58

கால் நடைகளுக்குத் தீவனம் (இரை உணவு) கிடைப்பதற்குப் பரீட்சார்த்தமாகச் சில ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். அவையெல்லாம் சீக்கிரத்தில் அமலாக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். கால்நடைகள் தீவிரத் திட்டத்தின் மூலமாகக் கழிவுகள் உரப் பண்ணை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் புல் வளர்க்கப்பட்டு, நகரத்தில் இருக்கும் மாடுகளுக்கும் நல்ல தீனி கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இப்போது பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் பொறுப்பை வயதில் முதிர்ந்தவர்கள் ஏற்றுக்கொண்டு இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். நான் பஞ்சாயத்து யூனியன் தலைவர்களைக் கேட்டுக் கொள்வது கால்நடைகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில், ஆடு மாடுகளுக்குத் தீனி கிடைக்கும் வகையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதுதான்.

அந்த நிலங்களையெல்லாம் ஆக்கிரமித்து விடுகிறார்கள். பழச்செடிகள் வைத்து விடுகிறார்கள் என்று சொன்னார்கள். மேய்ச்சல் நிலங்களில் அந்த மாதிரிப் பழச்செடிகளை வைக்காமல் நல்லமுறையில் மேய்ச்சலுக்குத் தகுந்தவாறு அவற்றை வைத்துக்கொள்ள முன்வர வேண்டும் என்று இந்தச் சமயத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

நேற்யை தினம் (22.03.1965) அங்கத்தினர்கள் பேசும்போது, கிணறு வெட்டுவதிலே ‘ரிவர் பம்பிங் ஸ்கீமில்’ (ஆற்றுக்குழாய் நீர் மட்டத்தில்) பொதுவாகக் கிணறு வெட்டுவது பற்றிப் பலர் கூறினார்கள்.

ஸ்ரீமதி பொன்னம்மாள் அவர்களும் இதர அன்பர்களும் கூறினார்கள். குறிப்பாக, அந்தத் திட்டங்களை எடுத்துப் பார்ப்போமேயானால், பொதுவாகக் கிணறு வெட்டும்போது, நூற்றுக்கு நூறு அதிக லாபம் இல்லாவிட்டாலும் ரொம்ப நஷ்டம் (இழப்பு) வந்துவிடக் கூடாது. உணவு உற்பத்தியில் லாப நஷ்டத்தைப் பார்க்காமல் எவ்வளவு தூரம் விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற முறையிலேதான் பார்க்கிறோம்.

பொதுவாகக் கிணறு வெட்டும்போது, அதிலே அதிகமான தண்ணீர் இருந்தால்தான் பயன்படும். இல்லாவிட்டால் பயன்படாது. எங்கெல்லாம் பயன்படும் முறையிலேயே இருக்கிறதோ அங்கெல்லாம் (கூட்டுறவுச் சங்கங்கள்) மூலமாகப் பஞ்சாயத்து அதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

பஞ்சாயத்துகள் கூட அந்த மாதிரி நன்மை கிடைக்கும் என்ற வகையில் அந்தப் பொறுப்பை எடுத்துக்கொள்ள முன்வந்தால், அரசாங்கம் உதவிசெய்யும். அரசாங்கம் அளிக்கக்கூடிய கடன் உதவிக்கு வட்டி விகிதம் நிர்ணயம் பண்ணியிருக்கிறார்கள். அது அதிகமான வட்டியாக இருந்தால் அதைக்கூடப் பரிசீலிக்கலாம். சர்க்கார் (அரசு) போட்டிருக்கும் ஐந்தரை சதவிகித வட்டியைக் கொஞ்சம் குறைத்தால் கூட நல்லது என்று கனம் முதலமைச்சர் அவர்களை வேண்டிக் கொள்கிறேன்.

எப்படி இரசாயன உரங்களைப் பெறப் போகிறீர்கள், எப்படி உற்பத்தியைப் பெருக்கப் போகிறீர்கள் என்று சிலர் கேட்டார்கள். ‘மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் திட்ட வளர்ச்சி’ என்னும் புத்தகத்தைப் பார்த்தால் தெரியும். இரண்டாம் பக்கத்தில் இருக்கிறது.

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முடிவில் உணவு உற்பத்தியின் அளவு இம் மாநிலத்தில் 54.14 லட்சம் டன் ஆகும். மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் கூடுதல் உணவு உற்பத்தியின் சாதனை 16.50 லட்சம் டன்வரை இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டுத் திட்ட இறுதியில் உணவு உற்பத்தியின் அளவு 69.64 லட்சம் டன்களாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த அதிக உற்பத்தி குறித்து, புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

போதுமான இரசாயன உரங்கள் கிடைக்காததாலும், பாதகமான பருவங்களாலும் மூன்றாவது திட்ட இறுதியில் எதிர்பார்த்த கூடுதல் உணவு உற்பத்தியின் சாதனை 13.93 லட்சம் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

மதிப்பிற்குரிய நடராசன் அவர்கள் சொன்னபடி, மத்திய சர்க்காரில் இருந்து எவ்வளவு தூரம் அமோனியம் சல்பேட் போன்ற உரங்கள் பெற முடியுமோ, அவற்றைப் பெற்று உற்பத்தியை அதிகமாகப் பெருக்க அரசாங்கம் முன்வரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

நமக்குத் தேவையான 5.83 லட்சம் டன் வழங்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை இந்த மாநில அரசாங்கம் கேட்டிருக்கிறது. இன்றும் அதிகமாக வேண்டுமானால் அதையும் கேட்க இந்த அரசாங்கம் முன்வரும்.

மற்ற மாநிலங்களைப் பார்க்கும்போது இந்தியாவிலேயே நம் மாநிலத்தில்தான் இரண்டாவதாக அதிகப்படி உரங்கள் உபயோகிக்கப் படுகிறது. இந்தியாவில் ஏக்கருக்குச் சராசரி உபயோகிப்பதைப் பார்க்கும்போது, தமிழகத்தில் அதற்கு மூன்று மடங்கு இரசாயன உரத்தை உபயோகித்து வருகிறோம்.

எவ்வளவுக்கெவ்வளவு இரசாயன உரத்தை உபயோகிக்கிறோமோ அந்த அளவு உற்பத்தியும் அதிகமாகும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆகவே, அதிகப்படியான இரசாயன உரத்தைப் பெறுவதற்கு இந்த அரசாங்கம் எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

மத்திய அரசாங்கம் நம்மோடு கூடுமான வரையில் ஒத்துழைக்கிறது. உணவு உற்பத்தியைப் பெருக்க மத்திய அரசாங்கத்திலிருந்து இரசாயன உரம் எந்த அளவு வாங்க முடியுமோ அந்த அளவு வாங்குவதற்கு ஏற்பாடு செய்யலாம். முன்பு நாம்தான் (தமிழ் நாடுதான்) அதை உபயோகிப்பது இல்லை என்ற நிலை இருந்தது. இப்போது நம் விவசாயிகள் அதிகமான இரசாயன உரத்தை உபயோகிக்க முன்வருகிறார்கள்.

இப்போது அவர்கள், எங்களுக்கு இரசாயன உரம் கிடைக்கவில்லையே! என்றுதான் சொல்கிறார்கள். ஆகவே, இரசாயன உரம் உபயோகித்து உற்பத்தி பெருக்கப்பட்டு வருகிறது. உற்ற சமயத்தில் அந்த உரம் கிடைப்பது இல்லை என்று சில கனம் உறுப்பினர்கள் கூறினார்கள். கிடைத்தவுடன் காலாகாலத்தில் கொடுக்க வேண்டும் என்றுதான் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

திரு. கரியமாணிக்க அம்பலம் அவர்கள், விலை நிர்ணயம் செய்து உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் கட்டளை. ஒரு சில இடங்களில் அதிகாரிகள் தவறு செய்வதனால் அது அரசாங்கத்தைப் பாதிக்கிறது.

அதிகாரிகள் இதை உணர வேண்டும். இங்ஙனம் அவர் ஆற்றிய உரையிலிருந்து அவரது பொறுப்புணர்வும் தவறு நடந்தால் ஏற்றுக்கொள்ளும் ஆண்மையும், அதனைக் களைவதற்கான முயற்சியும் கக்கனிடம் இருந்தது என்று தெரிகிறது.

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book