41

1962-67 ஆண்டுகளில் அமைச்சர் பொறுப்பேற்ற இவருக்குப் பல்வேறு துறைகள் ஒதுக்கப்பட்டதை முன்பே கண்டோம். அத்துறைகளுள் மதுவிலக்குத் துறையும் ஒன்று. மதுவிலக்கு நடைமுறையில் இருந்த காலமாதலால் அரசிடம் அனுமதி பெற்றே மது அருந்த வேண்டும் என்ற நிலை இருந்தது.

மது அருந்துவதையே அன்றாட பொழுது போக்காகக் கொண்ட பல பெரும்புள்ளிகள் அரசிடம் விண்ணப் பித்திருந்தனர். அந்த விண்ணப்பங்களில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு தொடர்புடைய ஒருவரின் விண்ணப்பமும் ஒன்று. அவரது விண்ணப்பத்தைக் கீழ்மட்ட அதிகாரிகள் முறையாகப் பரிசீலனை செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர்.

சமுதாய ஒழுக்கக்கேடுகள் ஐந்தனுள் ஒன்றான ‘கள்ளுண்டல்’ என்பதை மிகப்பெரிய குற்றமாகக் கருதிக் கள்ளுண்ணாமையைக் கடைப்பிடித்து வந்தார் கக்கன்.

உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்

எண்ணப்பட வேண்டா தார்’

என்ற வள்ளுவரின் வாக்கை வாழ்க்கையின் கொள்கையாகக் கொண்டிருந்தார். அதனால் அவரும் கள்ளுண்ணுவதில்லை, பிறர் கள்ளுண்ணுவதையும் அவர் ஏற்றுக் கொள்வதில்லை. இவ்வளவு கொள்கைப் பிடிப்புடையவராக இருந்ததால் மது அருந்த அனுமதி கேட்டுவரும் கோப்பினைப் பார்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை. அதனால் அண்ணாமலை பல்கலைக் கழகத் தொடர்புடையவரின் கோப்பும் கிடப்பில் கிடந்தது.

பல அதிகாரிகள் நினைவூட்டியும் அந்தக் கோப்பினைப் பார்க்கவே இல்லை. இதைத் தெரிந்து கொண்ட ‘அவர்’ தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அன்புடன் பேசி, சொன்ன செய்தியையும் கேட்டுக் கொண்டார். அவரின் வேண்டுகோளை நடைமுறைப்படுத்தப் பலர் காத்துக் கொண்டிருக்கும் போது கக்கன் மட்டும் செவி சாய்க்க மறுத்துவிட்டார்.

தமிழக அரசியலில் அவருக்கு என்று தனி மரியாதை உண்டு. எந்தக் கட்சியிலும் தொடர்பு கொள்ளாமல் இருப்பதால் அனைத்துக் கட்சிகளும் அவருக்கு ஒரு தனி மரியாதை செலுத்தி வந்தன. இதைக் கக்கன் உணர்ந்திருந்தாலும் மது அருந்த அனுமதி வழங்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை நினைவூட்டிக் கேட்ட அரசியல்வாதிகளிடம் ‘அந்த அவர்’ மீது கொண்ட அன்பினால் தான் அனுமதி வழங்கவில்லை என்று கூறினாராம். எப்படியோ கக்கன் மதுவிலக்குத்துறை அமைச்சராக இருந்தவரை அனுமதி வழங்கவுமில்லை. அதன்பின் தமது வாழ்நாள் முழுவதும் எந்த உதவிக்கும் அவரை அணுகவுமில்லை.

எனவே கொண்ட கொள்கையில் எந்நாளும் எவருக்காகவும் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காத மனவலிமை கொண்டு தமக்கென்று ஒரு பாதையை அமைத்துக் கொண்டு வாழ்ந்தார் என்பதை உணரமுடிகிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book