61

திப்பிற்குரிய அங்கத்தினர்கள் சிலர் ‘சீட் கார்ப்பொரேஷன்’ (Seed Corporationவிதை வாரியம்) ஏற்படுத்தவேண்டும் என்று சொன்னார்கள். அதைப் பற்றியும் அரசாங்கம் பரிசீலனை செய்துகொண்டு இருக்கிறது என்பதை இந்தச் சபையில் சொல்லிக் கொள்கிறேன். இப்போது மத்திய அரசாங்கத்தின் மூலமாகக் கோயம்புத்தூரில் ‘டெஸ்டிங் லேபரட்டரி’ (சோதனை ஆய்வுக்கூடம்) வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

உற்பத்தி செய்கின்ற விதைகளைக் கோயம்புத்தூருக்கு அனுப்பி, ‘டெஸ்ட்’ (சோதனை) செய்த பின்னால்தான் விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. முக்கியமாக, அரசாங்க விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்கின்ற விதைகளை அனுப்பிவைத்துப் பரிசீலனை செய்த பின்னால்தான், இனி விவசாயிப் பெருமக்களுக்கு அவை வழங்கப்படும் என்பதைக் கூறிக் கொள்கிறேன்.

நம் மாநிலத்திற்கு மட்டும், நாம் திட்டமிட்டபடி, 210 விதைப் பண்ணைகள் ஏற்படுத்த வேண்டும். அவற்றில் இன்னும் பத்து பண்ணைகள் மட்டும்தான் ஏற்படுத்தப்பட வேண்டியிருக்கின்றன. அரசாங்கம் நடத்துகின்ற விதைப் பண்ணைகள் எல்லாமே நஷ்டத்தில்தான் ஓடுகின்றன என்று சொல்லிவிட முடியாது.

பல விதைப் பண்ணைகள் லாபத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. பல விதைப்பண்ணைகள் லாபமும் இல்லாமல் நஷ்டமும் இல்லாமல் நடந்து கொண்டு இருக்கின்றன. கூடுமானவரை நல்ல நிலங்களைப் பார்த்துதான் சர்க்கார் விதைப் பண்ணைகளை ஏற்படுத்தி வருகிறோம்.

சர்க்கார் விதைப் பண்ணைகளைப் பொருத்தவரையில், இவற்றில் உள்ள அதிகாரிகள் எல்லாரையும் அழைத்துப் பேசினேன். ஒவ்வொரு விதைப் பண்ணை மானேஜரையும் டைரக்டர் ‘டிபுடி டைரக்டர்’ இவர்கள் எல்லாரையும் அழைத்துப் பேசினேன்.

எந்த விதத்திலும் அரசாங்க விதைப் பண்ணைகள் நல்லமுறையில் நடைபெற வேண்டும். நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்யவேண்டும். இதற்காகத் தனியாகக் கவனம் செலுத்தவேண்டும் என்று சொல்லியிருக்கிறேன்.

எடுத்த மாத்திரத்திலேயே எல்லா விதைப் பண்ணைகளும் லாபத்தில் நடந்துவிட முடியாது என்பதையும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஏற்கனவே நமது மாநிலத்தில் பல விதைப் பண்ணைகள் நல்லமுறையில் நடந்து வருகின்றன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரம்பக் கட்டத்தில் ஏதாவது கஷ்டங்கள் இருந்தாலும், பின்னால் அத்தனையும் லாபகரமாக நடப்பதற்குச் சர்க்கார் எத்தனிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனியார் நடத்தும் விதைப் பண்ணைகளைப் பற்றியும் அரசாங்கம் கவனித்துக் கொண்டிருக்கிறது.

காய்கறி உற்பத்தி பற்றிப் பல மதிப்புக்குரிய அங்கத்தினர்கள் குறிப்பிட்டார்கள். குறிப்பாக, காய்கறி உற்பத்திக்கு அரசாங்கம் அதிக ஆதரவு கொடுத்து வருகிறது.

மதிப்புக்குரிய அங்கத்தினர் அர்த்தநாரீசுவரக் கவுண்டர் அவர்கள் பேசுகிற போதுகூட, ‘மேட்டூர் பகுதிலேயே கத்தரிக்காய் நன்றாக வருகிறது. காய்கறி உற்பத்தியாளர்களுக்குக் கொடுக்கும் சலுகையை அந்த இடத்திற்கும் நீட்டிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அப்படியே ஏற்பாடு செய்யலாம்’. – இப்படி மற்றவர்கள் கருத்து என்பதற்காக மறுக்காமல் ஏற்புடையதாயிருந்தால் ஏற்றுக்கொள்ளும் மனவிசாலம் உடையவர் கக்கன்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book