36

க்கனின் தம்பி பூ.விஸ்வநாதன் பட்டப்படிப்பை முடித்து விட்டு வேலை தேடும் முகத்தான் தம் அண்ணன் வீட்டில் தங்கி இருந்தார். தாழ்த்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கக்கன் என்பதால் அத்துறையின் இயக்குநரான திரு.முத்திருளாண்டி அடிக்கடி அமைச்சர் வீட்டிற்கு வந்து போனார். அப்படி வரும்போதெல்லாம் விஸ்வநாதனைச் சந்தித்துப் பேசுவதுண்டு, விஸ்வநாதன் வேலை இல்லாமல் இருப்பதை உணர்ந்து அவரிடம் மிகவும் பரிவு கொண்டார். அதன் வெளிப்பாடாக விஸ்வநாதனை அலுவலகம் வரச் சொன்னார். அதுபோலவே அலுவலகத்தில் சந்தித்த விஸ்வநாதனிடம் ‘நான் உனக்கு வேலை போட்டுக் கொடுக்க முடியாது; ஆனால் என் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒன்றைச் செய்கிறேன்’ என்று கூறி, லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு முழுமனையை ஒதுக்கீடு செய்து ஆணையையும் கையில் கொடுத்து வாழ்த்தி அனுப்பினார். அந்த இயக்குநரின் பரந்த உள்ளத்தை நினைந்து மகிழ்ந்தார் விஸ்வநாதன்.

கொஞ்சநாள் கழித்து அமைச்சர் கக்கனைச் சந்தித்த அந்த அதிகாரி விஸ்வநாதனுக்குத் தான் செய்த உதவியை மனதாரச் சொல்லி மகிழ்ந்தார். அனைத்துச் செய்திகளையும் புன்னகையோடு கேட்டுக் கொண்ட கக்கன் தம் தம்பி விஸ்வநாதனை ஆள்விட்டு அழைத்து வரச் சொன்னார். ஏதோ செய்திக்காக அழைத்திருக்கிறார் என்று எண்ணி அண்ணனிடம் ஓடிப்போய் நின்றார். அந்த இயக்குநர் சொன்ன செய்திகள் முழுவதையும் கேட்டறிந்தார். விஸ்வநாதனும் உண்மையைச் சொன்னார். அதன்பின் அந்த ஒதுக்கீட்டு ஆணையை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார். அண்ணன் இவ்வளவு ஆவலாகக் கேட்கிறாரே என்று எண்ணி அந்த ஆணையைக் கொண்டு போய் நீட்டினார். கையில் வாங்கிய அந்த ஆணையைச் சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். விஸ்வநாதனுக்கு ஒதுக்கீடு செய்த மனையை இலதாக்கும்படி (ரத்து) அந்த அதிகாரிக்கு ஆணையிட்டார்.

மந்திரியின் தம்பி என்ற முறையில் நீ ஒதுக்கீடு பெற்றதும் தவறு, அவ்வாறு ஒதுக்கீடு செய்த அந்த அதிகாரி செய்ததும் தவறு. எத்தனையோ ஏழைகள் படுக்கக்கூட இடமில்லாமல் வறுமையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய மனையை நீ பெறுவது முறையன்று’ என்று கூறியதோடு இனி இவ்வாறான செயல்களில் ஈடுபடக்கூடாது’ என்று கண்டித்தும் அனுப்பினார்.

இனி என் அனுமதியின்றி என் உறவினர்களுக்கு எதுவும் செய்யக் கூடாது என்று அந்த அதிகாரியையும் கண்டித்து அனுப்பிவிட்டார்.

இன்றைய மதிப்பின்படி அரைக்கோடி ரூபாய் பெறுமானமுள்ள அந்த மனையை இழந்ததில் அவரது தம்பி விஸ்வநாதனுக்கு அன்று மிகவும் வருத்தம்தான். நான் மட்டும் என்ன வசதி வாய்ந்தவனா? பல்லாயிரம் ஏழைகளில் நானும் ஓர் ஏழை, அமைச்சரின் தம்பியாக இருப்பதால் மட்டுமே நான் வசதி உள்ளவனாக ஆகிவிட முடியுமா? என்பன போன்று எத்தனையோ சிந்தனை அலைகள். என்ன செய்வது? அண்ணன் கிழித்த கோட்டைத் தாண்டாத தம்பி என்பதனால் அவரையே அவர் சமாதானம் செய்து கொண்டார். இன்று அதே தம்பி விஸ்வநாதன் இந்த நிகழ்ச்சியை நண்பர்களிடமும் மேடைகளிலும் சொல்லி, தம் அண்ணனின் கடமை உணர்வை மனதாரப் புகழ்ந்து மகிழ்கிறார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book