7

ன் மகன் படித்து அரசுப் பணிக்குச் செல்வான் என்ற கற்பனையோடு இருந்த பெற்றோருக்கு இவரது நடவடிக்கைகள் ஏமாற்றத்தை அளித்தன. வருவாய் இல்லாத சேவா சங்கப் பணிகள் எத்தனை நாள் பலனளிக்கப் போகின்றன? எதிர்கால முன்னேற்றத்திற்கு வழியென்ன? எப்போது திருமணம் நடக்கும்? எப்படி வாழ்க்கையை நடத்துவதாகத் திட்டம்? என்ற வினாக்கள் தந்தை பூசாரிக் கக்கன் மனதில் தோன்றின. இதைத் தன் மனைவியிடம் புலம்பித் தீர்த்திருக்கிறார்.

திடீரென ஒருநாள் கக்கனின் நண்பர்கள் தும்பைப்பட்டி கிராமத்திற்கு வந்தனர். தந்தை பூசாரிக் கக்கனை சந்தித்துக் கக்கனின் திருமணத்தைப்பற்றி மெல்லப் பேசத் தொடங்கினர். தொடக்கத்தில் ஆர்வம் காட்டாத தந்தை பூசாரிக் கக்கன் மெல்ல மெல்ல செய்திகளைக் கேட்டறிந்தார்.

ஊர் ஊராகச் சுற்றும் இவனுக்கு (கக்கனுக்கு) யார் பெண் கொடுப்பார்? இனி மேல் எங்கேனும் பார்த்து செய்ய வேண்டும்‘ என்றார். ‘பெண்ணெல்லாம் பார்த்தாகி விட்டது’ என்றதும் அதிர்ந்து போனார் என்றாலும் பெண்ணின் ஊர், பேர் இவற்றைக் கேட்டார். பெண்ணின் பெயர் சொர்ணம் என்பதையும் அவர் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர் என்பதையும் சொல்லக் கேட்டுக் கொதித்துப் போனார். “வீரகாளியம்மனை வணங்கும் எங்கள் குடும்பத்துக்கு ஒரு வேதக்காரியா” என்று பொங்கி தம் மன உணர்வுகளை வெளிப்படுத்தினார்.

அப்பெண்ணைத் திருமணம் செய்யலாமா அல்லது வேண்டாமா என்ற எந்தப் பதிலும் சொல்லாமல் நண்பர்களைத் திருப்பி அனுப்பி வைத்தார்.

கக்கனின் திருமண ஏற்பாடுகளைச் செய்தவர் சிவகங்கையைச் சேர்ந்த கணபதி வாத்தியார். அவர் பூசாரிக் கக்கன் நடந்து கொண்ட விதங்களைக் கேட்டறிந்து மனம் தளரவில்லை. கக்கனை அழைத்து யார் சொன்னால் அவர் தந்தை கேட்பார் என்பதைத் தெரிந்து கொண்டார். கக்கனின் ஒப்புதலுடன் கீழவளவு மாயழகன் ஆசிரியர் மற்றும் பனங்குடி கருப்பையா ஆசிரியர் இருவரையும் பூசாரிக் கக்கனிடம் அனுப்பிச் சமாதானம் செய்து ஒப்புதல் பெறச் செய்தார்.

அந்த இருவரும் தும்பைப்பட்டி சென்று பூசாரி கக்கனின் மனம் கொள்ளும்படி எடுத்துச் சொன்னார்கள். ‘பெண்ணின் சொந்த ஊர் சிவகங்கை தெற்குத்தெரு (இன்று அகிலாண்டபுரம் என வழங்கி வருகிறது). சிவகங்கை மன்னர் மாளிகையில் குதிரைகளைப் பராமரிக்கும் ஒருவர் வளர்த்தப் பண்புள்ள பெண். மதுரை மங்களாபுரத்தில் உள்ள கிறிஸ்துவப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்று அப்பள்ளியிலேயே ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். கிறிஸ்துவப் பள்ளியில் பயின்றதால் அம்மதத்தின் பிடிப்பு இருக்கிறதே தவிர உண்மையில் கிறித்துவப் பெண் இல்லை. பெண்ணின் முழுப்பெயர் சொர்ணம் பார்வதி. பார்வதி என்று வருவதால் இந்துப் பெண்தான்’ என்ற தகவல்களைச் சொல்லிப் பூசாரிக் கக்கனைச் சமாதானம் செய்தனர். அவரது ஒப்புதலையும் பெற்றனர்.

அன்றைய காங்கிரஸ் கட்சியோடும் சேவா சங்கத்தோடும் மிக நெருங்கிய தொடர்புடைய கக்கன் சீர்திருத்தச் சிந்தனையும் உடையவர். தாம் இந்துவாக இருந்தாலும் கிறித்துவப் பெண்ணை மணந்து கொள்ள சம்மதித்தார். இவரது நண்பர்கள் திட்டமிட்டது போல் சீர்திருத்தத் திருமணம் செய்து கொள்ளவும் ஒப்புக்கொண்டார்.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அரசாணி சுற்றி நடந்தால்தான் திருமணம் என்று நம்பிக் கொண்டிருந்த அக்காலத்தில் சீர்திருத்தத் திருமணம் செய்து கொள்வது என்பது சமுதாயத்தில் ஒழுக்கக் கேடாகக் கருதப்பட்டு வந்தது. அதனால், நண்பர்கள் மட்டுமே கூடி செய்தால் அவ்வளவு சிறப்பாக இருக்காது என்றெண்ணி ஒரு பொது அமைப்பைத் துணைக்கு வைத்துக் கொள்ளத் திட்டமிட்டனர். அந்தத் திட்ட அடிப்படையில் “சிறாவயல்” என்ற ஊரில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த காந்தி மன்றத்தை அணுகினர். மன்ற உறுப்பினர்களும் முழுமையான ஒத்துழைப்புக் கொடுக்க முன்வந்தனர்.

அம்மன்ற உறுப்பினர்களின் முயற்சியால் 1932 ஆம் சிறாவயல் என்ற ஊரில் தமிழ்நாட்டில் ஆறு பேச்சாளர்களில் ஒருவர் என்றிருந்த பெருமையுடையவரும் பத்மாவதியைக் கலப்பு மணம் செய்து கொண்டவரும் பொது உடமைச் சிந்தனையாளருமாகிய திரு.. ஜீவானந்தம் அவர்களின் தலைமையில் கக்கனின் திருமணம் இனிதே நடைபெற்றது. சிவகங்கை அரசரின் உறவினரான திரு. சசிவர்ணத்தேவரும் அந்நாள் மத்திய அமைச்சர் மாண்புமிகு ஆர்.வி. சுவாமிநாதனும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

வீரகாளியம்மன் திருக்கோவிலின் பூசாரியான பூசாரி கக்கனுக்கு இச்சீர்திருத்தத் திருமணத்தில் முழு மனநிறைவு இல்லை என்றாலும், திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் என்பது அவரது விட்டுக் கொடுக்கும் பண்பைக் காட்டுகிறது.

கடிந்து கொண்டபின் தட்டிக் கொடுப்பது கடுங்குளிருக்குப் பின் வரும் வெயில்போல இதமானது”.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book