62

கக்கன் அவர்களது மகள் திருமதி. கஸ்தூரிபாய் அவர்களின் நினைவலைகள்

ன்னலம் அற்ற தன்னிகரில்லாத பெருந்தலைவர் காமராஜர் அவர்களை, நானும் என் சகோதர்களும் ‘பெரியப்பா’ என்றுதான் அழைப்போம். நாங்கள் அப்படி அழைக்கும் போதெல்லாம் உள்ளன்போடு ஏற்றுக்கொண்டு அவர் பூரிப்போடு சிரிப்பார். அவருடன் மகளைப் போல் நான் பழகி வந்தேன்.

இந்த மகளுக்காக, முதலமைச்சராகிய அவர் ஒரு நாள், சென்னை கோட்டையிலிருந்து வரும்போது வழியில் காரை நிறுத்தி, என்னை ஏற்றிச் சென்ற நிகழ்ச்சி இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது.

என் தந்தையாரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவருடைய வாழ்க்கைப் பாதையின் சில நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகத் தொகுத்து எழுதும்பொழுது, ‘பெரியப்பா’ காமராஜர் அவர்கள் என்மீது பொழிந்த பாசத்தின் வெளிப்பாடான அந்த நிகழ்ச்சியையும் தொட்டுக்காட்டத் தோன்றுகிறது.

சென்னை லேடி வெல்லிங்டன் உயர்நிலைப் பள்ளியில் நான் 7ஆம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்த சமயம். மாலையில் பள்ளி முடிந்தபின், பேருந்துக்காகக் கடற்கரைச் சாலை ஓரமாக மழைத் தூறலில் நின்றுகொண்டு இருந்தேன். அப்போது முதலமைச்சராக இருந்த திரு. காமரஜர் அவர்கள் தம் வீட்டுக்குச் செல்ல காரில் வந்துகொண்டு இருந்தார். வேகமாக ஓடிய அந்தக் கார் பின்புறமாகத் திரும்பி வந்தது.

பெரியப்பா அவர்கள், “கஸ்தூரி! காரில் ஏறு!” என்று சிறிது அதட்டுகின்ற குரலில் கூப்பிட்டார். நானும் உடனே காரில் ஏறிவிட்டேன்.

நான் பெரியப்பா போகிறேன். நீயோ மழையில் நனைந்துகொண்டு பள்ளிக்கு முன்னால் பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறாய். ஏன் இந்தக் காரைப் பார்த்ததும் நிறுத்தவில்லை” என்று அவர் கேட்டார்.

நீங்கள் ‘சீஃப் மினிஸ்டர்’ (முதலமைச்சர்) நான் எப்படி உங்கள் காரை நிறுத்த முடியும்“ என்று பதிலுக்கு அவரிடம் கேட்டேன்.

அவரோ சிரித்துக்கொண்டே, “சரிசரிநீயும் விவரம் தெரிஞ்ச பெண்ணாத்தான் இருக்கே!” என்று, எங்கள் வீடு வரும்வரை பேசிக்கொண்டே வந்தார். எங்கள் வீட்டின் முன்னால் காரை நிறுத்தி என்னை இறக்கிவிட்டு அவர் சொன்ன வார்த்தைகள் இன்றும் என் மனத்தில் பதிந்துள்ளன.

நான் கூப்பிட்டேன் என்று உடனே நீ காரில் ஏறிவிட்டாய். இது சரிதான். ஆனால் வேறு யாரும் கூப்பிட்டால் ஏறக்கூடாது!” என்று, ஒரு தந்தைக்கே உரிய வாஞ்சையுடன் அவர் கூறினார். இதை என் தந்தையார் திரு. பூ. கக்கன் அவர்களிடம் நான் கூறியபோது அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்

ஈங்கிவனை யான்பெறவே என்னதவம் செய்துவிட்டேன்!”

என்னும் விடுதலைக் கவிஞர் பாரதியாரின் பாட்டு என் நினைவுக்கு வந்தது.

பெருந்தலைவர் திரு. காமராஜர் அவர்கள் என்னுடைய தந்தையைப் பொதுவாழ்வில் எல்லா நிலைகளிலும் முன்னிலைப்படுத்தி, அமைச்சராகவும் அறிமுகப்படுத்தியவர். எனவே, அந்த மாமனிதர் ஐயா அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக இக்கட்டுரையைக் காணிக்கையாகப் படைக்கிறேன்.

எல்லோரையும் எளிதில் நம்பி விடாதே!

நீ கேட்டது என்பதற்காக எதையும் நம்பாதே!”

புத்தர்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book