77

காங்கிரஸ் இணைப்பிற்குப் பிறகும் கக்கன் உடல் நலக்குறைவாகவே இருந்துவந்தார். குடும்பத்தினர் 1977 தொடக்கத்தில் முட நோய் காரணமாகக் கேரள மாநிலக் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் மருத்துவம் செய்யத் திட்டமிட்டனர். ஆனால், அதில் சேர வேண்டுமானால் பணவசதி வேண்டும். இல்லையென்றால் விண்ணப்பித்து குறைந்தது ஆறுமாதகாலம் காத்திருக்க வேண்டும். அவ்வாறான சூழலில் உடனே கொண்டு போய்ச் சேர்ப்பது கடினமாக இருந்தது.

அப்போது கக்கனைக் காணவந்த அவரது உறவினரும் பனைவெல்லத் துறையின் இயக்குநராகப் பணியாற்றி வந்தவருமான திரு. சம்பந்தன் தானே ஒரு கடிதத்தைக் கேரள முதல்வர் அச்சுதமேனோன் அவர்களுக்குக் கக்கனின் நிலைகுறித்து எழுதினார். விடுதலைப்போர் வீரர்களை மனத்தால் வணங்கும் அச்சுதமேனன் அந்த மருத்துவமனை இயக்குநருக்குக் கடிதம் எழுதி உடனடி அனுமதிக்கு ஆணையிட்டார். மேலும், அக்கடிதத்தின் படியைக் கக்கனுக்கு அனுப்பி உடனே மருத்துவமனைக்குச் செல்லவும் வேண்டிக் கொண்டார்.

ஒரு தனி மனித மடலுக்கு அதுவும் வேறொருவர் எழுதிய மடலுக்கு இத்துணையளவு முக்கியத்துவம் கொடுத்து ஆவன செய்த அச்சுதமேனனின், உயரிய உள்ளத்தைக் கக்கன் குடும்பத்தினரும் உறவினர்களும் நன்றியோடு பாராட்டுகிறார்கள்.

இந்த வாய்ப்பை விட்டால் வேறு வாய்ப்பைத் தேடி அலையமுடியாது என்பதால் கோட்டக்கல் மருத்துவமனைக்குச் செல்ல கக்கனிடம் இசைவு பெற்றனர்.

கக்கனும் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். முதல்வரின் பரிந்துரையில் சேர்க்கப்பட்டிருப்பதால் தனிக் கவனம் செலுத்தி மருத்துவம் அளித்தனர். மேலும் முதல்வர் அச்சுதமேனோன் கேட்டுக் கொண்டதற்கிணங்க அம்மாநில அமைச்சர் “திரு. ஈச்சரன்” என்பவர் கக்கனை மருத்துவமையில் சந்தித்து சிறப்பாகச் சொல்லப்படும் “கதகளி” ஆட்டத்திற்கும் ஏற்பாடு செய்தார். கக்கனை மகிழ்விப்பதன் பொருட்டுச் செய்யப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த மருத்துவமனையில் இருந்த அனைவரும் அதைக் கண்டு மகிழ்ந்தனர்.

ஆறுமாத காலம் தங்கித் தொடர்ந்து சிகிச்கை பெற்றால் முழுமையும் குணமடையலாம் என்று மருத்துவர் ஆலோசனை கூறினார். ஆனால், இரண்டு மாதங்கள் தங்கிப் பெற்ற சிகிச்சைக்கே பணம் கட்ட முடியாத நிலை உருவாயிற்று. அந்தப் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துக்கொள்ள வழி தெரியவில்லை. கக்கனின் மகன் டாக்டர் சத்தியநாதன் ஒர் அரசியல் தலைவரை அணுகிப் பொருளாதார உதவி கேட்டார். அந்தத் தலைவர் நினைத்திருந்தால் எவ்வளவு உதவி வேண்டுமானாலும் செய்திருக்கலாம். அப்படி உதவியிருந்தால் ஒருவேளை முடநோய் குணமடைந்திருக்கக்கூடும் என்று கூறுகிறார் சத்தியநாதன்.

தம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய அளவிற்குக் கூடப் பொருள் சேர்க்காமல் இருந்ததை எண்ணி எண்ணிப் பிழைக்கத் தெரியாத மனிதர் என்று தமிழக மக்கள் சொல்லி வருந்துகின்றனர்.

ஆனால், கக்கனின் மகன் பொருளுதவி கேட்டு அந்தத் தலைவரைச் சந்தித்ததோ அந்தத் தலைவர் இல்லை என்று அனுப்பியதோ கக்கனுக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்திருந்தால் அவ்வாறு கேட்க அனுமதித்திருக்க மாட்டார்.

கடவுள் செல்வத்தை உயர்ந்த பொருளாக மதித்திருந்தால் அதைப் பண்பில்லா இழிந்த மக்களிடம் கொடுத்திருக்கவே மாட்டார்” என்று வெளிநாட்டு அறிஞர் ஒருவர் கூறிய பொன்மொழியைத் தான் எண்ணிப் பார்த்து அமைதி பெற வேண்டும்.

பொருளாதாரச் சிக்கலால் சிகிச்சையை இடையிலேயே முடித்துக்கொள்ளத் திட்டமிட்டனர். ஆனால், பணம் கட்டிய பிறகுதான் மருத்துவமனையிலிருந்து வெளியே வரமுடியும் என்ற நிலை வந்தது. நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் வைப்புநிதியாக போட்டுக் கொடுத்திருந்த ஐம்பதாயிரம் ரூபாயில் பத்தாயிரம் ரூபாய் எடுக்க வேண்டியதாகிவிட்டது. எடுத்துச்செலவு செய்ய இயலாத அளவிற்கு வைத்திருந்த வைப்பு நிதியை எடுப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டதாம். அப்படி எடுத்த பணத்தைக் கொண்டு முழுத்தொகையும் கட்டி மருத்துவமனையிலிருந்து சென்னை வந்தடைந்தார். இவ்வாறான நிலையில் அரசியல் நடத்த இயலுமா?

ஆள்பலம், பணபலம் இருந்தால் அரசியல் நடத்தலாம் என்ற நிலையில் அந்த இரண்டும் இல்லாத இவரால் எப்படி அரசியல் நடத்த முடியும்? மேலும் உடல்நலமும் ஒத்துழைக்க மறுத்தது. இந்நிலையில் இவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book