83

ராயப்பேட்டையில் கக்கன் குடியேறிய போது, தம் மக்களுள் மூவர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். குடும்பத்தில் மொத்தம் ஏழு பேர் உறுப்பினர் இருந்தனர். குடும்பத்தின் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்வது என்பது பெரிய கேள்விக் குறியானது. எனினும், அந்தக் கேள்விக் குறியை ஆச்சரியக் குறியாக மாற்றினார் மாரியப்ப நாடார். இவர் உற்றுழி உதவும் நண்பராக வந்த நின்றார்.

இந்தியா விடுதலைக்குப் போராடிய காலத்தில் வறுமையிலும் இடைவிடாமல் போராடத் தேவையான உணர்வு ஊட்டும் கவிதைகளைப் பாடிய பாரதியார், கண்ணனைத் தம் தோழனாகப் பாவித்துப் பாடும்போது,

கேட்ட பொழுதில் பொருள் கொடுப்பான் சொல்லுள்

கேலி பொறுத்திடுவான் எனை

ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்

ஆறுதல் செய்திடு வான் என்றன்

நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று

நான் சொல்லும்முன் உணர்வான் அன்பர்

கூட்டத்திலே இந்தக் கண்ணனைப் போலன்பு

கொண்டவர் வேறுளரோ?”

என்று பாடுவார். அத்தகைய ‘கண்ணன்’ போல் கக்கன் குடும்பத்தினர்க்கு அந்த மாரியப்பன் நாடார், ‘நன்றி கெட்டவர்கள்’ கூட்டத்திடையே நல்ல மனித நேயராகக் கிடைத்தார். மாரியப்பன் நாடார் இராயப்பேட்டையில் ‘அஜந்தா ஸ்டோர்ஸ்’ என்ற கடையை நடத்தி வந்தார். இவர் கக்கன் பேரில் வைத்திருந்த மரியாதை அளவிடற்கு அரியது.

கக்கன் வீட்டிற்கு வேண்டிய அத்தனை பொருள்களையும் மாரியப்பன் நாடார் மனமுவந்து வழங்கி வந்தார். எப்போதாவது கக்கன் குடும்பத்தினர் கொடுக்கும் சிறு தொகையை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்வார். கடைக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகை குறித்து வாய் திறந்ததே இல்லை. அதுமட்டும் இல்லை, கக்கன் வீட்டிலிருந்து யார் வந்து, எதைக் கேட்டாலும் தடை இல்லாமல் கொடுத்தனுப்ப வேண்டும் என்று கடைச் சிப்பந்திகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். நீண்ட நாள் நிலுவைத் தொகையைக் கொடுக்க முடியாத நிலை வந்தபோதும் மாரியப்பன் நாடார் கேட்காமல் தொடர்ந்து தேவையான பொருள்களைக் கொடுத்து வந்ததைக் கக்கன் குடும்பத்தவர் எப்போதும் நன்றியோடு நினைவு கூர்கின்றனர். பிற்காலத்தில் நிலுவைத் தொகை முழுவதும் ஒட்டுமொத்தமாகக் கொடுக்கப் பட்டது என்றாலும், மாரியப்பன் நாடார் தம் குடும்பத்திற்குச் செய்த உதவியை மிகப் பெரியதாகப் பாராட்டிக் கக்கன் பலரிடத்தில் பேசியது உண்டு.

டாக்டர் நடராசன்

மாரியப்பன் நாடார்போல் இன்னும் சிலரும் கக்கனுக்கு உதவிகள் செய்தது உண்டு. அத்தகையவர்களுள் குறிப்பிடத் தக்கவர் டாக்டர் நடராசன் ஆவார். மனிதன் ஒருவன் செல்வத்தோடும் சீரோடும் பதவிகளோடும் வாழும்போது அவனுடன் சேர்ந்து நின்று புகழ்பாடி வாழ்த்துவதும், நிலை தவறித் தாழ்ந்தபோதோ, கீழிறியங்கியபோதோ கண்டுகொள்ளாமல் எட்டி நின்று வேடிக்கை பார்ப்பதும் இன்றைய உலகில் வாடிக்கையாகிவிட்டது. இதற்குக் கக்கன் மட்டும் விதிவிலக்காகி விடுவாரா? பதவி போனபின் தேடிவந்து பார்ப்பார் இல்லாத நிலையில், கக்கன் இராயப்பேட்டை பகுதியில் குடியிருந்தபோது தவறி விழுந்துவிட்டார். இச்செய்தியைக் கேட்டு அவசர சிகிச்சை தருவதற்காக வந்தவர்தான் டாக்டர் நடராஜன். டாக்டர் நடராஜன் சென்னைப் பொது மருத்துவமனையின், முடநீக்குத் துறைத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் தாம் வகித்த பதவியைப் போலவே பண்பிலும் பழக்க வழக்கங்களிலும் உயர்ந்தவராகத் திகழந்தார்.

இந்தச் சமயத்தில்தான் கக்கனுக்கு இவர் அறிமுகமானார். அவசர சிகிச்சை அளிக்க வந்த டாக்டர் நடராஜன், கக்கனின் பண்பு நலன்களால் கவரப்பட்டுத் தொடர்ந்து நட்புணர்வோடு பழகினார். ‘அழைத்தவர் குரலுக்கு வருவேன்’ என்று கண்ணன் கூறினான் அல்லவா, அதுபோல அழைத்தபோதெல்லாம் டாக்டர் நடராஜன் ஓடோடி வந்து நின்று பல உதவிகளைச் செய்தார். தாம் வரமுடியாத நேரத்தில் தம் உதவியாளர்கள் யாரையாவது விரைவாக அனுப்பிக் கக்கனுக்குத் தேவையான சிகிச்சைகளை அளித்தார். மனம் சலிப்படையாமல் டாக்டர் நடராஜன் தொடர்ந்து வந்து சிகிச்சை அளித்ததைக் கக்கன் மட்டுமன்றி அவர் குடும்பத்தார் அனைவரும் மறவாமல் பாராட்டிப் பேசி வந்ததை யாரும் மறக்க முடியாது. அத்துடன் டாக்டர் நடராஜன் செய்த சிகிச்சைக்கோ, கொடுத்த மருந்திற்கோ எதையும் பெற்றதில்லை என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book