4

தேர்வின் தோல்வியால் மனமுடைந்து போயிருந்த கக்கனை வைத்தியநாதய்யர் என்பவர் அழைத்து வரச்செய்து சமாதானம் செய்து ஏதாவது ஒரு வேலை போட்டுத் தருவதாகவும் தகப்பனார் கடனை அடைக்க பணஉதவி அளிப்பதாகவும் ஆறுதல் கூறினார். ஆனால். கக்கனுக்குத் தனது படிப்பைத் தொடர வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. மேலும் உதவியாகக் கிடைக்கும் பணத்தை இலவசமாகப் பெற்றுக் கொள்ள அவர் விரும்பவில்லை. அந்தப் பணத்தைக் கடனாகப் பெற்றுக் கொள்வதாகவும் கிடைக்கவிருக்கும் ஊதியத்தில் சிறிது சிறிதாகப் பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டிக் கேட்டுக் கொண்டார். இவர்தம் தன்மான உணர்வைப் பாராட்டிப் போற்றிய வைத்தியநாதய்யர், மேலூரில் உள்ள அரிசன மாணவர் விடுதியாகிய சேவாலயத்தில் விடுதிக் காப்பாளராகப் பணியில் அமர்த்தினார். இதை அடுத்து 1934ஆம் ஆண்டு மதுரை செனாய் நகரில் அரிசன மாணவர்களுக்காகச் ‘சேவாலயம்’ ஒன்று திறக்கப்பட்டது. முன்னாள் அகில இந்திய காந்தி நினைவு நிதித் தலைவராகிய கே.அருணாச்சலம் அவர்கள் அந்த விடுதியின் காப்பாளராகப் பணியில் நியமிக்கப்பட்டார். இருவரும் அரிசன மாணவர்களை நன்கு படிக்கத் தூண்டியது மட்டுமின்றி மேலூர் பகுதியிலுள்ள கிராமங்களில் எல்லாம் இரவுப் பள்ளிகளைத் தொடங்கி கிராமத்துக் குழந்தைகளுக்கு வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக் கொடுத்து வந்தார்கள். எனவே இவர்கள் ‘நைட் ஸ்கூல் வாத்தியார்’ என்று கிராம மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book