63

1962 ஆம் ஆண்டில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் மூண்டது. அப்போது பள்ளியில் போர் நிதிக்குப் பணம் கொண்டு வரச் சொன்னார்கள். மறுநாள் நான் மறந்தே போய்விட்டேன். தலைமை ஆசிரியை அவர்கள், இறைவணக்கம் நிகழ்ச்சி முடிந்தவுடன், எல்லாரும் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு இருந்தார்.

ஒரு நிமிடம் யோசித்தேன். ‘பணம் இல்லை என்றால் என்ன? கையில்தான் தங்க மோதிரம் இருக்கிறதே! இதைக் கழற்றிக் கொடுத்து விடுவோம்’ என்கிற எண்ணம் திடீரென்று மின்னல்போல என் உள்ளத்தில் எழுந்தது. உடனே மோதிரத்தைக் கழற்றித் தலைமை ஆசிரியை அவர்களிடம் தந்துவிட்டேன்! வியப்போடு என்னைப் பார்த்த அவர், அதை வாங்கிக் கொண்டார். பின்னர்தான் எனக்கு ஓர் அச்சம் ஏற்பட்டது. அப்பா, அம்மா கேட்டால் என்ன சொல்வது என்கிற திகில் வாட்டியது என்றாலும், வீட்டுக்கு வந்த நான் எவரிடமும் எதுவும் சொல்லாமல் இரவில் படுத்துவிட்டேன்.

அடுத்த நாள் நாளிதழில் “மந்திரி கக்கன் மகள் யுத்த நிதிக்குத் தங்க மோதிரத்தை நன்கொடையாகக் கொடுத்தார்!” என்கிற செய்தி வெளியாகியிருந்தது. அதைப் படித்துவிட்ட என் அப்பா வீட்டில் உள்ளே இருந்த என்னைக் கூப்பிட்டார். நான் அவரை நோக்கிப் போனபோது, அம்மாவிடம் அப்பா கூறிய வார்த்தைகள் இப்படிக் கேட்டன.

நான் யுத்த நிதிக்குப் பணம் கொடுத்த செய்தி இன்னும் பேப்பரில் வரவில்லை. ஆனால், என்னுடைய மகள் கஸ்தூரிபாய் மோதிரம் கொடுத்த சேதி வந்துள்ளது. எனக்குப் பெருமையா இருக்கு! என் மகளின் நாட்டுப்பற்றை நினைக்கும் போது, நான் நாட்டுக்காக உழைத்த பலன் எனக்குக் கிடைத்ததுபோல் உணர்கிறேன்” என்று அவர் கூறினார்.

இராமர் இலங்கைக்கு அணை கட்டுவதற்கு அணில் உதவிசெய்ததாகக் கதை கேள்விப்பட்டு இருக்கிறேன். அந்த அணில்போல நான் செய்த அந்தச் சிறிய நன்கொடை உதவி! என் தந்தையின் மகிழ்ச்சிக்கு உதவியதை எண்ணி என் மனம் இன்பப் பூரிப்பில் மிதந்தது!

உன்னால் முடிந்ததைவிட அதிகம் கொடுப்பதுதான் தர்மம். உனக்குத் தேவையானதை விடக் குறைவாக எடுத்துக் கொள்வதே கௌரவம்”.

கலீல் ஜிப்ரான்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book