39

க்கன், விழா முடிந்து வீட்டிற்குத் திரும்பினார். காலையில் ஓர் ஆள் விட்டு நாவினிப்பட்டி மைனரை அழைத்துவரச் சொன்னார். நாவினிப்பட்டி மைனர் வேறு ஏதோ காரணங்களுக்காக அழைப்பு வந்துள்ளதாக எண்ணி வந்தார். வந்த மைனரிடம் நலன் விசாரித்து விட்டு 11,000ரூபாயை எடுத்துக் கொடுத்தார். இத்துணை நாள் தாமதமானதற்கு வருத்தம் தெரிவித்து உதவிக்கு நன்றியையும் சொன்னார்.

நாவினிப்பட்டி மைனரால் நம்ப முடியவில்லை. மைனருக்குக் கடனாகப் பணம்கொடுத்த நினைவு கூட இல்லை. ‘ஏன் கொடுக்கிறீர்கள் நான் தங்களுக்குக் கடனாகக் கொடுக்கவில்லை. நண்பர் என்ற முறையில் உதவினேன். அவ்வளவுதான். இந்தச் சிறுதொகையை நீங்கள் பெரிதாக எண்ணக்கூடாது. நட்பின் அடிப்படையில் கொடுத்ததைக் கடன் கொடுத்தது போல் திருப்பித் தருவது அவ்வளவு நல்லதாக இல்லை’ என்று கூறி வாங்க மறுத்தார். கக்கன் விடுவதாக இல்லை, ‘இந்தப் பணத்தை எனது அவசரத் தேவைக்கு நான் ஆள் அனுப்பிப் பெற்றேன். ஆகவே அது கடன் தான். அதனால், தாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லையென்றால் நமது நட்பை வளர்க்க முடியாமல் போகும். அதனால், பெற்றே ஆகவேண்டும்’ என்று கட்டாயப்படுத்திக் கொடுத்தார்.

நட்பின் அருமை கருதி நாவினிப்பட்டி மைனர் வாங்க மனம் இல்லாமல் வாங்கிக் கொண்டார். மைனர் விடை பெற்றுச் சென்றாலும் அவரது மனம்மட்டும் கக்கனின் உண்மைக்கும், அன்பிற்கும் இடையே தங்கித் திகைத்து மகிழ்ந்தது என்றே சொல்லலாம்.

தேர்தலில் நிற்பதே பணம் திரட்டத்தான் என்று முடிவுக்கு வரும் அளவிற்குச் சில அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் இருப்பதை இன்றும் காண முடிகிறது. தேர்தல் செலவிற்குச் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து உதவி கேட்ட வரலாறும் அந்த விளம்பரம் கண்டு அனுப்பிய பண விடைகளைக் (Money Order) கையொப்பமிட்டு வாங்காமல் கையொப்ப முத்திரையிட்டு வாங்கிய வரலாறும் நமது தமிழகத்தில் நடந்தது உண்டு. குறிப்பாகத் தேர்தல் செலவிற்குப் பணம் வேண்டும் என்றுக் கேட்டாலே அது நன்கொடைதான் என்ற புதுப்பொருளோடு இன்று நிலவி வருகிறது. ஆனால், கக்கன் தமது வாழ்நாளில் தேர்தல் செலவிற்கு உதவி பெற்றிருந்தாலும் தாம் என்ன சொல்லிப் பெற்றோமோ அவ்வாறே வாங்கியதைத் திருப்பித் தந்து முறையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடையவராக இருந்தார். காலம் கடந்தாலும் வாக்கு மாறாத கொள்கையைக் கொண்டவர் கக்கன் என்பதை நம்மால் உணரமுடிகிறது.

40.கேட்காமலிருந்தால்

கொடுக்காமல் இருப்பதா?

ங்கு இன்னொரு நிகழ்ச்சியையும் நினைவு கூர்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். மணிவிழா நிதிஉதவியில் ரூ.11,000 மைனருக்குக் கொடுத்தாகி விட்டது. மீதம் 10,000 ரூபாய் இருக்கிறது. இதைக் குடும்ப உறுப்பினர்கள் வங்கி நிரந்தர வைப்பு நிதியில் இட்டு விடலாம் என்று முடிவெடுத்தனர். ஆனால், கக்கன் அதிலிருந்து ரூ.1,800 எடுத்து ஓர் ஆளை அழைத்து இதைக் கொண்டு போய் டி.வி.எஸ்.பயணியர் விடுதியில் கொடுத்து விட்டுப் பற்றுச் சீட்டையும் வாங்கி வரச்சொன்னார். வீட்டிலிருந்தவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘ஏன் கொடுத்து அனுப்புகிறீர்கள்’ என்று கேட்டதும் மெல்ல சிரித்துக் கொண்டு ‘நான் அமைச்சராயிருந்த காலத்தில் அந்த விடுதிக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை அப்படியே இருந்து விட்டது. அதை இன்று தான் கொடுத்து அனுப்புகிறேன்’என்றார்.

அமைச்சராகியிருந்து பல ஆண்டுகள் கடந்து விட்டன. அந்த நிறுவனத்தாரும் அதைக் கேட்கவேயில்லை; கேட்கவும் மாட்டார்கள். இந்த நிலையில் ஏன் கொடுத்து அனுப்புகிறீர்கள்’ என்றனர். ‘என்றாவது ஒருநாள் அந்த நிலுவைத் தொகையை நான் கட்டி விடுவேன் என்ற நம்பிக்கையில் இன்று வரை கேட்காமல் இருக்கிறார்கள். அதற்காக நன்றி சொல்லி பணத்தைக் கட்ட வேண்டுமே தவிர கேட்கவில்லை என்பதற்காகக் கட்டாமல் இருப்பது தவறு’ என்று கூறினார்.

இவ்வளவு வறுமையில் இருந்தபோதும் இவர் மாறவில்லை என்று சிலர் முணுமுணுத்தனர். அவர் கொண்டிருந்த திருந்திய உள்ளத்தால்தான் வறுமையில் செம்மையாக நடந்துக் காட்ட முடிந்தது என்பதை நம்மால் உணர முடிகிறது.

கிடைத்த பொருளுதவியைக் கொண்டு தமது வறுமை நிலையை மாற்றிக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு இருந்த போதும்.

கோடான கோடி பெற்றாலும் தன்

நாக்கோடாமை கோடி பெறும்’

என்ற அவ்வையின் வாக்கினை உணர்ந்தவராக நடந்து கொண்டார் கக்கன், என்பதை என்ணிடும் போது

இன்றி அமையாச் சிறப்பின் ஆயினும்

குன்ற வருப விடல்’

என்ற வள்ளுவரின் வாக்கே நினைவுக்கு வருகிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book