53

பெருந்தலைவர் காமராசர் பல நேர்வுகளில் கக்கனின் இல்ல உறுப்பினராகவே நடந்திருக்கிறார். கக்கனின் மகள் கஸ்தூரி, பள்ளியில் படிக்கும் காலத்தில் மாநகரப் பேருந்திற்குக் காத்திருக்கும் வேளையில் மகிழுந்தில் போகும் பெருந்தலைவர் தமது மகிழுந்தை நிறுத்திக் கஸ்தூரியைத் தம்முடன் அழைக்க, தயக்கம் காட்டிய கஸ்தூரியிடம். ‘இது பெரியப்பா கார் தானம்மா தயங்காமல் ஏறிக்கொள்’ என்று அன்புடன் அழைத்து வீட்டில் விட்டுச் சென்ற நிகழ்வும் உண்டு. ஒரு தொண்டனைக் காணப்பெருந்தலைவர் வீடு தேடி வந்தார் என்ற செய்தி மிகவும் மகிழத்தக்க செய்தி என்பதைவிடக் கக்கனுக்கும் காமராஜருக்கும் இருந்த நெருக்கத்தைக் காட்ட இதைவிட வேறு சான்று தேவையில்லை.

இதனை உறுதி செய்ய 1996ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் தினமலர் நாளிதழ் வெளியிடும், வாரமலரில் நடராசன் என்பவர் எழுதி வெளியான கடிதம் சான்றாக அமைந்துள்ளது. கக்கனிடம் நீண்ட நாள் நேர்முக உதவியாளராய் இருந்த கே.ஆர். நடராசன்தான் இந்த மடலை எழுதி இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது, இதோ அக்கடிதத்தின் ஒரு பகுதி,

மயிலை அஜந்தா ஹோட்டல் பக்கத்துச் சந்தில், கிருஷ்ணாபுரம் தெருவில் இருந்த வாடகை வீட்டிற்குத், திடீரென்று ஒருநாள் மாலை 7.00 மணியளவில் கக்கன்ஜியைப் பார்க்கக் காமராசர் வந்தார். காமராசர் வருவார் என்று கக்கன்ஜி கனவிலும் எண்ணியிருக்க மாட்டார். பெரியவரைப் பார்த்ததும் நிலை தடுமாறி விட்டார், ‘என்னங்கய்யா நீங்க என் வீட்டுக்கு வருவதா?’ என்று சொல்லி முடிப்பதற்கும், ‘ஏன் நான் வந்தது தப்பா?’ என்றார் அந்த ஏழைப் பங்காளரான காமராசர்.

சரி, சரி….. என்ன கக்கன்வீடு ரொம்ப சின்னதா இருக்கு? உங்கள் குடும்பமோ பெரிசு, இருந்தாலும், ‘அட்ஜஸ்ட்’ செஞ்சிப்பீங்கன்னு எனக்குத் தெரியும்’. என்றார் காமராசர், காமராசரின் கைகளைப்பற்றிக் கொண்டு கக்கன்ஜி சொன்னார்.

தும்பைப்பட்டி என்னும் குக்கிராமத்தில் தோட்டி பூசாரிக்கக்கனின் மகனாகப் பிறந்த என்னை, ஊருக்கு, நாட்டிற்குத் தெரிய வைத்து ஸ்தாபனத் தலைவராக்கினீர்கள்; பத்தாண்டுகள் மந்திரியாகவும் இருக்கச் செய்தீர்கள்; முக்கியமான இலாகாக்களின் பொறுப்புகளையும் என்னிடம் நம்பிக் கொடுத்தீர்கள். இதுவே எனக்குப் போதும்.’ என்று கக்கன் நாத்தழுதழுக்கச் சொன்னார், காமராசர் நெகிழ்ந்து போனார்!.

புறப்படுமுன் உரிமையுடன் காபியைக் கேட்டு வாங்கி அருந்திச் சென்றார் காமராசர். செல்லுமுன், வீட்டை ஒருமுறை வலம் வந்தார், அக்கம் பக்கத்துக்காரர்கள் எல்லாரும் வியப்புடன் தலைவரையும் தொண்டரையும் பார்த்து மனம் நெகிழ்ந்தனர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book