49

க்கன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலம். ஒரு பொது நிகழ்ச்சிக்கு அழைத்துப் போக அன்றைய சட்டமன்ற உறுப்பினர் டி.பி.ஏழுமலை கக்கனின் வீட்டிற்கு வந்திருந்தார். மரபு மாறாமல் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும் மகிழுந்தில் புறப்பட்டனர். செல்லும் பாதையில் சாலைப்பணிகள் நடந்து கொண்டிருந்தன. பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டே சென்றார். அச்சாலைப் பணிகளை ஒப்பந்தமெடுத்துச் செய்து கொண்டிருப்பவர் ஏழுமலையின் நண்பரும் அவரால் உருவாக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவருமாவார். அந்த ஒப்பந்தக்காரர் அமைச்சர் கக்கன் வருவதைக் கண்டு இருகரம் கூப்பி வணங்கினார். கக்கனும் திரும்ப வணங்கி விட்டுத் தன்னுடன் மகிழுந்தில் அமர்ந்திருக்கும் ஏழுமலையின் பக்கம் திரும்பினார். பார்வையின் பொருளைப் புரிந்து கொண்டு ஏழுமலை ‘இவர் தாம் இந்தச் சாலைப்பணியை ஒப்பந்தம் எடுத்துச் செய்பவர். நம்மக் கட்சிக்காரர்’ என்று சொன்னார். ‘அப்படியா?’ என்று தலையசைப்போடு அவருக்கே உரித்தான புன்னகையோடு வேறு செய்திகளைப் பேசிக் கொண்டு நிகழ்ச்சிக்குச் சென்றார். நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது மாலை 5மணியிருக்கும், எந்த இடத்தில் நின்று அந்த ஒப்பந்தக்காரர் வணக்கம் போட்டாரோ அந்த இடம் வந்ததும் மகிழுந்தை நிறுத்தச் சொன்னார். கக்கன் கூட இருந்த ஏழுமலைக்குக் காரணம் விளங்கவில்லை. ஏழுமலையை இறங்கச் சொல்லி தாமும் இறங்கினார். சாலைப்பணிகள் எப்படி செய்யப்பட்டுள்ளன? என்று பார்வையிட்டார். ‘நீங்கள் பார்வையிடுவதாகச் சொல்லியிருந்தால் அந்த ஒப்பந்தக்காரரை இங்கேயே இருக்கச் சொல்லியிருப்பேனே’ என்றார். ஏழுமலை, ‘சரிசரி பார்க்கலாம்’ என்று சொல்லி மகிழுந்து ஒட்டுனரை அழைத்துச் சாலையைத் தோண்டச் சொன்னார். அச்சாலைப் பணியில் இடப்பட்டிருக்கும் கருங்கல், கப்பி, மண் முதலியவற்றின் அளவுகளை உத்தேசமாகக் குறித்துக் கொண்டு வீடு திரும்பினார்.

மறுநாள் காலை அச்சாலைப் பணிக்குப் பொறுப்பான செயற்பொறியாளரை அழைத்து ஒப்பந்தப்புள்ளியில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருங்கல், கப்பி, மண் ஆகிய அளவுகளுடன் தாம் குறித்துக் கொண்டு வந்த அளவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தார். ஒப்பந்தப்புள்ளியில் குறிப்பிட்டுள்ளது போல் பணி நடைபெறவில்லை என்பதைத் தெரிந்து உறுதி செய்து கொண்டு, அப்பணியைத் தொடர வேண்டா என்றும் செய்த பணிகளுக்குக் காசோலை வழங்க வேண்டா என்றும் ஆணையிட்டார். மேலும், அந்த ஒப்பந்தக்காரருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பணிகளையும் நிறுத்திவிட உத்தரவிட்டார். நடந்த செய்தியை அறிந்த ஒப்பந்தக்காரர் சட்டமன்ற உறுப்பினர் ஏழுமலையை அணுகி அமைச்சர் கக்கன் செய்துள்ள தடைகளை விலக்கி எப்படியும் சரிசெய்து தரும்படி வேண்டிக்கொண்டார். அவ்வேண்டுகோளை ஏற்ற ஏழுமலை கக்கனைச் சந்தித்துக் கேட்டார். ‘என்ன ஏழுமலை, நமக்கு மக்கள் கொடுத்திருக்கிற இந்தப் பதவி, நாம் ஏதாவது நல்லது செய்வோம் என்று நம்பித்தானே கொடுத்திருக்கிறார்கள், அந்த மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நாம் இருக்க வேண்டாவா?, ஒருவர் மக்களுக்குத் துரோகம் செய்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு அதைத் தடுக்காமல் இருந்து விட்டால் நாமும் மக்களுக்குத் துரோகம் செய்கிறோம் என்றுதானே ஆகும். அப்படி மக்களுக்குத் துரோகம் செய்வதற்காகப் பதவியில் இருக்கலாமா?’ என்று கக்கன் கேட்ட விதத்தில் ஏழுமலையின் கண்கள் பனித்தன. இவர் கலங்குவதைக் கண்ட கக்கன் ‘கோபித்துக் கொள்ளாதீர்கள் ஏழுமலை நீங்களும் என்னைப் போன்று பொதுநலன் செய்வதற்காகவே பதவிக்கு வந்தவர் அதனால்தான் இவ்வாறு கூறினேன். கொடுத்த வேலையை முறையாகச் செய்து நமது மக்கள் நம்மீது கொண்ட நம்பிக்கையைக் காப்பாற்றச் சொல்லுங்கள்’ என்று கூறி அனுப்பினார். நெஞ்சம் கனக்க அமைச்சர் அறையை விட்டு வெளியேறிய ஏழுமலை கக்கன் சொன்னதை அப்படியே மனத்தில் கொண்டு அந்த ஒப்பந்தக்காரரை முறையாகப் பணிகளைச் செய்ய வேண்டிக் கொண்டார். அதுபோலவே அச்சாலைப் பணிகள் மீண்டும் சரியாகச் செய்த பின்னரே காசோலை வழங்கப்பட்டது. பிற பணிகளையும் தொடர்ந்து செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நூலாசிரியரிடம் உடல்நலக்குறைவைப் பொருட்படுத்தாமல் ஆர்வமுடன் இச்செய்தியைக் கூறிய ஏழுமலை, சொல்லி முடிக்கும் போது நாத்தழுதழுத்துப் போனார். ‘தமது கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தமது கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் வந்து கேட்டுக் கொண்டாலும் மனமறிந்து மக்களுக்குத் துரோகம் செய்வதை ஏற்றுக் கொள்ளாத மக்கள் தொண்டன்’ என்று சொல்லி மனம் நெகிழ்ந்தார் ஏழுமலை.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book