31

க்கள் தீர்ப்பினை மதித்து நடக்க வேண்டும் என்ற கொள்கையுடைய கக்கன் தாம் தோல்வியடைந்ததாக என்றுமே எண்ணவில்லை. ‘இந்த நாட்டை ஆள மக்கள் நம்மை அனுமதிக்கவில்லை. யார் அவர்களை ஆள வேண்டும் என்று எண்ணினார்களோ அவர்களை அனுமதித்திருக்கிறார்கள்’ என்றே சொல்லிவந்தார். அரசியல் பதவிகள் என்பது மக்களால் வழங்கப்படுகிற ஒன்று. நேற்று நமக்கு வழங்கி இருந்தார்கள் இன்று வேறொருவருக்கு வழங்கியுள்ளார்கள் என்றளவிற்கு மக்களாட்சிக் கோட்பாட்டைத் தலைவணங்கி ஏற்றுக் கொண்டிருந்தார்.

ஆட்சியிலிருந்த போது பத்தாண்டுக் காலம் வாழ்ந்த அரசு மாளிகை இல்லை; தமக்கென்று சொந்தக் குடிசை இல்லை; எண்ணியபோதெல்லாம் எடுத்துக் கொண்டு போக மகிழுந்து இல்லை; பார்வைபடுமிடமெல்லாம் பணிசெய்யப் பார்த்துக் கொண்டிருந்த பணியாளர்கள் இல்லை; பதவியில் இருந்தபோது சுற்றிச் சுற்றி வந்த எவரையும் காணவில்லை. ஆனால், எதற்கும் சலனமடையாத உள்ளமும், அவ்வுள்ளம் அமைத்துக் கொண்ட எளிமையும், நேர்மையும் துணைக்கு இருந்தன. அதனால், இல்லாததை எண்ணி மனம் தளராமல் இருப்பதைக் கொண்டு மகிழ்ந்தார்.

அரசு நடைமுறையில் குறிக்கப்பட்டிருந்த கால இடைவெளிக்குள் மாளிகையைக் காலிசெய்து வாடகை வீட்டிற்குச் சென்றார். மகிழுந்து இல்லையே என்று மனம் கலங்கி வீட்டிற்குள் முடங்கிக் கிடக்காமல் ஒரு சாதாரணக் குடிமகனாகப் பேருந்தில் பயணம் செய்தார். அப்பயணத்தின்போது இவரை அடையாளம் கண்டுகொண்டு பிறர் இடங்கொடுத்தும் ஏற்றுக்கொள்ளாமல் மக்களோடு மக்களாகவே நின்று கொண்டு பயணம் மேற்கொண்டார். பதவியில் இருக்கும்போதே தமது பணிகளைத் தாமே செய்துகொள்ளும் பழக்கமிருந்ததால் பணியாளர்கள் இல்லை என்ற எண்ணமோ. அவ்வாறு பணி செய்ய ஆள் வேண்டும் என்ற மனமோ இல்லாமல் இருந்தார்.

இவர் பேருந்திற்குக் காத்திருப்பதையும் பேருந்தில் பயணம் செய்வதையும் செய்தித்தாள்கள் வெளியிட்டன. அதைக் கண்ட கக்கன், ‘எனது தகுதிக்கு என்னால் என்ன செய்துக்கொள்ள முடியுமோ அதைச் செய்து கொள்கிறேன். அதில்தான் எனக்கு மகிழ்ச்சி’ எனக் கூறிக் கொண்டார். ‘ஒடும் செம்பொன்றும் ஒக்கவே நோக்குவார்’ என்ற சமயக் கோட்பாடு இவருக்கு உரிமையானதைக் காணலாம்.

ஓர் இந்தியக் குடிமகன் அதிலும் பொது வாழ்வில் ஈடுபடுபவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டினார் கக்கன் என்று பலர் புகழ்ந்தாலும் அவர் பெற்ற இன்னல்களைத் துடைக்க உதவிக்கரம் நீட்டியவர்கள் மிகக் குறைவு. பதவியில் இருந்த காலத்தில் பயன் பெற்ற பலர் பாராமுகமாக இருந்தார்கள். ‘ஈ என இரத்தல் இழிந்தன்று’ என்பதை உணர்ந்த கக்கன் எவரிடமும் எந்த உதவியையும் கேட்டுப் பெற்றதில்லை.

பதவியை இழந்து, அதில் கிடைத்த மாதச் சம்பளத்தை இழந்து, வருவாய் இல்லாமல் வாழ்ந்ததில் அவர் பெற்ற இன்னல்களை அவர்தம் உள்ளம் மட்டுமே உணரும், ‘தோழனோடும் ஏழைமை பேசேல்’ என்பதல்லவா தமிழ்ப் பழமொழி.

இந்நிலையிலும் தளரா மனமுடன், அன்றாடம் கட்சி அலுவலகம் சென்று கட்சிப்பணிகளைக் கவனித்து, அது தொடர்பாகத் தலைவர்களைச் சந்தித்து, கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்குப் பணியாற்றினார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book