30

வ்வொரு அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினரும், தத்தமது தொகுதிகளுக்கான வளர்ச்சிப் பணிகளைச் செய்வது போல் கக்கனும் செய்ய நினைத்தார். அவர் செய்த வளர்ச்சிப்பணிகள் எண்ணிலடங்கா. அவற்றுள் ஒன்றை இங்குக் குறிப்பிடுதல் பொருத்தமானது. விடுதலைக்குப்பின் மதுரை மாவட்டத்தில் ஏற்பட்ட எத்தனையோ வளர்ச்சிப்பணிகளில் இன்றும் தலையோங்கி நிற்பது மதுரை வேளாண்மைக்கல்லூரியாகும். பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு அக்கல்லூரி தொடங்க, அரசிடமிருந்து பெற்ற ஒப்புதல் மட்டுமே போதாது. அதற்குத் தேவையான 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியாக வேண்டும் என்ற நிலைவந்தது. அதன் பின்னர்தான் முறையாகக் கல்லூரி தொடங்க முடியும் என்ற சூழலில், தனியாரிடம் இருக்கும் குறிப்பிட்ட நிலங்களைக் கையகப்படுத்தும் ஆணை வெளியிடப்பட்டது. அப்பணியினை அன்றைய தமிழக முதல்வர் காமராசர் கக்கனிடம் ஒப்படைத்தார். அந்த மாவட்டச் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் அமைச்சர் என்ற நிலையிலும் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

குறிப்பிட்ட அந்த இடத்தில் இருக்கும் நிலங்கள் அனைத்தும் தேவர் இன மக்களுடையது. பலர் இந்தக் கையகப்படுத்தும் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால், கக்கன் அனைத்து நில உடமையாளர்களையும் நேரில் சந்தித்து, கலந்து பேசி, அவர்களைச் சமாதானப்படுத்தினார். நிலங்களும் கையகப்படுத்தப்பட்டுக் கல்லூரியும் தொடங்கி, மதுரை மாவட்ட உயர்விற்குப் படிக்கல்லாக விளங்கி வருகிறது. பல்லாயிரம் வேளாண் திறனாளர் உருவாகிப் பசுமைப்புரட்சிக்கு வித்திட்ட தன்மையை இன்றும் பாராட்டி மகிழுகின்றோம்.

ஆனால், வேண்டுமென்றே அந்தக் குறிப்பிட்ட இடத்தைத் தெரிவு செய்து, தேவர் இனமக்களிடம் இருக்கும் நிலங்களைப் பிடுங்க வேண்டும் என்ற உள்நோக்குடன் கக்கன் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததாகத் தெரிகிறது.

இங்கு இன்னொரு உண்மையைக் குறிப்பிட்டால் கக்கனின் நல்லுள்ளத்தை மேலும் புரிந்து கொள்ள முடியும்.

குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு முன்னோர்வழி நிலங்கள் கக்கனுக்கு இல்லை. விடுதலை வீரர்களுக்கென்று கொடுக்கப்பட்ட கொஞ்சம் நிலம் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் இருந்தது. நிலமில்லாத ஏழைகளுக்கு நிலம் வழங்க வினோபாவால் தொடங்கப்பட்ட நிலக்கொடை இயக்கம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. தமிழகத்தில் பலர் தாமாகவே முன்வந்து நிலங்களைக் கொடையாகக் கொடுத்தனர். அவ்வாறு கொடுத்தவர்களுள் கக்கனும் ஒருவர்.

அதிக நிலம் உள்ளவர்கள் நிலக்கொடை வழங்குவதென்பது கொடையாளிகளுக்குப் பாதிப்பு எதையும் ஏற்படுத்தாது. ஆனால், தமக்கு இருக்கும் கொஞ்ச நிலத்தையும் கொடையாகக் கொடுப்பதற்கு எவ்வளவு பெரிய கொடையுள்ளமும் ஈகை எண்ணமும் கக்கன் பெற்றிருக்க வேண்டும். இது அவர்தம் கொடை நெஞ்சத்தின் பரப்பை நன்கு விளக்குகிறது அல்லவா!.

வினோபாஅடிகள் ஆந்திர மாநிலத்தில் சீதாராமரெட்டி வழங்கிய 250 ஏக்கர் நிலத்தைவிடத் தமக்குரிய முழு உரிமையான 3.4 ஏக்கர் நிலம் வழங்கிய ஒரு பாட்டியைப் பாராட்டியதை இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும். ஏனெனில், சீதாராமரெட்டி வழங்கிய 250ஏக்கர் அவரிடம் இருந்த நிலங்களில் ஐந்தில் ஒரு பங்கு என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.

அவ்வாறு தமக்கு இருக்கும் கொஞ்ச நிலத்தையும் பகிர்ந்தளிக்கும் கொடையுள்ளம் கொண்ட கக்கன் வேண்டுமென்றே தேவர் இனமக்களின் நிலங்களைக் கையகப்படுத்தினார் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் என்றாலும் பொதுநலன் கருதி நாட்டின் வளர்ச்சி கருதிச் செய்த செயலுக்குப் பழி சுமத்தப்பட்டதை என்னவென்று சொல்வது. இவ்வாறு பழி சுமத்துகிறார்கள் என்பதை அறிந்தும்

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை’

என்ற வள்ளுவரின் வாக்கினை உணர்ந்து தமக்குப் பழிவந்தாலும் பரவாயில்லை, என்றைக்கும் பயன் தரும் கல்லூரியைத் தொடங்கும் நல்வினையையே செய்வோம் எனத் துணிந்து கக்கன் செயல்பட்டிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

எனவே, இவர்தம் அரசியல் வீழ்ச்சிக்கு 1967ஆம் ஆண்டுவரை மக்களின் எதிர்ப்பார்ப்பை அளவிட்டுணராமல் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்ட விதம், இந்தி எதிர்ப்பினால் வந்த பகை ஆகியவற்றைக் காரணம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், மேற்சொன்ன எதிர்ப்புகளுக்கிடையேயும் 49 உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு வெற்றி பெற்ற உறுப்பினர்களைவிடப் பொதுத் தொண்டிலும் தன்னலமின்மையிலும் கக்கன் எந்த விதத்திலும் குறைந்தவரல்லர். எதிரணியினர் வீசிய எவ்வித ஊழல் குற்றச்சாட்டும் இவரைத் தாக்கியதாகத் தெரியவில்லை. ஆனாலும், கக்கன் தோற்றுப்போனார்.

ஆகவே இவரோடு இணக்கமாக நடந்து கொண்டவர்கள் செய்த வஞ்சகச் சூழ்ச்சியுடன், தேவையற்ற இனப்பாகுப்பாட்டைத் தூண்டும் பழிகள் இவர் மீது தானே வந்து சூழ்ந்ததும், தொகுதி வளர்ச்சிப் பணிகள் என்று எண்ணிச் செய்த செயல்கள் அனைத்தும், தொகுதியிலும் சிறந்து விளங்கும் பலரை இன்னலுக்கு உள்ளாக்கியதாகக் கருதியதும் தோல்விக்கான காரணங்களாக அமைகின்றன.

தமக்கு வேண்டுவதெல்லாம் மக்களின் ஆதரவு, ‘மக்களின் நலன் மட்டுமே தமது நலன்’ என்ற அளவில் தொண்டு செய்த கக்கனுக்கு மக்களின் ஆதரவு இல்லாமல் போய்விட்டது. ‘மக்களுக்காகவே வாழ்ந்தவர்களுக்குக் கூட மக்களின் ஆதரவு இல்லை’ என்று கக்கன் மேடைகளில் பேசியிருக்கிறார்.

பொருளாதாரத்தைப்பற்றியும் பணத்தைப்பற்றியும் அதிகமாகச் சிந்தித்து எழுதி வந்த எனக்கு அந்தப் பொருளாதாரமும் பணமும் இல்லாமல் போய்விட்டது’ என்று காரல் மார்க்ஸ் தாம் எழுதிய ‘தி கேப்பிட்டல்’ என்ற நூலின் இறுதியில் குறிப்பிட்டிருப்பதை இங்கு ஒப்பு நோக்கலாம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book