27

மொழிப் பிரச்சனையால் உருவான இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒருபுறம். உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் கொடுமை மறுபுறமாக மாநிலம் முழுவதுமே இடர்ப்பாட்டிற்குள் இருந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அண்டை மாநிலங்களிலிருந்து காவல்துறைக் காவலர்களை உதவிக்கு அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உணவுப் பற்றாக்குறையைச் சரிசெய்ய நடுவணரசின் உணவுப் பாதுகாப்புக் கிடங்குகளிலிருந்து கோதுமை வாங்க வேண்டியதாகிவிட்டது.

இந்தச் சூழலில்தான் 1967ஆம் ஆண்டு தேர்தல் வந்தது. அப்போது தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. காங்கிரஸ் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் வெளிப்படையான விமர்சனத்திற்கு உள்ளானது. எந்தக் கோணத்தில் காங்கிரஸ்காரர்களை விமர்சனம் செய்தாலும் அக்கோணத்தில் கக்கன் வந்ததில்லை.

பொருட்குவிப்பு, ஒழுக்கமின்மை, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற கோணங்களில் திராவிட முன்னேற்றக்கழகம் தனது தேர்தல் விமர்சன அம்புகளைத் தொடுத்தது. ஆனால் கக்கனை மட்டும் எவரும், எவ்வகையிலும் விமர்சனம் செய்யவில்லை.

அதே சமயத்தில் பல ஏக்கர் நிலம் கக்கன் பெயரில் பட்டா செய்து கொண்டதாகச் சுவர் விளம்பரங்கள் தமிழகமெங்கும் எழுதப்பட்டிருந்ததாகக் கூறுகிறார்கள். அவை பொய்யான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டன என்பது அன்றைய மக்களுக்குத் தெரியவில்லை என்றாலும், பிற்காலத்தில் அனைவரும் உண்மையை உணர்ந்து கொண்டனர்.

திராவிட முன்னேற்றக்கழகத்துடன் கூட்டுச் சேர்ந்து காங்கிரசை எதிர்த்த இராஜாஜி அவர்கள் கூடக் கக்கனை விமர்சனம் செய்யமுடியாத தூய்மையைக் கொண்டிருந்தார் என்பது வரலாறு கண்ட உண்மை.

ஆட்சியில் ஒரு மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பினர். காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மீதும் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் கட்சியின் கொள்கைகளையும் விளக்கித் திராவிட முன்னேற்றக் கழகம் மக்களை ஈர்த்தது.அப்பணியை மிகச் சிறப்பாகச் செய்தவர்களில் பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் கூடக் கக்கனை மேடைகளில் கடுமையாக விமர்சனம் செய்ததில்லை என்று பல காங்கிரஸ் தலைவர்கள் இன்றும் கூறுகின்றனர்.

1967 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மதுரை மேலூர் தனித்தொகுதியில் கக்கன் போட்டியிட்டார். முதன் முதலாகத் திராவிட முன்னேற்றக்கழகம் கக்கனை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தியது. அதிலும் பல நேரங்களில், குறிப்பாகப் படித்துக் கொண்டிருக்கும் காலங்களில் கக்கனிடம் மிக அன்பாகப் பழகிப் பல உதவிகளைப் பெற்ற ஓ.பி.இராமன் அவர்களே எதிரணி வேட்பாளராக நின்றது பலரும் எதிர்பார்க்காத ஒன்று.

1967ஆம் ஆண்டு பிப்ரவரி பதினான்காம் நாள் நடந்த இப்பொதுத் தேர்தலில் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட ஒ.பி.இராமனைக் காட்டிலும் 21,534 வாக்குகள் குறைவாகப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். இதுவே இவருக்குக் கிடைத்த முதல் அரசியல் தோல்வியாகும். ஆனால், மனம் கலங்கவில்லை. தேர்தல் முடிவு தெரிந்து, கண்கலங்கும் அனைவருக்கும் ஆறுதல் கூறினார். இவரை ஒத்த பல தலைவர்கள் தோல்வியைத் தழுவினர். தாமும் பிறத் தலைவர்களும் தோற்றுப் போனதில் மனம் கலங்காத கக்கன், காமராசர் தோற்றுப் போனார் என்ற செய்தி கிடைத்ததும் மனம் கலங்கிப்போனார்.

தம் தலைவர் காமராசர் அவர் சொந்த ஊரிலேயே தேர்தலில் நின்று தோற்றுப்போனார் என்பதுதான் நம்பமுடியாத உண்மை’ எனக் கக்கன் எண்ணியெண்ணி நொந்துபோனார்.

234 உறுப்பினர் கொண்ட சட்டப் பேரவையில் 49 சட்டப்பேரவை இடங்களே காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்தன. 138 இடங்களை வென்ற திராவிட முன்னேற்றக் கழகம் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் ஆட்சியை அமைத்தது.

கக்கனின் வாழ்வில் அவருக்குக் கிடைத்த இந்த அரசியல் வீழ்ச்சிக்குப் பிறகு வெறுத்துப்போய் பொதுத்தொண்டிலிருந்து விலகி விடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்தம் பொதுத்தொண்டு என்ற பயணம் தளராமல் துவளாமல் தொடர்ந்தது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book