51

நானும் அவரும் (அமைச்சர் கக்கன்) ஒரு சமயம் ஒரே இரயில் பெட்டியில் பிரயாணம் செய்ய நேர்ந்தது. இருவரும் மதுரை விருந்தினர் விடுதியில் ஒன்றாகத் தங்கினோம்.

நான் அக்காலத்தில் மிகவும் ஆடம்பரப் பிரியனாய் இருந்தேன். எலக்ட்ரிக் ஷேவரில் தான் சவரம்.ஒடிகோலன் கலந்த After Shave Lotion, ஸ்நோ பவுடர் இத்யாதிகளுடன் நான் இருப்பதைப் பார்த்துச் சிரித்தார் திரு.கக்கன்.

இது என்னங்க அவ்வளவு பெரிய வேலையா? நம்ம வழக்கம் இவ்வளவு தாங்க’ என்று சொல்லி ஒரு பிளேடை எடுத்தார். குறுக்கில் பாதியாக உடைத்தார். ஒரு பாதியால் மளமளவென்று முகச்சவரம் செய்து கொண்டார். ஒரு கீறல், ஒரு வெட்டு, சிறு ரத்தக் கசிவு ஒன்றுமில்லாத அந்த லாவகத்தை நான் ரசித்தேன்.

அவரது குரலும் சிரிப்பும் என் செவியில் இப்போதும் ஒலிக்கிறது. சிந்தையில் அவர் முகம் தெரிகிறது. மேலும் திரு.கக்கன் சொன்னார்,

இது ஜெயிலிலிருந்த காலத்துப் பழக்கம், மந்திரியானா மாறிடுமா? ஒரு சின்ன வித்தியாசம் உண்டுங்க, அந்தப் பாதியை இப்ப சமயத்திலே மறந்து அப்படியே போட்டுடறேன். முந்தியெல்லாம் அதையும் பத்திரமா எடுத்து வெச்சுக்குவோம். எப்பவும் சிக்கனமா இருக்கிறது தாங்க நல்லது’

நான் காந்திஜியை நினைத்தேன்

ஜெயகாந்தனின்,

யோசிக்கும் வேளையில்….’ என்ற நூலிலிருந்து.

இவ்வாறு தமது வாழ்வின் அனைத்து நிலைகளிலும் காந்தியின் தொண்டனாக வாழ்ந்து காட்டியவர் கக்கன். அரசியலில் பெறுகிற வெற்றி என்பது தொண்டு செய்ய மக்கள் தமக்கு வழங்கும் ஆயுதம் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டிருந்தார். ‘சமுதாயத் தொண்டு செய்ய அரசியல் பணியின் உதவியை எடுத்துக் கொள்கிறேன்’ என்ற காந்தியடிகளின் வாக்கினைக் கக்கன் தமது வாழ்க்கையாகவே அமைத்துக் கொண்டார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book