8

திருமணமான பின்னரும் இரவுப்பள்ளி மேற்பார்வை, சேவா சங்கம் தொடர்புடைய வேலைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்து வந்தார். இரவு, பகல் என்று நேரம் பார்க்காமல் செய்யும் தொண்டிற்கு இல்லறம் தடையாக இருக்கவில்லை. அதனால்தான் இவரால் பொதுத் தொண்டு செய்ய முடிந்தது.

1934ஆம் ஆண்டு சனவரி 24ஆம் நாள் தமிழகம் வந்த அண்ணல் மகாத்மா காந்தியடிகள் 27ஆம் நாள் மதுரைக்கு வந்தார். கக்கனின் தன்னலமற்ற பொதுத் தொண்டையும் இரவு பகல் பாராது ஆற்றும் சேவைகளையும் மனதாரப் போற்றி வந்த என்.எம்.ஆர்.சுப்புராமன், கக்கனை அழைத்துச் சென்று காந்தியடிகளிடம் அறிமுகம் செய்து வைத்தார். காந்தியடிகள் மதுரை மாநகரை விட்டுச் செல்லும் வரை கக்கன் கூடவே இருந்து பல ஊர்களுக்குச் சென்று அவர்தம் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டும் உடன் சென்றும் காந்தியடிகளிடம் தாம் கொண்டிருந்த மரியாதையைப் புலப்படுத்தினார்.

காந்தியடிகளைச் சந்தித்த பின் சேவா சங்கப் பணிகளில் இன்னும் தீவிரம் காட்டத் தொடங்கினார். தம்மை வழிநடத்தும் வைத்தியநாத ஐயர் பின்பற்றும் காந்திய நடைமுறைகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அந்தக் காந்திய நடைமுறைகள் மனத்தில் அடிப்பதிந்ததால் காங்கிரசில் சேர முடிவு செய்தார். அவ்வாறே வைத்தியநாதய்யர் முன்னிலையில் 1939ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி உறுப்பினரானார். இவர் காங்கிரசில் சேர்ந்ததில் தந்தை பூசாரிக்கக்கனுக்கு மன மகிழ்வில்லை. காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் தொடர்புடைய இவர் காங்கிரஸ் கட்சியின் விடுதலை வீரர்களைப்படுத்தும் கொடுமைகளைக் கண்டு அஞ்சியமையே அதற்குக் காரணம் எனக் கூறலாம். இதனால் மகன் தந்தை உறவில் சற்று விரிசல் உண்டானது என்றாலும், தம் பொதுத் தொண்டில் கக்கன் சற்றும் தளர்வடைந்ததாகத் தெரியவில்லை. மகன் தந்தை உறவைவிடப் பொதுத் தொண்டைப் பெரிதாகக் கருதினார்.

சேவா சங்கத் தொண்டன், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானதும் பல பெருந்தலைவர்களை நேரில் சந்தித்து, தாம் சந்தித்த சமுதாயக் கொடுமைகளைக் கூறினார். தீண்டாமை, ஆலயங்களில் நுழைய மறுப்பு, பொதுக் குளங்களில் அனுமதி மறுப்பு ஆகிய கொடுமைகளை விவாதித்தார். இவர்தம் விவாதங்களைக் கேட்ட வைத்தியநாதய்யர் தாமே முன்னின்று ஆவண செய்வதாகக் கூறினார். தொடக்கம் முதலே தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தொண்டு செய்து வரும் வைத்தியநாதய்யர் இவ்வாறு கூறியதில் வியப்பொன்றுமில்லை.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book