82

குழந்தைக்கு வாயில்

சொட்டு மருந்து!

வாக்காளருக்கு கையில்

சொட்டு மருந்து!

இரண்டுமே போலியோ?”

என்பது ஒரு புதுக்கவிதை.

மருத்துவர் தொடங்கி சாமியார் வரை போலிகள் பெருகிவிட்டனர். தியாகிகளிளும் அந்த நிலையா?

உண்மையான வாழ்வு என்பதற்குப் பொருள் கேட்டால் கக்கன் என்றே சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு நண்பர்களிடமும், பொதுமக்களிடமும் உண்மையாக நடந்து கொண்ட அரசியல் தலைவர் கக்கன். பின்னாளில் வயது முதிர்ச்சியின் காரணமாக நினைவுப் பிறழ்ச்சி ஏற்பட்ட நிலையில் இருந்தார். அவரைப் பார்க்க வரும் எவரையும் அன்புடன் வரவேற்றுப் பேசுவார். பேசிக் கொண்டிருப்பவரிடம் ‘எப்போது வந்தீர்கள்? உங்கள் பெயர் என்ன?’ என்று கேட்டுத் தெரிந்து கொள்வார். அந்த அளவிற்கு நினைவுப் பிறழ்ச்சி ஏற்பட்டுவிட்டது.

அந்தக் காலகட்டத்தில்தான் விடுதலை வீரர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க அரசு ஆணை வழங்கியிருந்தது. நாடறிந்த விடுதலை வீரருடன் சிறையில் இருந்ததாகச் சான்று பெற்றால்தான் விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை. அதைப் பெற்றுக்கொள்ளப் பலர் கக்கன் வீட்டிற்கு வந்தனர். இதற்குமுன் இல்லாத அக்கறை பலருக்கு வந்ததுபோல் காட்டிக் கொண்டனர்.

கக்கனுடன் தாமும் சிறையில் இருந்ததாகக் கதைகள் சொன்னார்கள். அந்தக்கதையை நம்பிப் பலருக்குச் சான்றுகள் வழங்கினார். அந்தச் சான்றுகளின் உண்மை நிலையை அறிய வந்த அதிகாரிகள் கக்கனின் நினைவுத் தடுமாற்ற நிலையைக் கண்டு ஐயப்பட்டனர்.

அதனால், இரகசிய ஆய்வு ஒன்றை நடத்தினர். கக்கனிடம் சான்று பெற்ற பலர் பொய்யான தகவல்களின் அடிப்படையில் சான்று பெற்றதாகத் தெரியவந்தது. தொடர்புடைய அதிகாரிகள் கக்கனின் வீட்டிற்கு வந்து நடந்ததைச் சொல்லி இனி எவருக்கும் சான்று வழங்க வேண்டாம் என்று வேண்டிக் கொண்டனர். அதன் பின் எவருக்கும் சான்று வழங்கவில்லை. இதனால், சில உண்மையான விடுதலை வீரர்களுக்குக் கூட சான்று வழங்க முடியாமல் போய்விட்டது.

இம்மாதிரியான தவறுகளைச் செய்தவர்கள் வெளிநாட்டிலிருந்து அல்லது வெளி மாநிலத்திலிருந்து வந்தவர்கள் அல்லர். தமிழகமண்ணிலே பிறந்து தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள் தாம் என்று நினைக்கும்போது “நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டா” என்ற சொற்கள் இவர்கள் நெஞ்சங்களில் பதியவில்லையே என்பதை நினைத்து வருந்து வேண்டி இருக்கிறது. “கக்கன் அவர்களுக்கு நல்ல நினைவாற்றல் இருந்திருந்தால் சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுத்திருப்பார்” என்றே கூறலாம்.

எவரையும் ஏமாற்றக் கூடாது என்ற உண்மையான கக்கனின் உள்ளத்தைப் பலர் கதராடை வேடம் பூண்டு ஏமாற்றினார்கள் என்பதை எண்ணும் போது நெஞ்சம் கொதித்துப் போகிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book