28

நல்லவரை மாய்க்கக் கெட்டவர் இருப்பார்

நாடாண்ட மன்னரைக் காடாளப் பிரிப்பார்’

என்ற ‘பாவேந்தரின் வாக்கினைச் சிந்தையில் கொண்டு ஒரு வரலாற்றுச் செய்தியைச் சிந்திக்கலாம்.

கட்சியின் மூத்தத்தலைவர்கள் உட்பட அனைவரும் கக்கனின் உண்மைக்கும் நேர்மைக்கும் மரியாதை செலுத்தினர். குறிப்பாகக் காமராசர் காட்டிய அன்பும் மரியாதையும் அளவிட முடியாதவை. கக்கனைப் பல நிலைகளில் தலைமைப் பொறுப்பில் அமர்த்தி அழகுப்பார்த்தார் என்பது உலகறிந்த உண்மை. அப்படிக் கக்கனை மட்டும் உயர்த்தியது காங்கிரஸ் கட்சியிலிருந்த தாழ்த்தப்பட்ட இனத்தலைவர்களில் பலருக்குப் பிடிக்கவில்லை என்று கக்கனின் சகோதரர், அரசியல் நாகரீகம் கருதிப் பெயர்களைக் குறிப்பிடவில்லை என்றாலும், ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த சித்தூர் இராமலிங்கம் 1952ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். கல்வித் தகுதியில் முதுகலைப்பட்டமும், அரசியல் நடத்தத் தேவையான பொருளாதார வசதியும் பெற்றவர். இவ்வாறு அரசியல்வாதிக்கான முழுத்தகுதியும் வளமையும் பெற்ற ஒருவருக்கு முன்னுரிமை வழங்காமல் நேர்மைக்கு உறவினரான கக்கனுக்கு முன்னுரிமை வழங்கியது பலருக்குப் பிடிக்கவில்லை. இதன் தாக்கம் 1967ஆம் ஆண்டுத் தேர்தலில் வேட்பாளர் தெரிவு செய்யும்போதே வெளிப்படையாகத் தெரிந்ததாகக் கூறுகின்றனர்.

இதற்கு அடையாளமாக ஒன்றை மட்டும் எடுத்துக்காட்டுவது பொருத்தமானதாக இருக்கும். பழனி நாடாளுமன்ற அன்றைய உறுப்பினரும் அவரது தோழர்களும் 1967ஆம் ஆண்டுத் தேர்தலில் கக்கனுக்குத் தேர்தல் பணி செய்வது போல நாடகம் ஆடியதாகக் கூறுகின்றனர்.

தொகுதியின் வேட்பாளர் தேர்தல் அலுவலகம் வந்து, தேர்தல் பணிக்குச் செல்லும் மகிழுந்திற்குக் பெட்ரோல்(Petrol) போட்டுக் கொண்டு போவதும் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டியதும் மகிழுந்தில் கட்டியிருக்கும் காங்கிரஸ் கொடியை அவிழ்த்து விட்டு எதிரணிக் கொடியைக் கட்டிக்கொண்டு செல்வதுமாக இருந்தார்களாம். இதைக் கண்ணுற்ற அவர்தம் தம்பி விஸ்வநாதன், பயணியர் விடுதியில் இருந்த தம் அண்ணனைச் சந்தித்து அவர் கண் முன் நடந்த முறைகேட்டை விளக்கிச் சொன்னாராம்.எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட கக்கன் சினங்கொண்டு ‘அந்த நண்பரையா அப்படிச் சொல்கிறாய், அவர் அப்படிச்செய்யும் ஆள் இல்லை, ஏதாவது புரளியைக் கிளப்பிக் குழப்பத்தை உண்டாக்க எண்ணுகிறாயா? என்று திட்டியதோடு ‘என் தொகுதியை விட்டே போய்விடு’ என்று கூறினாராம். கண்ணீர் கலங்க விடுதியை விட்டு வெளிவந்த விஸ்வநாதன் ‘உப்புக்கல்லை வைரமென்று நினைக்கும் இவரிடம் கூறிப் பயனில்லை’ என்று எண்ணிக் கொண்டு தம் தேர்தல் பணிகளைத் தொடர்ந்தார்.

இப்படி எல்லோரையும் நம்பும் தம் அண்ணனின் செயலை வெகுளித்தனம் என்பதா? நண்பர்களின் மீது அவர் கொண்ட நம்பிக்கையின் ஆழம் என்பதா? இப்படி ஏமாற்று வேலைகளைச் செய்யும் இவர்கள் நண்பர்களா? எதிரிகளா? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் அதிர்ந்து போனதாகக் கூறுகிறார் விஸ்வநாதன்.

சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையைத் தரும் என்பதை

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்

பத்தடுத்த கோடி உறும்’

என்று வள்ளுவர் எத்தனை தொலைநோக்கோடு கூறியுள்ளார்.

வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு’

என்று கூறும் வள்ளுவரின் வரிகள் கக்கனின் உள்ளத்தில் பதியவில்லை போலும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book