79

1920ஆம் ஆண்டு வாக்கில் வைத்தியநாதய்யர் அவர்களுக்குக் கக்கன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கக்கன் கல்வியில் கொண்டிருந்த ஆர்வமும் அவர் பொதுத்தொண்டில் காட்டும் நேர்மையும் ஐயரை மிகவும் கவர்ந்தது. அதனால், தமது வீட்டிலேயே தங்க இடம் கொடுத்தார். கக்கனின் பழக்க வழக்கங்களைக் கண்டு வியந்து போன ஐயர் தமது வீட்டிலேயே உணவு கொடுத்தார். தொடர்ந்து தம் மக்களோடும் தம் மனைவியோடும் கக்கன் காட்டும் பாச உணர்வு ஐயரைப் பெரிதும் கவர்ந்தது. கக்கனைத் தம் மக்களில் ஒருவனாகவே கருதினார். இரவு எத்தனை மணிக்கு வீடு திரும்பினாலும் “கக்கன் வீட்டிற்கு வந்தாகிவிட்டதா? சாப்பிட்டு விட்டானா?” என்று கேட்காமல் அவர் சாப்பிட்டதேயில்லை என்ற செய்தியை ஐயரின் மக்கள் இன்றும் சொல்லி வியந்து போகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகத் தம்மை அர்ப்பணம் செய்து கொண்ட ஐயர் கக்கனுடன் நெருங்கிப் பழகும்போது தான் பல உள்ளுணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்ததாம்.

1939ஆம் ஆண்டு திருக்கோவில் நுழைவு (ஆலயப் பிரவேசம்) செய்த போது அவ்வுணர்வுகளை மனதில் தாங்கியே ஆலயப் பிரவேசக் குழுவில் கக்கனையும் இணைத்துக் கொண்டார். அதற்குப் பின்னால் கக்கன் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தேர்தலில் நின்ற போது தாமே தேர்தலில் போட்டியிட்டது போல் செயல்பட்டதை அவர் பலமுறை சொல்லி மகிழ்ந்திருக்கிறார். அவ்வாறு படிப்படியாக உயர்த்தி இந்த நாட்டின் அரசியல் சட்டசபை உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உயர்த்தி அழகு பார்த்தவர் ஐயர்.

1955ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராகவும் இருந்தார் கக்கன். உடல்நலக் குறைவாக இருந்த ஐயர் 1955ஆம் அண்டு பிப்பரவரி 23ஆம் நாள் காலமானார். இச்செய்தி கேட்டு மதுரைக்கு விரைந்தார் கக்கன். ஐயரின் குடும்ப உறுப்பினர்கள் கக்கனுடன் கலந்து துக்கத்தைப் பகிர்ந்து கொண்ட முறைகளைக் கண்ட ஐயரின் உறவினர்கள் வியப்பில் மூழ்கினர்.

இறுதிச்சடங்கு செய்யும் நேரம் நெருங்கியது. ஐயரின் மக்கள் மரபுப்படி மொட்டையடித்துக் கொள்ளி வைக்கும் நிகழ்ச்சியைத் தொடங்கினர். கக்கனும் மொட்டையடித்துக் கொண்டு பிள்ளைகளுடன் பிள்ளையாக நின்றார். இதைக் கண்ட ஐயரின் உறவினர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் எதிர்த்தனர். ‘இது என்ன அநியாயம்?’. பெற்ற பிள்ளைகள் மட்டுமே செய்ய வேண்டிய ஓர் இறுதிக் கடனை வேறொருவன் செய்வதா? அதுவும் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த ஒருவன் செய்வதா?’ என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி நிகழ்ச்சியைத் தடை செய்தனர்.

வைத்தியநாதய்யரின் மனைவியும் அவரது பிள்ளைகளும் எப்படி இதை அனுமதிக்கலாம்? அவர்கள் முறையான பதிலை நமக்குச் சொல்லியே ஆக வேண்டும். இந்த ஐயர் சமுதாயத்தில் இவர்கள் மட்டுமா வாழ்கிறார்கள்? நாமும் தானே வாழ்கிறோம்? இப்படி முறையற்ற செயலை இவர்கள் செய்தால் நாளை நமக்கு என்ன மரியதை கிடைக்கும்’ என்று ஐயர் சமுதாயத் தலைவர்கள் பொங்கி எழுந்தனர்.

வருத்தத்தில் ஆழ்ந்திருந்த வீடு விவாதமேடையாக மாறியது. எப்படி இருந்தாலும் ஐயரின் பிள்ளைகளை அழைத்துப் பேசி முடிவு செய்யலாம் என்றனர் சிலர். அதுபோலவே அவர்களை அழைத்துத் தனியே பேசினார்கள்.

நாங்கள் பிறப்பால் மகன்களானோம். ஆனால், கக்கன் வளர்ப்பால் மகனாவார். ஆகவே எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை கக்கனுக்கும் இருக்கிறது’ என்று வைத்தியநாதய்யரின் மனைவியும் அவரது மக்களும் சொன்னதைக் கேட்டு ஐயர் இன சமுதாயத் தலைவர்கள் வாயடைத்துப் போயினர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book