44

க்கன் அமைச்சராக இருந்த காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.பி.ஏழுமலை கக்கனிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அதனால், அவரது வீட்டிற்குச் சென்று வருவது வழக்கம். அப்படி ஒருநாள் வீட்டிற்குச் சென்றிருந்த போது குடிப்பதற்குத் தேநீர் அல்லது குளம்பி (காபி) கொண்டு வரச் சொன்னார் கக்கன். பால் இல்லை என்பதைத் தயங்கித் தயங்கி அவரது மனைவி சொல்ல, ஏழுமலை அதிர்ந்து போனார். ‘அமைச்சர் வீட்டில் பால் இல்லையா? அப்படியானால் ஒரு பசுமாடு வாங்கிக் கொள்ள வேண்டியது தானே’ என்று ஆலோசனை சொன்ன ஏழுமலையிடம் தமது இயற்கையான புன்னகையை மட்டுமே பதிலாகச் சொல்லி அனுப்பி விட்டார் கக்கன். என்றாலும், வீட்டில் அவரது மனைவியிடம் கலந்து ஆலோசித்து பசுமாடு ஒன்று வாங்கத் திட்டமிடப்பட்டது. அத்திட்டப்படியே திருவொற்றியூர்ச் சந்தையிலிருந்து 150 ரூபாய்க்கு மாடு வாங்கிக் கொண்டு வந்தார் ஏழுமலை. இச்செய்தியை அறிந்த கக்கன் ஏழுமலையை அழைத்து ‘நீங்கள் மாடு வாங்கிக் கொண்டு வந்ததில் மிகவும், மகிழ்ச்சி, ஆனால் ஒப்புகைச் சீட்டு (ரசீது) எங்கே? என்று கேட்டார். ஏழுமலைக்கு ஒன்றும் விளங்காமல் திகைத்தார். ‘எதற்கு ஒப்புகைச்சீட்டு? சந்தையில் மாடு விற்பவன் ஒப்புகைச்சீட்டு எப்படிக் கொடுப்பான்?’ என்று பதிலுரைத்த ஏழுமலையிடம் ‘அமைச்சராக இருக்கும் நான் எந்தப் பொருள் வாங்கினாலும் அதற்கு ஒப்புகைச் சீட்டு வைக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உங்களுக்கு இது தெரிய வேண்டாவா?’ என்று கூறி எப்படியும் ஓர் ஒப்புகைச் சீட்டு வாங்கி வரச் சொன்னார்.

சந்தையில் மாடு விற்றவன் யார்? அவனை எங்கே தேடுவது?’ என்று ஏழுமலை கூறியும், கக்கன் விடுவதாக இல்லை. ‘ஒப்புகைச்சீட்டுக் கொடுக்க முடியவில்லை என்றால் மாட்டைத் திரும்ப ஓட்டிச் சென்று விடுங்கள்’ என்றார். ‘சரி நான் முயன்று பார்க்கிறேன்’ என்று கூறி விடைபெற்றார் ஏழுமலை.கூறிய வாக்கை நிறைவேற்ற வேண்டுமே என்ற நோக்கத்துடன் மீண்டும் மாட்டுச்சந்தைக்குச் சென்று மாடு வாங்கிக் கொடுத்த தரகனைத் தேடிப்பிடித்து விவரத்தைக் கூறினார் ஏழுமலை. ‘சந்தையில் மாடு விற்பவனிடம் ஒப்புகைச் சீட்டு கேட்ட முதல் ஆள் நீங்கள் தான்’ என்று கூறி நகைத்தார் அந்தத் தரகர். ‘என்ன செய்வது? ஒப்புகைச்சீட்டுக் கொடுக்கவில்லை என்றால் மாட்டைத் திரும்ப எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்’ என்று விளக்கிக் கூறி, எப்படியும் விற்ற ஆளிடம் ஒப்புகைச்சீட்டுப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதுபோலவே அந்தத் தரகரும் விற்ற ஆளை அடையாளம் கண்டு அவரிடம் ஏழுமலையைக் கூட்டிச்சென்று ஒப்புகைச் சீட்டுக் கேட்டார். மாடு விற்ற அந்த ஆள் அதிர்ந்து போனான். எப்படியோ உண்மையை விளக்கி ஓர் ஒப்புகைச் சீட்டுப் பெற்றுக் கக்கனிடம் கொண்டு வந்து கொடுத்தார் ஏழுமலை.

இதைப் பார்த்ததும் மகிழ்ந்து பாராட்டுவார் என்று எதிர்பார்த்த ஏழுமலைக்கு ‘இது என்ன ரசீது? இதில் வருவாய் முத்திரைத்தலை ஒட்டி (Revenue Stamp) கையொப்பம் இட வேண்டாவா? இப்படிக் காட்டினால் யார் நம்புவார்கள்?’ என்று கக்கன் சொன்னதும் வாயடைத்துப் போனார் ஏழுமலை. மாடு விற்றவனிடம் ஒப்புகைச் சீட்டுக் கேட்பதையும் வாங்குவதையும் வேடிக்கையாகப் பார்க்கிறார்கள். இந்த நிலையில் வருவாய் முத்திரைத்தலை ஒட்டிய ஒப்புகைச் சீட்டு ( Stamped Receipt) வேண்டும் என்று கேட்பது எப்படி? அப்படியே கேட்டாலும் தருவார்களா? என்றெல்லாம் நினைத்துத் தம்முள் நகைத்துக் கொண்டார். என்ன செய்வது? நண்பருக்கு நண்பர், அமைச்சருக்கு அமைச்சர், எப்படியும் செய்தாக வேண்டும். இல்லையேல் மாட்டைத் திருப்பித் தந்து விடுவார். அதனால், மீண்டும் அந்த மாடு விற்றவனைத் தேட வேண்டியதாகிவிட்டது.

எப்படியோ மீண்டும் தொடர்புடைய இருவரையும் அணுகி வருவாய் முத்திரைத் தலை ஒட்டிய ஒப்புகைச் சீட்டு வாங்கித் தந்த பிறகு கக்கன் முழுமனதுடன் அந்த மாட்டைத் தமது வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார். இச்செய்தியைக் கக்கன் நினைவு அஞ்சல் தலைவெளியீட்டு விழாவில் காலஞ்சென்ற டி.பி.ஏழுமலை சொல்லி மக்களை மனம் விட்டுச் சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் ‘மாண்புடைய மக்கள்’ எப்படி இருப்பார்கள் என்ற சிந்தனையையும் பதித்தார்.

இந்த நிகழ்ச்சி அன்றைய அரசியல் தடத்தில் எத்துணை நேர்மையாகக் கக்கன் நடை போட்டிருக்கிறார் என்பதை எண்ணியெண்ணி வியக்க வைக்கிறது. அதனால் தான் நேர்மையை விரும்பும் மக்களின் மனத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்’

என்ற வள்ளுவர் வாக்கு உண்மைதான் என்பதை உணரமுடிகிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book