைக் கேட்க முடிந்தது. இறுதியில் பொது இடுகாட்டிற்கே கொண்டு போக முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து எம்.ஜி.ஆர். தம் அமைச்சரவை நண்பர்களோடு கலந்து ஆலோசித்தாரா? அப்படி ஆலோசனை நடத்தும் போது, தனியிடம் என்ற கருத்துக்கு எதிர்ப்புகள் வந்ததால் அந்த எண்ணத்தை விட்டு விட்டாரா? கக்கனைவிடத் தன்னலமின்மையிலும், புனிதமான பொதுத்தொண்டிலும் விடுதலை வீரத்திலும், சிறந்தவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்களா? இவருக்குத் தனியிடம் ஒதுக்காததில் இனரீதியான உள்நோக்கம் ஏதேனும் இருக்குமோ? என்றெல்லாம் கூடியிருந்த மக்களிடையே கேள்விகள் எழுந்தன. உண்மை இதுவரை விளங்காத புதிராகவே இருக்கிறது.

அப்படி இவருக்குச் சிறப்பு நேர்வாகக் கருதித் தனியிடம் ஒதுக்கித் தந்திருந்தால் பொது வாழ்வில் உண்மை, நேர்மை என்று வாழ்ந்தவரை தமிழகம் மதித்தது என்ற வரலாறு இருந்திருக்கும்.

ஒருவேளை, எளிமையான தன்னலமில்லா மக்கள் தொண்டனான கக்கன், மரணத்திற்குப் பின்னும் மக்களோடு மக்களாகவே இருக்கட்டும். ஏனென்றால், இதுதான் கக்கனுக்கும் பொருத்தமான இடமாக இருக்கும் என்று முடிவு செய்திருக்கலாம் என்று தமக்குத்தாமே சமாதானம் செய்து கொண்டனர். காவல்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் காவல்துறையின் அரசு மரியாதை அணிவகுப்போடு 21.12.1981 அன்று சென்னைத் தியாகராயர் நகர் அருகிலிருக்கும் கண்ணம்மாபேட்டை பொது இடுகாட்டில் கக்கனின் உடல் எரியூட்டப்பட்டது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book