76

றுமையில் வாடியவர்கள் தம்மைத் தேடி வந்து கேட்கும்போதெல்லாம், அவர்களுக்குத் தேவையானதை இல்லை என்று கூறாமல் கொடுப்பதையே ‘கொடை’ என்று கூறிவந்தனர். அப்படிக் கொடுப்பவர்களை ‘வள்ளல்’கள் எனவும் போற்றினர். ஆனால், வறுமையில் வாடும் மனிதனைத் தேடிச் சென்று வழங்கும் கொடையை இருபதாம் நூற்றாண்டில் ஒருவர் செய்து காட்டினார். அதை என்னவென்று கூறுவதெனத் தெரியவில்லை! அவர் வேறு யாரும் இல்லை!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான். கக்கன் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது எந்த உதவி வேண்டியும் கக்கன் முன்சென்று நின்றவரில்லை சிவாஜி! கக்கனிடம் பயன் பெற்றவர்கள் எத்தனையோ பேர் கண்டும் காணாமல் வாழ்ந்து கொண்டிருந்த கால கட்டத்தில், சிவாஜி கணேசன் மட்டும் கக்கனுக்கு எப்படியாவது உதவ வேண்டுமென்று முடிவு செய்தார். இதைப்பற்றி வெளியில் யாரிடமும் கலந்து ஆலோசிக்கவும் இல்லை.

அரசியலில் ஈடுபட்டுப் பெயரையும் புகழையும் பெற வேண்டும் என்பதற்காகப் பகட்டிற்காகப் பணத்தைப் பலருக்குக் கொடுத்து, அதைப் படமெடுத்துப் பத்திரிகைகளில் போட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் காலத்தில் காதும் காதும் வைத்தாற்போல் கணேசன் ஓர் உன்னதமான கொடை கொடுக்க முடிவு செய்தார். பயனை எதிர்பார்க்காமல் சிவாஜி கணேசன் செய்ய நினைத்த உதவி குறித்து என்ன சொல்ல முடியும்.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது”

என வள்ளுவர் கூறியதுதான் நினைவுக்கு வருகிறது. அதாவது, ‘என்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியை ஆராய்ந்து பார்த்தால். அதன் நன்மை விரிந்து பரந்துள்ள கடலைவிடப் பெரிதாகும்’ என்பது பொருள். கக்கனுக்கு சிவாஜி கணேசன் செய்ய நினைத்தது இவ்வகை உதவிதான்.

இந்தச் சமுதாயத்தின் நலனையும் நாட்டின் நலனையும் முக்கியமாகக் கருதி, தம் நலனையும் தம் குடும்பத்தின் நலனையும் எண்ணிச் செயல்படாமல், தாளமுடியாத வறுமையில், எதையும் வெளியில் சொல்லாமல், செம்மையான வாழ்வை நடத்திக் கொண்டிருந்த கக்கனுக்குக் கட்டாயம் உதவவேண்டும் என்று தம்முள் உறுதி எடுத்துக் கொண்டார். அதையும் பிறர் அறியாவகையில் திடீரெனச் செய்ய நினைத்தார்.

1971ஆம் ஆண்டில் ஒரு பொது நிகழ்ச்சியில் தமக்குப் பரிசாகக் கிடைத்த தங்கச் சங்கிலியை ஏலம் விட்டார். அதில் கிடைக்கும் தொகையை யாருக்கு, எதற்காகக் கொடுக்கப் போகிறார் என்பதை எல்லாம் வெளியில் சொல்லாமல் ஏலம் விட்டார். 50 ஆயிரம் ரூபாய் கைக்கு வந்ததும், அத்தொகை நிலையாக இருந்து பயன்தர வேண்டும் என்ற எண்ணத்தில் அன்றைய காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினரான செங்கோட்டுவேலன் நிறுவனராகவும் இயக்குநராகவும் செயல்பட்ட ‘ஈரோடு பைனான்சியர்ஸ்’ என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கக்கன் பெயரில் நிரந்தர வைப்புத்தொகையாக முதலீடு செய்தார். அதன் பதிவுப் பத்திரத்தைக் கக்கனிடம் கொடுத்தார். அத்தொகைக்கு வழங்கப்படும் வட்டித் தொகையை மாதா மாதம் பெற்றுச் செலவு செய்து கொள்ளுமாறு கூறினார்.

இப்படி ஒரு தொகை வழங்கப்பட்ட காலத்தில் அது மிகப் பெரியதொரு கொடையாகக் கருதப்பட்டது. கக்கனுக்கு எவரும் உதவ முன்வராத காலத்தில் இப்படி ஒரு கொடை வழங்கியதால் சிவாஜி கணேசன் பெயர் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும் நிலை ஏற்பட்டது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book