29

காமராசர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தைக் கலக்கிய வழக்குகளில் ‘இமானுவேல் கொலைவழக்கு’ ஒன்றாகும்.மிகப்பெரிய இனக்கலவரத்தால் தோன்றிய இவ்வழக்குத் தாழ்த்தப்பட்ட மற்றும் தேவர் இனமக்களுக்கிடையே உருவானதாகும். இந்தக் கலவரத்தின் போது தாழ்த்தப்பட்ட இனமக்களுக்குச் சாதகமாகக் கக்கன் நடந்து கொண்டார் என்று, வேண்டுமென்றே சிலர் குற்றம் சாட்டினர். மனத்துக்கண் மாசில்லாத கக்கன் மீது இப்படியொரு குற்றச்சாட்டா? நெருப்பைக் கறையான் அரிக்குமா?

இந்த இடத்தில் ஓர் உண்மை நிகழ்ச்சியைக் குறிப்பிடுவது மிகவும் பொருந்தும். கக்கனின் மிக நெருங்கிய உறவினர் ஒருவர் அரசு அதிகாரியாக இருந்து வந்தார். ஏதோ நடைமுறைக் குற்றங்களுக்காகத் தாம் பெற்ற பணி இடைநீக்க ஆணையை நீக்க உதவுமாறு, அந்த அதிகாரி வேண்டிக் கொண்டார். ‘தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் அரசும் செயற்படுகிறது’ என்று கூறியதோடு தன் வீட்டை விட்டே வெளியே போகும்படி அவரிடம் சொல்லிவிட்டார். இதனை நேரில் கண்ட கக்கனின் சகோதரர் திரு.முன்னோடி அதற்காக அன்று மிகவும் வருந்தினார். ஆனால், இன்று தம் அண்ணனின் கடமையுணர்வைச் சொல்லிச் சொல்லிப் பூரித்துப்போகிறார்.

இவ்வாறு தம் கடமையை எந்நிலையிலும் பிறழாது உறவினராயினும் நண்பராயினும் தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாத பாங்குடைய கக்கன், ஓர் இனத்தாருக்குச் சாதகமாக நடந்து கொண்டார் என்பதை நம்பமுடியவில்லை. இங்கு இன்னொரு செய்தியையும் குறிப்பிட்டாக வேண்டும்.

இம்மானுவேல் கொலைவழக்கு என்பது தமிழகமெங்கும் பரவலாகப் பேசப்பட்ட இனக்கலவரங்களிலொன்று. அந்தக் கலவரங்கள் தொடர்பாகப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களைச் சந்திக்க கக்கன் திட்டமிட்டார். சமுதாய ஒற்றுமை உணர்வும் மக்கள் விடுதலையுணர்வும் கொண்ட அவரால் தான், மக்களை அமைதிப்படுத்த இயலும் என்று எண்ணினார். ஆனால், காவல்துறையின் உளவுப்பிரிவு அவரைத் தடுத்து கலவரம் சற்றுக் குறைந்ததும் போகலாம் என்று அறிவுரை வழங்கியது.‘திரு.முத்துராமலிங்கத்தேவர் இருக்கும் வரை எனக்கு அச்சமில்லை, கலவரத்தைக் குறைக்கவே நான் போக விரும்புகிறேன். கலவரம் முடிந்தபிறகு நான் அங்குச் செல்ல வேண்டிய தேவைஇல்லையே’ என்று கூறித் தம் பயணத்தை உடனே தொடங்கினார். காவல்துறையினர் மறுத்தனர்என்றாலும் தம்பயணத்தைத் தொடர்ந்தார்; பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களைச் சந்தித்தார்.

பண்பாளரான முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் கக்கனை, மிகவும் அன்புடன் வரவேற்று உபசரித்தார். இவர்கள் இருவரும் கலந்துபேசி நல்லமுடிவுக்கு வந்தனர். அதன் வெளிப்பாடாக இருவரும் சேர்ந்து அறிக்கையொன்றை வெளியிட்டனர். அதன் பின்னரே அந்தக் கலவரம் நின்றது. அதற்குப்பின் இராமநாதபுரம் கீழ்த்துவல் என்ற ஊரில் நடந்த இனக்கலவரத்தைக் கட்டுப்படுத்தக் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் காங்கிரஸ் கட்சியின் மீது வெறுப்புப் படர்ந்தது. கூடவே அன்று காவல்துறை அமைச்சராக இருந்த கக்கன் இந்தப் பழியையும் ஏற்க வேண்டியதாயிற்று.

இவ்வாறு தமது நிலையையுணர்ந்து நடந்து கொண்டிருந்தாலும் தமக்குச் சமுதாயம் வழங்கிய கடமைகளை விருப்பு வெறுப்பின்றிச் செய்திருந்தாலும், மறைமுகமான பழி இவர்மீது வளர்ந்திருந்தது என்பதைக் கக்கனின் நெருங்கிய வட்டாரங்கள் ஒப்புக்கொள்கின்றன.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book