46

ன்று திரு..ஜி.அருள் தமிழகத்தின் காவல்துறைத் தலைவராக (இன்ஸ்பெக்டர் ஜெனரல்) இருந்தார். அவ்வமயம் தமிழகத்திலுள்ள அனைத்துக் கல்லூரி விளையாட்டுப் போட்டிகள் ஓய்.எம்.சி..விளையாட்டு மைதானத்தில் நடந்தது. அதில் 800 மீட்டர், 1500மீட்டர் ஒட்டப் பந்தயங்களில் முதல் பரிசு பெற்ற கக்கனின் தம்பி விஸ்வநாதனைப் பார்த்த, அந்த நிகழ்ச்சியின் தலைவரான ஐ.ஜி.அருள், ‘அவ்வளவு திறமை வாய்ந்த நீ ஏன் காவல்துறையில் சேரக்கூடாது?’ என்ற கேள்வியைக் கேட்டார். மேலும் விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற சான்றிதழ்களுடன் காவலர் பணிக்கு விண்ணப்பிக்கச் சொன்னார்.

அவரது ஆலோசனைப்படி விஸ்வநாதனும் விண்ணப்பித்தார். விளையாட்டு வீரர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் காவல்துறைத் துணை ஆய்வாளர் பணியிடத்திற்கு விஸ்வநாதனை நியமனம் செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார் அருள். வேலையில்லாமல் இருக்கும் விஸவநாதனுக்கு இது மிகப்பெரிய செய்தியாகவும் உதவியாகவும் தோன்றியது. அந்த மகிழ்ச்சியைக் குடும்ப உறுப்பினர் அனைவரிடமும் கூறி மகிழ்ந்தார். எப்படியோ இந்தச் செய்தி அமைச்சர் கக்கன் செவிகளுக்கு எட்டியது. உடனே காவல்துறை உயர் அதிகாரியான அருள் ஐ.ஜி. அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரத்தைக் கேட்டறிந்தார். ‘நல்ல விளையாட்டு வீரன் என்கிற முறையில் நான் உதவினேன்’ என்று அருள் சொன்னதும் ‘அவனது தகுதி தெரியாமல் நியமனம் செய்வது முறையா’? என்று கேட்டார். அதிகாரி அருளுக்கு விளங்கவில்லை. ‘விஸ்வநாதனின் வலதுகை விரல்கள் சரியாக செயற்படாது. அதனால் அவனால் துப்பாக்கி சுட முடியாது. அந்த நிலையில் குறையுடையவனை நாட்டின் பாதுகாவலர் பணிக்குத் தெரிவு செய்யலாமா’? என்ற கேள்வியையும் கேட்டு வழங்கவிருக்கும் ஆணையை நீக்கம் செய்யவும் ஆணையிட்டார்.

உதவி ஆணையாளர் பணிக்கு அனைத்துத் தகுதிகளும் கொண்ட விஸ்வநாதன் அதன்பின் ஐ.ஜி.அருளைச் சந்தித்தார். இளமையில் விளையாடும் போது தவறி விழுந்ததையும், வலது முழங்கையின் மேற்புறத்தில் அறுவைச் சிகிச்சை நடந்ததையும் அதனால் ஏற்பட்ட பின்விளைவால் சுண்டு விரலும் அதற்கு அடுத்த மோதிரவிரலும் சற்று வளைந்து இருப்பதையும் காட்டி விளக்கினார். அதைக் கண்ட ஐ.ஜி.அருள் ‘இதற்காகவா அமைச்சர் அப்படிக் கூறினார்’ என்று வருந்தினார்.

தமக்கு அப்பணி கிடைக்கவில்லை என்பதில் அன்று மனம் வருந்திய விஸ்வநாதன் இன்று தமது அண்ணனின் உண்மையான உள்ளத்தைப் போற்றி மகிழ்கிறார்.

கக்கன், தன் தம்பி என்றும் பாராமல் சிறுகுறை கூட இல்லாத தகுதி வாய்ந்தவர்கள் மட்டுமே அப்பதவியைப் பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்ததைப் பொதுமேடைகளில் பலர் நினைவுகூர்கின்றனர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book