74

மாலை மூன்றுமணியளவில் இந்தியத் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி அம்மையார் வருகிறார் என்ற பதட்டமும் காவல் துறை அதிகாரிகளின் கெடுபிடியும் அதிகமானது. இருந்தாலும் கக்கனை மட்டும் எவரும் எதுவும் சொல்லாமல் மரியாதையோடு நடத்தினர். இந்திரா அம்மையார் வந்ததும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டாக வேண்டும் என்ற ஆசையைத் தம்பி விஸ்வநாதனிடம் கூறினார். அந்தப் பரபரப்பான சூழலில் எவரிடம் உதவிகேட்பது என்று தெரியாமல் விஸ்வநாதன் திகைத்துக் கொண்டிருந்தார்.

இந்திராகாந்தி அம்மையார் வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திவிட்டுக் கிளம்பினார். அப்போது அங்கு இருக்கையில் அமர்ந்திருக்கும் கக்கனைப் பார்த்து “இவர் யார்?” (Who is this gentleman) என்று ஆங்கிலத்தில் கேட்டார். கக்கனை அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவிற்கு உடல் நிலை பாதிக்கப் பட்டிருந்ததே இதற்குக் காரணம். பக்கத்தில் இருந்தவர்கள் கக்கனைப் பற்றி ஒர் அறிமுகம் கொடுக்க, ‘ஒ அவரா’ என்ற சொல்லோடு கிளம்பிவிட்டார். அந்தச்சோகச்சூழலில் அவர் கேட்டதே பெரியதுதான். அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் இந்திராகாந்தி அம்மையாரோடு இருந்தார். இந்திராகாந்தி அம்மையார் காரில் ஏறப்போகும் சமயத்தில் முதல்வர் கலைஞரை அழைத்துத் தமது காரில் ஏறிக்கொள்ளும்படி கூறினார். ‘ac¬ஞர் தம் உதவியாளரை அழைத்து ‘நான் அம்மையார் காரில் செல்கிறேன். நீ அங்கு அமர்ந்திருக்கும் கக்கன் அவர்களை நமது காரில் அழைத்துக் கொண்டு வந்துவிடு’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். கலைஞர் பணித்தபடியே முதல்வரின் மகிழுந்தில் ஏறிக் காமராசரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார் கக்கன்.

அந்தப் பரபரப்பான சூழலில், தலைமை அமைச்சர் கூடவே செல்லும் அவசர நிலையிலும், கக்கன் கவனிப்பாரற்று அமர்ந்திருப்பதை உணர்ந்த கலைஞர் தாமே முன்வந்து உதவிய கனிவான உள்ளத்தை இன்றும் கக்கனின் தம்பிகளும் பிள்ளைகளும் நன்றியோடு நினைவு கூறி மகிழ்கிறார்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book