52

ன்றைய அரசியல் சூழல்களை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, உண்மையான தொண்டன் யார்? என்று அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை. தமது அரசியல் உயர்விற்காகத் தொடர்வண்டி நிலையத்தில் பலநூறு பொது மக்கள் முன்னிலையில் காலில் விழுந்து வணங்கி வரவேற்ற தொண்டன் கூடத் தனது தலைவனை எதிர்த்து ஒரு தனிக்கட்சி தொடங்கும் அவல நிலையைத் தமிழகத்தில் காண முடிகிறது. ஆனால், எந்தச் சூழலிலும் தம்மை மாற்றிக் கொள்ளாமல் பெருந்தலைவர் காமராசரைத் தலைவராக ஏற்று நடந்து கொண்ட கக்கனை, அரசியல் உலகம் வியப்புடன் நினைத்துப் பார்க்கிறது.

1967 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிந்து, அத்தேர்தலில் கட்சி பெற்ற இடர்பாடுகளை ஆராய்ந்து, மாநிலப் பொறுப்பாளர்களை நியமனம் செய்யப் பெருந்தலைவர் காமராசர் முனைப்பாகச் செயல்பட்டார். மாநிலத் தலைவராகத் திரு.சி.சுப்பிரமணியம் அவர்களையும், கக்கனைத் துணைத் தலைவராகவும் நியமனம் செய்யப் போவதாக செய்திகள் வெளியாயின. 1955 ஆம் ஆண்டு மாநிலத் தலைவராகவும் அதன்பின் அமைச்சராகவும் இருந்து கட்சியில் மூத்த தலைவர் என்ற நிலையை அடைந்த கக்கனை சி.சுப்பிரமணியம் அவர்களின் கீழ்த் துணைத்தலைவராக நியமனம் செய்வதைக் கக்கனின் மீது அன்பு கொண்ட பாரமலை போன்ற பல தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் திரு.பாரமலை, கக்கனைச் சந்தித்து ‘இந்த உதவித்தலைவர் நியமனத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது. மூத்த தலைவரான உங்களை இழிவுபடுத்துவது போல இருக்கிறது’ என்று வாதிட்டார். ஆனால், கக்கன் அந்த வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘பெருந்தலைவரை நம் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். தலைவர் என்ன ஆணையிடுகிறாரோ அதை ஏற்று நடைமுறைப்படுத்துவதே ஒரு தொண்டனின் கடமை’ என்று கூறிவிட்டார் என்றாலும், திரு. பாரமலை பெருந்தலைவரைச் சந்தித்து நிலைமையை விளக்கிக் கூறினார். ‘நீ சொல்வதெல்லாம் சரிதான் எனக்கும் அது தெரியாமல் இல்லை. ஆனால், அவர் தேர்தலில் தோற்று சென்னையில் இருக்க இடமின்றி இருக்கிறார். அவர் தொடர்ந்து அரசியல் நடத்தவும் அவரைச் சென்னையில் தங்க வைக்கவும் இதைத்தவிர அரசியலில் வேறு வழி எனக்குத் தெரியவில்லை. உனக்குத் தெரிந்தால் சொல்’ என்றார் காமராசர். காங்கிரஸ் கட்சியின் மிக உயர்ந்த பதவியான அகில இந்திய காங்கிரஸின் தலைமைப் பொறுப்பில் இருந்தாலும் கக்கன் என்ற ஒரு தனிப்பட்ட மனிதரின் மீது எத்துணை அளவு பெருந்தலைவரின் தனிப்பட்ட பார்வை இருந்தது என்பதைப் பாரமலை இன்றும் நினைவு கூறுகிறார்.

தாம் மூத்த கட்சித்தலைவர்களில் ஒருவராக இருந்தாலும் பெருந்தலைவரால் கொடுக்கப்பட்ட தமிழகத்தின் மாநிலத் துணைத்தலைவர் பொறுப்பை ஏற்றுப் பணியாற்றி வந்தார். தலைவரின் ஆணை தொண்டனின் கடமை என்ற அளவில் அவரை வைத்து கொண்டாரே தவிர வேறு எந்தவித உயர்வு தாழ்வு என்ற சிந்தனைக்கும் தமது மனத்தை ஆட்படுத்திக் கொள்ளவில்லை.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book