54

1957ஆம் ஆண்டு காமராசர் தலைமையிலான அமைச்சரவையில் கக்கன், வேளாண்மை, கால்நடைக் காப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் ஆகியவற்றின் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். பிறகு 1962ஆம் ஆண்டு காமராசர் தலைமையில் மீண்டும் அமைச்சர் ஆனார். 1963ஆம் ஆண்டு பக்தவச்சலம் தலைமையிலான அமைச்சரவையிலும் அமைச்சரானார். இந்த அமைச்சரவையில் மிகப் பெரிய பொறுப்புத் துறைகளான உள்துறை, காவல்துறை, நீதி மற்றும் சிறைத்துறை, தொழிலாளர் நலத்துறை, அறநிலைத்துறை மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலத்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தது வரலாற்றில் நினைவு கொள்ள தக்கது. இவருக்கு முன்னும் பின்னும் தனித்தொகுதியில் நின்று வெற்றி பெற்று அமைச்சரான எவரும் இத்துணைத் துறைகளைக் கொண்டு அமைச்சராக இருந்ததில்லை என்றே சொல்லலாம்.

வேளாண்மை

விடுதலைக்குப் பின் நாட்டின் நலன் என்பது அடிப்படைக் கல்வி, உணவு உற்பத்தி, சாலை மேம்பாடு, நீர்ப்பாசனம் போன்ற துறைகளில் கவனம் செலுத்துவது தான். ஆனால், மேற்சொன்ன துறைகளில் இடப்படும் திட்டங்கள் நீண்டகாலம் பயன்தரும் திட்டங்களாக அமைந்தால்தான் நாட்டின் வளர்ச்சியைக்கான முடியும். இதனை மனத்தில் கொண்டு இவர் முதன் முதலில் அமைச்சரான 1957லேயே நீண்டகால வேளாண்மைத் திட்டங்களை வகுத்தார். 1963/66 ஆம் ஆண்டு உணவு காலக்கட்டத்தில் தானிய உற்பத்தி 65 இலட்சம் டன் என்ற அளவை எட்ட வேண்டும் என்ற மிகப்பெரிய திட்டத்தை முன்வைத்து செயற்பட்டார். இதற்காக உர விற்பனையை முறைப்படுத்தி விவசாயிகளின் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தார். மேலும் பசுந்தாளுரம் என்பதை அறிமுகம் செய்து ஊராட்சி ஒன்றியத்தின் மூலமாக அதை நடைமுறைப்படுத்தினார். கூட்டுறவு விற்பனைக் கூடங்கள் தொடங்கி விவசாயிகளுக்கான பொருள்கள் வழங்க ஆவன செய்தார்.

அணைக்கட்டுகள்

தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான அணைக்கட்டுத் திட்டங்கள் இவர் காலத்தில்தான் திட்டமிடப்பட்டன. ஆரணி, மணிமுத்தாறு, அமராவதி போன்ற அணைக்கட்டுப் பாசனத் திட்டங்கள் வடிவமைத்து நடைமுறைப்படுத்தப்பட்டன.

மேலும், மேட்டூர் அணையின் உயரத்தை அதிகரிக்கத் திட்டம் கொண்டு வரப்பட்டதை நினைவு கூரவேண்டும். வைகையாறு, பாலாறு ஆகிய திட்டங்கள் வறண்ட தென்மாவட்டங்களான மதுரை, இராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களின் பாசன நலனுக்கென்றே கொண்டவரப்பட்டன.

இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் 1959ஆம் ஆண்டு செப்டம்பர் ஏழாம் நாள் கக்கனால் திறந்து வைக்கப்பட்ட ‘பூண்டி நீர்ப்பாசன ஆய்வு மையம்’ தமிழகத்தின் நீர்ப்பாசன திட்டங்களின் முத்தாய்ப்பாக அமைந்தது.

ஒவ்வொரு நிதிநிலைக் குழுவையும் சந்தித்து அணைக்கட்டுத் திட்டங்களுக்கான நிதியைத் தடையின்றிப் பெற்று, அந்தந்தக் கால இடைவெளிக்குள் செய்து முடித்தார் என்பதும் சில அணைக்கட்டுகள் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதிக்குள்ளாகவே கட்டி முடிக்கப்பட்டு அரசு செலவில் சேமிப்புக் காட்டப்பட்டது என்பதும் தமிழக வரலாற்றில் நினைவு கொள்ளத்தக்கனவாகும்.

இந்திய நாட்டின் அழைப்பை ஏற்று இந்தியா வந்திருந்த செருமானிய நாட்டு வேளாண் அமைச்சர் எச்.கோய்ச்சல் கலந்த கொண்ட உயர்மட்டக்குழு கூட்டத்தில் கக்கனும் கலந்து கொண்டார். 8.2.1967ஆம் ஆண்டு கையொப்பமான இந்தோஜெர்மன் விவசாய ஒப்பந்தம் நடைபெறுவதற்குக் கக்கனும் ஒத்துழைத்தார். விவசாயிகளின் விளைபொருளுக்குத் தகுந்த விலை தரப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book