50

ருநாள் ஆளுநர் மாளிகை விருந்திற்காக அன்றைய சட்டமன்ற உறுப்பினர் டி.பி.ஏழுமலை மற்றும் அமைச்சர் கக்கன் இருவரும் கிளம்பினர். வீட்டுப் படிகளில் ஆவலுடன் நின்ற கக்கனின் பிள்ளைகளான காசிவிஸ்வநாதன், சத்தியநாதன் ஆகியோர் முகங்களைக் கண்டு அப்பிள்ளைகளையும் கக்கனின் தம்பி விஸ்வநாதனையும் கக்கன் விருந்திற்கு அழைத்தார்.அனைவரும் ஆர்வமுடன் ஆளுநர் மாளிகை விருந்திற்கு மகிழுந்தில் சென்று கொண்டிருந்தார்கள். பிள்ளைகளையும் தம்பியையும் தம்முடன் வர அனுமதித்த கக்கன் ஆளுநர் மாளிகையை நெருங்கியதும் பிள்ளைகளின் உடையைக் கவனித்தார். ‘கதர்ச்சட்டை போடாமல் ஆளுநர் மாளிகைக்குப் போகலாமா?’ என்று தமக்குத் தாமே கேட்டுக் கதராடை அணியாததால் அவர் கொண்ட கோபத்தைச் சொற்களால் பிள்ளைகளிடம் காட்டினார். உடனே மகிழுந்தையும் நிறுத்தச் சொன்னார். தம் மகன்கள் இருவர் மற்றும் தம் தம்பி விஸ்வநாதன் மூவரையும் ஆளுநர் மாளிகையின் முகப்பில் இறக்கி விட்டுப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பேருந்தில் வீட்டிற்குப் போகும்படி தம்பி விஸ்வநாதனைப் பணித்தார். பிள்ளைகள் இருவரும் அழத் தொடங்கினர். உடன் இருந்த டி.பி ஏழுமலை சமாதானம் சொல்லியும் கக்கன் சமாதானம் அடையவில்லை. ‘கதர்ச்சட்டை அணியாமல், என்னுடன் வரலாமா? அதுவும் ஆளுநர் மாளிகைக்குச் செல்லலாமா?’ என்று கூறும்போதே மகிழுந்து நகர்ந்தது. ஆசையாக விருந்துண்ண வந்த குழந்தைகள் அழுத கண்ணீரோடு வீடு திரும்பினர். அத்துணை அளவிற்குக் கதராடை அணிவதைத் தமது வாழ்க்கையோடு வாழ்க்கையாகக் கொண்டு நடந்தார். பிறரும் அவ்வாறு நடக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்தார். ‘எளிமையே எனது வாழ்க்கை’ என்று மக்களுக்கு நடந்து காட்டிய காந்தியடிகளின் வாழ்க்கை நடைமுறையில் கக்கன் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் காந்தியத் தொண்டனாகவே வாழ்ந்து காட்டினார். இதை எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘யோசிக்கும் வேளையில்’ என்ற நூலிலிருந்து ‘அரைபிளேடும் அமைச்சரும்‘ என்ற தலைப்பில் குமுதம் வார இதழ் வெளியிட்ட துணுக்குச் செய்தி நமக்கு உறுதி செய்கிறது. இதோ அச்செய்தி

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book