6

ரிசன சேவா சங்கம் என்பது காங்கிரஸ் மகாசபையில் ஓர் அங்கமாக விளங்கியது. தென்மாவட்டங்களில் இந்த அமைப்பைத் தொடங்கி மிகச் சிறப்பாக நடத்தி வந்தவர்களில் மதுரை வழக்குரைஞர் வைத்தியநாதய்யர், என்.எம்.ஆர்.சுப்பராமன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஏற்கனவே கல்விப் பொருளுதவி செய்த சுப்பராமன் வழியாகக் கக்கனைப்பற்றி வைத்தியநாதய்யர் தெரிந்து வைத்திருந்தார். சேவா சங்க வளர்ச்சிப் பணிகளுக்கு உதவும்தொண்டர்கள் தேவைப்பட்ட காலமது. கக்கனைச் சந்தித்துக் கலந்து பேசிய வைத்தியநாதய்யர் கக்கனைச் சேவா சங்கத் தொண்டனாகச் சேர்த்துக் கொள்ள எண்ணினார்.

கக்கனின் பண்பான பேச்சு; பாசமான பார்வை; பழகும் முறை ஆகியன அய்யருக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் அவர்தம் எளிமை, உண்மை ஆகியன அய்யரின் மனத்தைக் கவர்ந்தன. சேவா சங்கப் பணிகளை முடித்த பிறகு கக்கனைத் தம் வீட்டிலேயே தங்க இசைவளித்தாரெனில் அக்கால வெள்ளத்தில் இவருடைய நட்பின் திறம் கரையேறியது என்றே மகிழலாம்.

ஒவ்வொரு கிராமமாகச் சென்று இரவுப் பள்ளிகள் தொடங்குவது, அப்பள்ளிகளுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது, பள்ளிகளை மேற்பார்வை செய்வது ஆகியன கக்கனின் அன்றாடப் பணிகள். இதுதான் இவருக்குக் கிடைத்த தொடக்க காலப் பொதுத்தொடர்பு. வைத்தியநாதய்யரின் ஆணைப்படியே பள்ளி வேலைகளைச் செய்து முடிக்கும் வல்லவர் என்ற பெயர் பெற்றார்.

மதுரை மேலூர் வட்டம் தொடங்கிக் கிட்டத்தட்ட சிவகங்கை வரையிலான அனைத்துத் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளுக்கும் சென்று இரவுப் பள்ளிகளைத் தொடங்கினார். ஆர்வமுள்ள படித்த இளைஞர்களை ஆசிரியர்களாக அமர்த்தி கல்வித் தொண்டு செய்தார். தொடக்கக் காலத்தில் நடந்தே பல ஊர்களுக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது. இதனால் மனம் சலிப்படையவில்லை. காடு மேடுகளில் நடந்து சென்று பள்ளிகளைத் தொடங்கினார். சில இடங்களில் இவர்தம் தொண்டிற்கு வரவேற்பும் சில இடங்களில் எதிர்ப்பும் இருந்தன. எல்லாவற்றையும் மனத்துணிவோடு எதிர்கொண்டு செய்த பணிகளுக்குச் சேவா சங்கத்திலிருந்தோ அல்லது வேறு எவரிடமிருந்தோ சம்பளமாக எதையுமே பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரவுப் பள்ளிகளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க அவ்வப்போது திரு. வைத்தியநாதய்யரும் அவர்தம் நண்பர்களும் கொடுக்கும் சிறிய தொகைக்கும் முறையான கணக்குகளை ஐயர் அவர்களிடம் கொடுத்து வந்தார். இந்தத் தனிமனித ஒழுக்கமே பிற்காலத்தில் இவர்தம் அரசியல் வெற்றிக்குப் படிகளாக அமைந்தன. ‘ஒழுக்கத்தின் எய்துவார் மேன்மை’ என்ற வள்ளுவரின் வாக்கு உண்மையானது என்று உணர்ந்து கொள்ள இதையுமொரு சான்றாகக் கொள்ளலாம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book