5

காந்தியடிகள் உப்புச்சத்தியாகிரகப் போராட்டம், லண்டன் வட்டமேசை மாநாடு இவைகளில் கலந்து கொண்ட பிறகு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 25.01.1934ஆம் நாள் மதுரை வந்த காந்தியடிகள் மதுரைக் காந்தி என்று போற்றப்படும் என்.எம்.ஆர்.சுப்பராமன் அவர்களின் வீட்டில் தங்கியிருந்தார். அதுசமயம் சுப்பராமன் அவர்கள் கக்கனைக் காந்தியடிகளிடம் அறிமுகம் செய்து வைத்தார். 21.1.1934 ஆம் நாள் காந்தியடிகள் மேலூருக்கும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் வருகை தந்தார். அப்போது காந்தியடிகளுடன் கக்கனும் சென்றார். இந்த நேரடி அனுபவம் காந்தியக் கோட்பாடுகளையும் கடையனையும் கடைத்தேற்றும் சர்வோதயக் கோட்பாடு களையும் நல்ல முறையில் தெரிந்து கொள்ள கக்கனுக்கு வாய்ப்பை நல்கியது மட்டுமின்றி, அவற்றில் முழுஈடுபாடு கொள்ளவும் வழிவகை செய்தது. இக்காலக் கட்டத்தில்தான் வைத்தியநாதய்யரிடம் கக்கனுக்கு மிக நெருக்கம் ஏற்பட்டது. வைத்தியநாதய்யர் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 8.7.1939ஆம் நாள் ஐந்து அரிசனங்களும், நாடார் வகுப்பைச் சேர்ந்த ஒருவரும் அழைத்துச் செல்லப்பட்டு, அம்மனையும், சுவாமியையும் தரிசித்து வழிபட்டுவிட்டு வந்தனர். அவ்வாறு சென்றவர்கள், மதுரை மாவட்டக்கழக உறுப்பினர் பி.கக்கன், அரிசன சேவாலய ஊழியரான முத்து, மதிச்சியம் வி.எஸ்.சின்னையா, விராட்டிபத்து பி.ஆர்.பூவலிங்கம், ஆலம்பட்டி சுவாமிமுருகானந்தம், விருதுநகர் நகராட்சி உறுப்பினர் எஸ்.எஸ்.சண்முகநாடார் ஆகியோர் ஆவர்.

தும்பைப்பட்டிக் கிராமத்திலிருந்து 45கி.மீ தொலைவில் இருக்கும் மதுரைத் திருமங்கலத்திற்குத் தாம் வாங்கும் ஊதியத்தில் எட்டணாவைக் மகனிடம் கொடுக்க தந்தை பூசாரிக்கக்கன் நடந்தே வந்து கொடுத்து விட்டுத் திரும்புவார். பொருளாதார வசதியின்மையும், இருப்பதைப் பேருந்திற்குச் செலவு செய்து விட்டால் பிள்ளைக்கு எதைக் கொடுப்பது என்ற சிந்தனையுமே இதற்குக் காரணம் என்றாலும், கல்வியின் மேல் கொண்ட காதலால் தொலைவு தெரியவில்லை; நடையையும் பொருட்படுத்தவில்லை. மாதங்கள் உருண்டோடின; கக்கன் தேர்வெழுதினார்; ஆனால், தேர்ச்சி அடையவில்லை.

இவர் திருமங்கலத்துப் பள்ளியில் தங்கியிருந்த காலங்களில் இரவில் வந்து தங்கிப் போகும் பல விடுதலை வீரர்களின் தொடர்பு கிடைத்தது. அவர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிட்டியதால் கல்வியில் மனம் செல்லவில்லை என்பதை உய்த்துணரலாம்.

தந்தை பூசாரிக் கக்கனின் ஆசை நிறைவேறவில்லை; மேற்கொண்டு படிப்புத் தொடரவில்லை. தம் மகனுக்கு இந்திய நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பதவி வந்த போதும் மாநில சட்டமன்றத்தில் அவர் அமைச்சரானபோதும் கூட தம் மகன் உயர்படிப்புப் படிக்கவில்லையே என்ற ஏக்கத்தைத் தந்தை பூசாரிக் கக்கன் வெளிப்படுத்தியுள்ளார். இருந்தும் தம்மகனை அவையத்து முந்தியிருக்கச் செய்து விட்டாரே என்று வியப்பும் உண்டாகிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book