42

க்காலத்தில் அமைச்சரின் ஊர்தி ஓட்டுநர் அரசுப் பணியாளர் அல்லர். அந்த ஒட்டுநர்களுக்கு அந்தந்த அமைச்சரே ஊதியம் கொடுக்க வேண்டும். அமைச்சர்கள் அனைவரும் அவரவர் துறைகளில் தற்காலிகப் பணியாளர்களாக வைத்துக் கொண்டு அத்துறையில் கொடுக்கும் பணத்தையே ஊதியமாகக் கொடுத்து வந்தனர். ஆனால். கக்கன் மற்ற அமைச்சர்களிடமிருந்து சற்று வேறுபட்டே நடந்து கொண்டார். இவரிடம் பணியாற்றும் ஓட்டுநருக்கு மட்டும் அவரது ஊதியத்திலிருந்தே ஊதியம் கொடுத்து வந்தார். பிற அமைச்சர்களிடம் பணியாற்றும் ஓட்டுநர்களுக்கு எவ்வளவு ஊதியம் கிடைக்கிறதோ அதில் பாதிதான் கக்கனின் ஓட்டுநருக்கும் கிடைக்கும்.தமது வருவாயில் இருந்து கொடுப்பதால் அவ்வளவுதான் கொடுக்க முடிந்தது என்பது எண்ணத்தக்கது. இவரது ஒட்டுநரே முன்வந்து மற்ற ஓட்டுநர்களுக்கு எப்படிச் ஊதியம் வழங்குகிறார்கள் என்பதை விளக்கிச் சொன்ன பின்னும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘பிறர் என்ன செய்கிறார்கள் என்பது நமக்கு வேண்டா. என்னால் எவ்வளவு கொடுக்க முடியும் என்பதைத்தான் பார்க்க வேண்டும். அதனால், நான் கொடுக்கும் ஊதியம் வாங்கிக் கொண்டு பணியாற்ற முடிந்தால் பணியாற்றுங்கள். இல்லையேல் ஊதியம் அதிகமாகக் கொடுக்கும் இடத்தில் பணியாற்றப் போய் விடுங்கள்’ என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார் என்றாலும் இவரது பழக்க வழக்கத்தால் ஈர்க்கப்பட்ட ஓட்டுநர் தொடர்ந்து பணியாற்றினார். சட்ட விதிமுறைகளை எந்தச் சூழலிலும் மீறுவதில்லை என்ற தமது கொள்கையை விட்டுக் கொடுக்க விரும்பாதவராக வாழ்ந்தார் கக்கன்.

மேலும் இவர் அமைச்சராக இருந்து வாழ்ந்து வந்த அரசு வீட்டைக் காலி செய்து வரவேண்டிய சூழல் வந்த போது அரசு அனுமதித்த கால இடைவெளிக்குள் காலி செய்து விட்டு வாடகை வீட்டிற்கு வந்தார். அவ்வாறு காலி செய்யும்போது பழுதடைந்திருந்த கால்மிதியடிகளைக் கூடச் சொந்தச் செலவில் செப்பனிட்டு வைத்து, முறையாகக் கணக்குக் கொடுத்து விட்டு வந்தார்.

அரசியல் வழியாகப் பதவி பெற்றவர்கள் டெல்லியில் தமக்கு ஒதுக்கப்பட்ட வீட்டைக் காலி செய்யாமல் இருப்பதையும் அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் பலர் அறிவர். அரசு வீட்டைக் காலி செய்து விட்டுப் போக வேண்டிய சூழலுக்கு உள்ளான அரசியல் தலைவர்கள் சிலர், அந்த வீட்டில் பொருத்தியிருந்த குளிர்சாதனக் கருவிகளையும் எடுத்துக் கொண்டு சென்றதாகக் கூடச் செய்திகள் உண்டு. இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் விதிமுறைகளை மீறும் மனமோ, விதிகளைத் தமக்குச் சாதகமாக அமைத்துக் கொள்வதோ அவரது வாழ்வில் என்றுமே இருந்ததில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book