70

பின்னர், 1975ஆம் ஆண்டு என் கணவர் தூத்துக்குடி துறைமுகத்தில் செயல் பொறியாளராக (Executive Engineer) அலுவல் பார்க்கத் தொடங்கினார். அப்போது உடல்நலம் நலிவுற்றவராக என் தந்தையார் எங்கள் வீட்டுக்கு வந்தார்.

அந்த நேரம், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாங்கள் அவரைக் கூட்டிச் சென்றோம். சிறப்பு நுழைவுச் சீட்டு (Speical Entrance Ticket) வாங்கக்கூட அவர் எங்களை அனுமதிக்கவில்லை. சாதாரண பொதுமக்கள் வரிசையில் நின்றுதான் அந்தத்தமிழ்க் கடவுளை நாங்கள் தொழுதோம்.

முன்னர் என் தந்தையார் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர்தாம். என்றாலும், அந்தப் பதவியைவிட்டு விலகியபிறகு, தாமும் ஒரு சாதராரணக் குடிமகன்தான் என்று அவர் நினைத்து நடந்தார். தம்மிடம் பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிகார ஆணவம் இல்லாமல், ஒரே சமவுரிமை நிலையில் வாழ்ந்து காட்டிய மனித தெய்வம் என்று எங்கள் தந்தையார் திரு. கக்கன் அவர்களை எம் நெஞ்சில் வைத்து வணங்கி வாழ்கிறோம் நாங்கள்.

தூத்துக்குடியில் பத்து நாள்கள் எங்களுடன் அவர் தங்கியிருந்ததை என் கணவரும் நானும் பெரும் பேறாக எண்ணி இன்றும் மகிழ்கிறோம்.

அந்தத் தங்கலுக்குப் பிறகு, என் தந்தையார் சென்னை திரும்பியபோது, என் கணவர் அவருக்கு இரயிலில் முதல் வகுப்பு (First Class) பயணச்சீட்டு எடுப்பதாகக் கூறினார். அவரோ மறுத்துவிட்டார். சாதாரணப் பொதுமக்களுக்கு உரிய மூன்றாம் வகுப்புப் பெட்டியில் (Three Tier Coach) செல்லவே பயணச்சீட்டு வாங்கி வரச் செய்து சென்னைக்குச் சென்றார்.

பக்தியின் முதல்நிலை ஆணவத்தை அகற்றுதல் ஆரவாரத்தை அடக்குதல்”.

வாரியார்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book