73

தொடர்ந்து இருந்து வந்து மூட்டுவலி சற்று அதிகமாகி முடநோய் என்ற அளவிற்கு வந்தது. நல்ல உயரமும் பருமனான உடலும் கொண்ட இவரது உடலின் எடையைத் தாங்கும் சக்தியை இழக்கும் அளவிற்கு அந்த நோயின் தாக்கம் அதிகமானது. அதனால் நன்கு நடமாட முடியவில்லை. மருத்துவர்கள் இவரது உடல் எடையைக் குறைக்க ஆலோசனை கூறினர். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. தாமே எழுந்து நடக்கமுடியாத அளவிற்கு முட நோயால் தாக்கப்பட்டிருந்தார்.

ஏழைப்பங்காளரும், கடமைவீரரும், அரசியல் வித்தகருமான காமராசர் 1976ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் நாள் திடீரென மாரடைப்பினால் இயற்கை எய்தினார். இச்செய்தியைக் கேள்வியுற்ற கக்கன் வடித்த கண்ணீருக்கு அளவே இல்லை. தாம் எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்தாலும் காமராசரின் உடலுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென்றும் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தமது ஆசையைக் குடும்ப உறுப்பினர்களிடம் சொன்னார். கண்கள் நீரை வடித்தவண்ணம் இருந்தன. அவர் அழுததைப் பார்த்திராத குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ந்து போயினர்.

நினைத்தவுடன் பயணம் செய்ய வசதியில்லை. செல்லும் வகையைச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, அவர் கடைசித்தம்பி விஸ்வநாதன் அங்குவந்து வேண்டிய உதவிகளைச் செய்தார். அவர் தம்பி விஸ்வநாதனும் கக்கனும் காமராசர் வீட்டிற்குச் சென்றனர். காமராசரின் உடல் இராஜாஜி மண்டபத்திற்குக் கொண்டு சென்றுவிட்டதாகக் கேள்வியுற்று இராஜாஜி மண்டபத்திற்குச் சென்றனர். காமராசருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பெரும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. என்றாலும் கக்கனைப் பார்த்ததும் அனைவரும் ஒதுங்கி வழிகொடுத்தனர். கண்ணீர் வடிக்கும் மக்கள் கூட்டம் சாரைசாரையாக வந்து கொண்டிருந்தது. அமரர் காமராசரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து சற்று இடைவெளிவிட்டுக் கக்கனுக்கு ஒர் இருக்கை தந்து அமரசச் செய்தனர். பெருகிய கண்ணீர்த்துளிகளே தம் தலைவருக்குச் செய்யும் வழிபாடாகக் கருதிய கக்கன் வாய்விட்டழுத காட்சி காண்போர் உள்ளத்தை உருக்கியது!.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book