3

க்கனின் பெற்றோர் வறிய வாழ்வு வாழ்ந்து வந்தனர். சிறு நிலத்தின் வருமானம் போதுமானதாக இல்லாத நிலையில், சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். சிறுவன் கக்கன் எடுபிடி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டான் என்றாலும், தம் மகனை எப்படியாவது படிக்கவைக்க வேண்டுமென்று தந்தை ஆசைப்பட்டார். ஐந்தாவது வயதில் கிராமத்து ஆரம்பப் பள்ளியில் கக்கன் சேர்க்கப்பட்டான். இயல்பிலேயே கூர்மதி கொண்டவனாகவும் படிப்பில் ஆர்வம் மிக்கவனாகவும் சிறுவன் கக்கன் விளங்கியதால், பள்ளிக்கூடத்திற்குத் தவறாது சென்றுவந்து ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றுவந்தான். பள்ளிக்கூடம் சென்று வந்தபின்பு, தந்தை பணியாற்றி வந்த வீரகாளியம்மன் கோவிலுக்குச் சென்று தந்தைக்கு உதவியாகவும் வேலை செய்து வந்தான்.தனது பத்தாவது வயதில் ஐந்தாம் வகுப்பைச் சிறுவன் வெற்றிகரமாக முடித்தான். அந்தக் காலத்தில் ஐந்தாம் வகுப்பைப் படித்து முடிப்பது என்பது சாதாரணமானதன்று. சிறுவன் மேலும் படிக்க ஆசைப்பட்டான். வறிய நிலையிலுள்ள தந்தைக்கு மேலும் படிக்கவைக்க ஆசை. எனவே, தனது வறுமையைச் சட்டைசெய்யாமல், பையனை மேல்படிப்பிற்காக மானாமதுரையிலுள்ள கிறித்துவப் பள்ளியில் கொண்டுபோய்ச் சேர்த்தார். பள்ளியில் மாணவர் விடுதியில் தங்க இடம் கிடைத்தது, கக்கன் தனது குடும்பநிலையை உயர்த்த மிகவும் அடக்கத்துடனும் பொறுப்புடனும் தனது படிப்பைத் தொடர்ந்து வந்தான் என்றாலும், வறுமையின் தாக்கம் பையனை வறுத்தெடுத்தது. மாற்றி உடுத்த ஆடையில்லை; வேண்டிய புத்தகமும், நோட்டும் வாங்க இயலவில்லை. அருமை நண்பர்களின் அருகில் அமர்ந்து அவர்களின் புத்தகங்களைக் கக்கன் படித்து வந்தான்,

இக்காலம் போல சலுகைகள் பள்ளிகளில் மட்டுமின்றி, கல்லூரிகள் அளவிலும் இலவசப்படிப்பு, உபகாரச் சம்பளம், தங்க உறைவிடம், உண்ண உணவு ஆகிய அனைத்தும் இலவசம் என்ற நிலை அக்காலத்தில் இல்லை. விடுதியில்கூட கட்டணம் ரூ 450 செலுத்தித்தான் தங்கி வர முடிந்தது. ஏழைத்தகப்பனால் அப்பணத்தைத் தொடர்ந்து கட்டுவது கூடச் சிரமமாக இருந்தது.எனவே 1922-ஆம் ஆண்டு தனது மானாமதுரை விடுதி வாழ்க்கையை மூட்டைக் கட்டிக்கொண்டு கக்கன் உடைந்த மனத்தோடு மீண்டும் தும்பைப்பட்டி வந்து சேர்ந்தான். தும்பைப்பட்டி ‘கிராமத் தலைவர் பெரிய அம்பலம்’ பையனின் அவலநிலையை அறிந்து உதவிட முன் வந்தார்.அவர்தம் உதவியால், 1922-ஆம் ஆண்டு கக்கனின் பள்ளிப்படிப்பு மீண்டும் மேலூர் உயர்நிலைப்பள்ளியில் தொடங்கியது. தும்பைப்பட்டிக்கும் மேலூருக்கும் குறைந்தது ஏழு கிலோமீட்டர் தூரம். இந்தக் காலத்தில் இருப்பது போன்று நகரப்பேருந்து வசதி இல்லாதகாலம். கையில் காசும் இல்லாத குடும்பம். எனவே கக்கன் தினமும் மேலூருக்கு நடந்து சென்று படித்து வந்தான். பெரும்பாலான நாட்களில் மதிய உணவுக்குக் கஞ்சியோ, கூழோ கூடக் கொண்டுவர முடியாத இறுக்கமான சூழ்நிலை.

எப்படியாவது பள்ளி இறுதி வகுப்பில் தேறிவிட வேண்டுமென்று ஆசைப்பட்ட கக்கனை அவர்தம் தகப்பனார், பசுமலை பி.கே.எம்.நாடார் உயர்நிலைப்பள்ளியில் கொண்டுபோய் 1923-ஆம் ஆண்டு சேர்த்து விட்டு வந்தார். விடுதிக்குக் கட்டணம் செலுத்தித் தங்க முடியாத வறுமையில், பள்ளிக்கூடத்தின் வராண்டாவிலேயே படுத்துத் தூங்கி வந்தார் கக்கன். பக்குவமடையாத பள்ளித்தோழர்கள் எள்ளி நகையாடியபோதும், மனவருத்தம் கொள்ளாமல், அவமானங்களை உரமாக்கி குடும்பச் சூழ்நிலையை எண்ணி, மனதில் உறுதி மேற்கொண்டு, படிப்பில் நாட்டம் செலுத்தி வந்தார். கக்கனின் படிப்புச் செலவுக்காக அவர்தம் தந்தை கைவசம் இருக்கும் சிறு அளவு நிலத்தையும் விற்க வேண்டியதாயிற்று. ஆயினும் கக்கனின் படிப்பு, பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே எட்டிப்போய் தடைபட்டு நின்றுவிட்டது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book