43

ருமுறை மலேசியா வேளாண் அமைச்சர் கக்கனை அவரது அமைச்சரவை அலுவலகத்தில் சந்தித்தார். கக்கன் வைத்திருந்த பழங்காலப் பேனாவைப் பார்த்து விட்டு தமது சட்டைப்பையில் இருந்த பேனாவை எடுத்துக் கொடுத்தார். அதை வாங்கி கக்கன் அப்போனாவைத் திருப்பித்திருப்பிப் பார்த்து விட்டு, ‘இது என்ன தங்கப் பேனாவா?’ என்று கேட்டார். ‘ஆமாம் இதை எனது நினைவாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார் அந்த மலேசிய அமைச்சர்.

இந்தத் தங்கப்பேனாவை வைத்துக் கொள்ளும் தகுதி எனக்கு இல்லை’ என்றார். பரவாயில்லை வைத்துக் கொள்ளுங்கள் என்றதும் கக்கன் தமது உதவியாளரை அழைத்து இதை அலுவலகப் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்து தமக்கு வழங்கியதாக எழுதிக் கொண்டு வர ஏற்பாடு செய்தார். இதைக் கண்ணுற்ற மலேசிய அமைச்சர் ‘இது உங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்குத்தான். இந்த அரசுக்க அல்ல’ என்றார். ‘இந்த அமைச்சர் அலுவலகத்தில் நான் அமைச்சர் பொறுப்பில் இருக்கும்வரை இம்மாதிரியான பரிசுப்பொருள்களைப் பதிவு செய்த பிறகுதான் பயன்படுத்துவேன். நான் பதவியை இழந்து வெளியே போகும்போது முறையாக அரசிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வேன். அவ்வாறு செய்வது ஓர் அமைச்சர் பொறுப்பில்’ இருக்கும் என் போன்றவர்களின் கடமை அல்லவா? என்றார்.

மீண்டும் அந்த மலேசிய அமைச்சர் ‘தங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கே கொடுத்தேன்’ என்றார். உடனே ‘நான் அமைச்சராக இல்லையென்றால் இந்தப் பேனாவைக் கொடுத்திருப்பீர்களா? மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர் பொறுப்பேற்ற நம்மைப் போன்றவர்கள் பரிசுப் பொருள்களைத் தமது சொந்தப் பயன்பாட்டிற்குத் வைத்துக் கொள்ளலாமா?’ என்று கக்கன் கேட்டதும் மலேசிய அமைச்சர் அமைதியானார். என்றாலும் விடவில்லை; “தங்களின் பயன்பாட்டிற்கே தாங்களே வைத்து கொள்வதாக இருந்தால் இதைக் கொடுப்பேன். அரசுப் பதிவேட்டில் எழுதி அரசுப் பொருள்களோடு இதையும் சேர்ப்பதாக இருந்தால் நான் கொடுக்க மாட்டேன்’ என்றார். “நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்று தங்கப் பேனாவைத் திருப்பி கொடுத்து விட்டார். மலே‘abCò அமைச்சரும் அதைத் திரும்ப வாங்கி வைத்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியை நேருக்கு நேர் கண்ணுற்ற காங்கிரஸ் கட்சியின் அன்றைய சட்டமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற டி.பி.ஏழுமலை பல மேடைகளில் இதைப் பற்றிப் பேசியுள்ளார். கக்கனின் தன்னலமற்ற உள்ளத்தையும் தம் தகுதிக்குட்பட்டு வாழவேண்டும் என்ற உயரிய பண்பாட்டையும் இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.

பரிசுப்பொருள்களையும் பட்டியலிட்டு விற்பனை செய்யும் அமைச்சர் பெருமக்கள் வாழ்ந்த வரலாறும், பிறந்தநாள் என்ற பெயரால் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள பரிசுப்பொருள்களைப் பெற்றுக் கொள்ளும் அமைச்சர்கள் வாழும் வரலாறு கொண்ட இந்தத் தமிழகத்தில் இப்படியொரு அமைச்சரா?

அப்படி வாழ்ந்த கக்கனின் குறிக்கோள் தான் என்ன? பரிசு என்ற பெயரால் பிறர் வழங்கும் பொருட்சுமை கூடப் பொதுநலம் என்ற கப்பலைத் தரைதட்டிவிடச் செய்யும் என்று எண்ணினாரோ? அப்படிப் பிறர் செய்யும் செயல்களில் கூடக் கறைபடா நெஞ்சினன் என்ற எல்லையை எட்டத் தடைக் கற்களாக அமைத்துவிடும் என்று அஞ்சினாரோ? எப்படி எண்ணி இருந்தாலும் அவரது உள்ளத்தில் உயரிய குறிக்கோள் குடிகொண்டிருந்தது என்பது உறுதி.

குறிக்கோளில்லாத மனிதன் திசைகாட்டும் கருவியில்லாத கப்பலைப் போன்றவன்’ என்று அறிஞன் ‘ஆவ்பரி’ கூறியதை ஒப்பிட்டுப் பார்த்தால் இன்று “கறைபடாக் கரங்கள்” என்று அனைத்து அரசியல் தலைவர்களாலும் பேசப்படும் எல்லையை எட்டும் குறிக்கோள் கொண்டே வாழ்ந்தார் என்பது உண்மை.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book