80

ஞ்சாநெஞ்சமே சொத்து என்றிருந்த ஐயரின் பிள்ளைகள் ஒருமித்த குரலாகக் ‘கக்கன் எங்களின் உடன்பிறவா சகோதரன். அவரையும் சேர்த்துக் கொண்டுதான் எங்கள் தந்தையின் இறுதிச் சடங்கை செய்யப் போகிறோம். எவருக்கேனும் இதில் தடை இருக்குமானால் அல்லது எங்களின் இந்த முடிவினை எவராவது ஏற்க விரும்பவில்லையெனில் இச்சடங்கில் கலந்து கொள்ளாமல் இவ்விடத்தை விட்டுச் சென்று விடலாம்’ என்று கூறியதைக் கேட்டுச் சில சமுதாயத் தலைவர்கள் அதிர்ந்து போனார்கள். பலர் அவ்விடத்தை விட்டுச் சென்று விட்டனர். இனவெறி நிறைந்த அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தனித்துக் கூட்டம் போட்டு ஐயர் குடும்பத்தைச் சமுதாயக் கட்டுப்பாடு செய்து ஒதுக்கி வைத்தனர்.

இத்தனைக்கும் பின்னால் தளர்வில்லாமல் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவ்வேளையில் கக்கனையும் தனியே அழைத்து ‘உன்னால் தான் இந்தச் சண்டை, நீ கொஞ்சம் விலகிக் கொண்டால் என்ன?’ என்று சிலர் வினவினர். ‘நான் இன்று அணிந்திருக்கிற இந்தக் கதராடை, இதோ இந்த உடல், நான் தற்போது வகித்து வரும் பதவியெல்லாம் ஐயர் தந்தது தான். இவை எல்லாவற்றையும் விட நான் இன்று மனிதனாக மதிக்கப்படுவதே அவர் காட்டிய மனிதநேயத்தால் தான். அவ்வாறு என்னை உருவாக்கிய தந்தையாகிய ஐயருக்கு நான் இந்த இறுதிச் சடங்கைச் செய்யவில்லையென்றால் நான் உயிருடன் இருப்பதில் பொருளே இல்லை’ என்று ஆவேசத்துடன் கூறினார். இதைக் கேட்ட சாதிவெறிபிடித்த அறிவுஜீவிகள் திகைத்து நின்றனர். “மனித உறவுகள்” என்பது மனங்களின் சங்கமம் என்பதை உணர முடியாத நிலையில் அமைதியாயினர்.

ஒரு மகன், தன் தந்தையின் மரணத்தின்போது என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்தார் கக்கன். சமுதாயமே ஒன்றுகூடி எதிர்த்தபோதும் தமது எண்ணத்தை மாற்றிக் கொள்ளாத மனவலிமையைக் கண்டு பலரும் வியந்தனர்.

ஆரிய சமுதாயம் வைத்தியநாதய்யர் குடும்பத்தைச் சமுதாயத் தொடர்பிலிருந்து தள்ளி வைத்தது. அதனால், உருவான பல இடர்களைத் தாண்டி வெளிவந்து இன்றைய சமுதாயத்தால் மதிக்கத்தக்க அளவில் ஐயரின் குடும்பம் பெருமையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. “எனது வாழ்க்கையே உங்களுக்குப் பாடம்” என்ற காந்தியடிகளின் சீடரான ஐயர் அவரது வாழ்க்கையையே பிறருக்குப் பாடமாக விட்டுச் சென்றிருக்கிறார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book