78

1979 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கக்கன் மதுரைக்குச் சென்றிருந்தார். அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றைய முதலமைச்சரான எம்.ஜி.ஆர் அப்போது மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். கக்கன் மருத்துவமனையில் இருக்கும் செய்தியைக் கேள்வியுற்று அவரைச் சந்திக்க விரும்பினார். முன்னறிவிப்பின்றிக் கக்கனைப் பார்த்து நலன் விசாரிக்க மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.

இது குறித்துத் தினமலர் நாளிதழ் வெளியிடும் வாரமலர் (26.03.2000 இதழில்) மதுரை எஸ்.எஸ்.இராமகிருட்டிணனின் “ஒரு புகைப்பட நிருபரின் அனுபவங்கள்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் பகுதி இதோ…!

மதுரையில் 1980 மேதின விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார் எம்.ஜி.ஆர். முன்னாள் மதுரை மேயர் முத்து, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். மதுரை வந்த எம்.ஜி.ஆர். ஆஸ்பத்திரி சென்று, உடல்நலம் விசாரித்தார். பின்னர் காருக்குத் திரும்பிக் கொண்டிருந்த காளிமுத்து, பாலகுருவாரெட்டியார் ஆகியோர் எம்.ஜி.ஆரிடம், ‘அண்ணே முன்னாள் மந்திரி கக்கன் கடந்த ஒரு மாதமா இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்’ என்று கூறவே எம்.ஜி.ஆர். திடீரென நின்று ‘இதை ஏன் முதலில் கூறவில்லை. அவர் எந்த வார்டில் இருக்கிறார்?’ எனக் கேட்டார். உடனே, கக்கனைப் பார்க்கச் சென்றார்.

ஆஸ்பத்திரியில் சாதாரண வகுப்பில் அனுமதிக்கப்பட்டிருந்த கக்கனின் அறையில் அவசரமாக எங்கிருந்தோ சேர்கள் கொண்டு வந்து போடப்பட்டன. உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண கோலத்தில் இருந்த கக்கனைப் பார்த்த எம்.ஜி.ஆர் அவர்களுக்குச் சில நிமிடங்கள் ஒன்றுமே பேசஇயலவில்லை. ஒருவரைப் பார்த்து ஒருவர் கண் கலங்கினர். இந்தக் காட்சியைக் கண்ட உடன் சென்றிருந்த அனைவரும் உணர்ச்சிப் பிழம்பாயினர். காமராஜர் காலத்தில் போலீஸ் மந்திரியாக இருந்தவர் கக்கன். அவரது உத்தரவுக்காக எத்தனை அதிகாரிகள் காத்திருப்பர். அப்படிப்பட்டவரை, இன்று இந்தக் கோலத்தில் பார்த்து, கக்கனின் கைகளைப் பிடித்துக்கொண்டு கலங்கிய எம்.ஜி.ஆர்., ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்?’ எனக் கேட்டார். ‘உங்கள் அன்பு இருந்தால் போதும்நீங்கள் பார்க்க வந்ததே சந்தோஷம்’ என்றார் கக்கன்.

விசேஷ வார்டுக்கு மாற்றச் சொல்லவா?’ எனக் கேட்டார் எம்.ஜி.ஆர். ‘வேண்டாம்’ என மறுத்தார் கக்கன். புறப்படும்போது, மீண்டும் கக்கனின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு ‘என்னிடம் என்ன உதவி தேவையாயினும் உடனே தெரியப்படுத்துங்கள் செய்கிறேன்’ எனக்கூறி விடை பெற்றுச்சென்றார்.

இதற்குப்பின்னாலும் எம்.ஜி.ஆர். அப்படியே விட்டுவிடவில்லை. உடனே அந்த மருத்துவமனையின் பொறுப்பாளரை அழைத்து, ‘இவர் யார் என்று தெரியுமா? இவரது உழைப்பால் பெற்ற சுதந்திரத்தால் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவரை இதுமாதிரி பொதுமக்களோடு மக்களாக நடத்த உங்களுக்கு எப்படி மனம் வந்தது?’ என்று கேட்டதோடு நில்லாமல், தனியறை வசதியும் தகுந்த உயர்தர மருத்துவமும் கிடைக்க அப்போதே அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். மேலும் ‘ஏதேனும் மருந்து கிடைக்கவில்லை என்றால் எனக்குச் செய்தி கொடுங்கள். அம்மருந்துகள் கிடைக்க ஆவன செய்கிறேன்’ என்று கூறிச் சென்றார். மனம் கனிய நலம் கேட்டுக் கக்கனிடமிருந்து விடை பெற்றார். சென்னைக்குத் திரும்பியதும் கக்கனின் நலனுக்காக, முன்னாள் அமைச்சர் போன்றவர்களுக்குக் கொடுக்கப்படும் இலவச மருத்துவ சிகிச்சைக்கும், இலவச பேருந்துப் பயணத்திற்கும் அரசாணை வெளியிட்டார். பின்னர் கஸ்தூரி சிவசுவாமி அவர்களின் வேண்டுகோளை ஏற்று இலவச வீட்டிற்கும் ஓய்வூதியத்திற்கும் ஆவன செய்தார். காலத்தில் செய்த இவ்வுதவியைக் கக்கனின் குடும்பத்தினர் இன்றும் நினைவு கூறுகின்றனர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book