81

ந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பத்து ஆண்டுகள் சென்னை மாகாணத்தின் அமைச்சராகவும் பொறுப்புகளை வகித்த ஒருவர், பதவி போனபின் குடி இருக்க வீடு இல்லாமல், வாடகை வீடு தேடி அலைவது என்பது எவருக்கும் துன்பம் தரக்கூடிய நிலைதான். இந்த நிலைக்கு ஆளானார் கக்கன். பதவி போனதால் அரசு அளித்த வீட்டைக் காலி செய்தாக வேண்டிய கட்டாயம். அப்படிக் காலி செய்தபின் எங்கே சென்று தங்குவது? என்பது அவர்முன் நின்ற கேள்வி. ஏழு உறுப்பினர் கொண்ட ஒரு குடும்பத்திற்குச் சென்னை போன்ற நகரத்தில் உடனே வாடகை வீடு கிடைக்குமா என்பது ஐயம்தான். அமைச்சராக இருந்த ஒருவர் வாடகைக்கு வீடு தேடுகிறார் என்றால் யார் நம்புவா‘a3கள். கக்கன் பதவியில் இருந்தபோது அவரால் சுகம் அனுபவித்தவர்கள் எவரும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அவரைப் போலவே எளிமையான வாழ்வு வாழ்ந்த தொண்டர்கள் ஒரு சிலரே வந்து சென்றனர். அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. செய்ய விரும்பினாலும் அவர் ஏற்றுக் கொள்வாரா என்பது வினாவாகவே இருந்தது.

இச்சூழலில் கக்கனின் மூத்த மகன் பத்மநாதன், தம் தந்தைக்கு உதவ முன்வந்து, ஓர் அதிகாரியை அணுகினார். அந்த அதிகாரி எதிரணிக் குழுவில் பணியாற்றுகிற அரசு ஊழியராக இருந்தார். கக்கனின் உண்மையான உள்ளத்தை உணர்ந்த அந்த அதிகாரி, காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தலைவரான கக்கனுக்கு உதவிட மனமுவந்து முன்வந்தார். அந்த அதிகாரி கக்கனின் குடும்பத்தை நன்றாக அறிந்தவர். கக்கனின் பொருளாதார நிலையை, உன்னத வாழ்வைத் தெளிவாக உணர்ந்தவர். ஆகவே, அவருக்கு உதவுவதற்குக் கிடைத்த நல்ல வாய்ப்பாக எண்ணிக்கொண்டு, பத்மநாதனுக்கு நன்றி கூறியவாறு முயற்சி மேற்கொண்டார்.

சென்னை, இராயப்பேட்டை கிருஷ்ணாபுரம், வீட்டு எண்.1 பி என்னும் நீதிமன்ற வழக்கிற்கு உட்பட்ட வீட்டை ரூ.192/- வாடகை முடிவு செய்து ஒதுக்கீடாகப் பெற்றுத்தந்தார். ஒரு வகையில் பொறுப்புள்ள மகனால் தங்குவதற்குச் சற்று வசதியான வீட்டைக் கக்கன் பெற்றதில் மகிழ்ந்தார். பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் விலகி ஓடிய காலத்தில் இப்படி ஒருவர் வந்து உதவியதைக் கக்கனின் மக்கள் எக்காலத்திலும் மறுக்கவில்லை. இதற்குப் பின்னர் வீட்டு வசதி வாரியச் செயலாளராக இருந்தவரும் கக்கனின் சம்பந்தியுமான வி.எஸ்.சுப்பையா, ..எஸ். தியாகராய நகர் பகுதியில் உள்ள சி..டி. நகர் முதல் பிரதான சாலையில் அமைந்திருந்த 11 ஆம் எண் வீட்டை ‘வாடகைக்கு ஒதுக்கீடு’ செய்து உதவினார். கக்கன் தமது இறுதிக் காலம்வரை அந்த வீட்டில்தான் குடியிருந்தார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book